கூட்டமைப்புடனான பேச்சுக்கு எதிராக எந்த அழுத்தங்களும் வரவில்லை! அடியோடு மறுக்கின்றார் தினேஷ்.

கொழும்பு: “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சந்திப்பு எந்தவொரு அழுத்தங்களாலும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. அதேபோன்று எந்தவொரு அழுத்தங்களாலும் ஒத்திவைக்கப்படவில்லை.”

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி அழைக்கவில்லை. இரு தரப்பின் வேண்டுகோளின் பிரகாரம் புதிய அரசமைப்பு தொடர்பில் ஏற்கனவே நடத்தப்படவிருந்த பேச்சு, கொரோனாத் தொற்று நிலைமையால் பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பேச்சு நடைபெறவிருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் பேச்சு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

தெற்கில் எழுந்த எதிர்ப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சை ஜனாதிபதி இரத்துச் செய்துள்ளார் என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை அடியோடு மறுக்கின்றோம்.

தமிழ், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி தலைமையிலான அரசு பேச்சு நடத்தத் தயாராகவுள்ளது.

நாட்டில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளை அரசு முன்னெடுக்கும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.