அனுஷா – திகாம்பரம் அணி மோதல் உச்சம்! ஆனுஷாவின் ஆதரவாளர்கள் மூவர் கைது

மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சுயேற்சை குழு வேட்பாளர் அனுஷா சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அக்கரபத்தனை கிளாஸ்கோ பகுதியில் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் மற்றும் சுயேற்சை குழு வேட்பாளர் அனுஷா ஆகியோர் பங்குபற்றிய வெவ்வேறு கூட்டங்கள் ஒரே இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

காலை வேளையில் அனுஷாவின் கூட்டம் நிறைவுபெற்றபோது திகாம்பரம் கலந்து கொள்ளும் கூட்டத்தில் மேடை அலங்கரிப்பில் மலையக மக்கள் முன்னணியின் கொடியை அதன் தோட்டத் தலைவர் காட்சிபடுத்த முயற்சித்த போது அனுஷாவின் ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே குழப்ப நிலை ஏற்பட்டது.

இதனால் அனுஷாவின் ஆதரவாளர்களுக்கும் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதன்போது மலையக மக்கள் முன்னணியின் கிளாஸ்கோ தோட்டத்தின் உப தலைவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து அனுஷாவின் ஆதரவாளர்கள் மூவர் அக்கரபத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நபர் இன்றைய தினம் வைத்தியசாலையை விட்டு வௌியேறிய போது அக்கரபத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் குறிப்பிட்டனர்.

Comments are closed.