நடிகை ரோகிணியும் கிஷோர் மீது புகார் : கிஷோர் கே சாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சென்னை: யூடியூபர் கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இன்னும் 1 வருடத்திற்கு ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கிஷோர் கே சாமி.

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் திமுக ஐடி விங்க் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில், ஜூன் மாதம் 17ம் தேதி கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கிஷோர் சாமி சிறை சென்றதும், அவரால் சமூக வலைத்தளங்களில் பாதிப்புக்கு உள்ளான பலரும் வரிசையாக புகார்களை அளிக்கத் தொடங்கியுள்ளனர். இதன்பேரில் இதுவரை கிஷோர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3வது புகாரின்பேரிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில்தான், சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் கிஷோர் சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான நகல், சிறைத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.

சினிமா நடிகை ரோகிணியும் கிஷோர் மீது புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிஷோரால் பாதிக்கப்பட்ட பலரும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

பெண் பத்திரிகையாளர்கள் சிலர் கிஷோர் சாமி மீது ஏற்கனவே வழங்கிய புகார்களுடன் இப்போது வழங்கியுள்ள புகார்களை சேர்த்து பல காவல் நிலையங்களில் விசாரணை ஆரம்பித்துள்ளது. புகார்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில்தான், கிஷோர் சாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சங்கர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க கூடிய சூழ்நிலையில் அது தொடர்பாக அவர் தாம்பரம் நீதிமன்றம் ஜாமீன் கோரியிருந்தார். ஆனால் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இப்போது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது என்பதால் 1 ஆண்டு காலம், கிஷோருக்கு ஜாமீன் கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்கிறார்கள் சட்டவல்லுனர்கள். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்காவது ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள்.

இதுவரை கிஷோர் கே சாமி மீது மூன்று வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில் இப்போது குண்டாஸ் வழக்கும் பாய்ந்துள்ளது இணைய வெளிகளில் அவதூறாகப் பேசுவோருக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை.

Leave A Reply

Your email address will not be published.