அனைத்து அரசியல் கைதிகளையும் விரைவில் விடுதலை செய்யுங்கள்! : புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறிக்கை

“அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பாடுபடுகின்றவர்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

– இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மத்திய அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி. கா. செந்திவேலால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“எமது கட்சியானது ஏனைய அரசியல் கட்சிகள், அமைப்புகளுடன் இணைந்தும் தனியாகவும் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரிப் பல்வேறு வெகுஜனப் போராட்டங்களையும், சுவரொட்டி மற்றும் துண்டுப்பிரசுர இயக்கத்தையும் முன்னெடுத்து வந்துள்ளது. அவ்வேளைகளில் எல்லாம் அரசியல் கைதிகள் என யாரும் கிடையாது என்று விதண்டாவாதம் செய்து வந்த ஆளும் பேரினவாத உயர் வர்க்க ஆட்சியாளர்கள், இப்போது தமது உள்நோக்கம் கருதி, பதினாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளதாகத் தம்பட்டம் அடிப்பது வேடிக்கை தருவதாகும்.

அரசியல் கைதிகளை விடுவிப்பதாகக் கூறி அதன் மறைவில், தமக்குத் தேவையானவர் என்பதற்காக, கொலைக் குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவரான துமிந்த சில்வாவையும் ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார். இதுபோன்று ஏற்கனவே கொலைக்கான தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை இதே ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலம் சிறைவாழ்வை அனுபவித்து வருகின்ற பல அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டிய நிலையில், தமது தண்டனைக் காலம் நிறைவடைந்து சட்டப்படி விடுதலை பெற இருந்தவர்களான சில தமிழ் அரசியல் கைதிகளையும் இப் பொதுமன்னிப்பில் விடுவித்து, இந்த அரசு நல்லதோர் அரசியல் நாடகத்தை நடத்திள்ளமை, பெரும் எதிர்பார்ப்பில் இருந்த அரசியல் கைதிகளின் உறவுகளுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இதனை அரசியல் கைதிகளின் நீண்டகாலப் பிரச்சினைக்குரிய தீர்வாக எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, நீண்ட காலமாக விசாரணை இன்றியும், விசாரணையிலும், தீர்ப்பளிக்கபட்டும் சிறைகளில் இருந்துவரும் அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனை இன்றி விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனிசக் கட்சியின் வலியுறுத்தலாகும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.