கொரோனா நோயாளிகள் 5 பேருக்கு மலக்குடல் ரத்தப்போக்கு: டெல்லியில் ஒரு நோயாளி மரணம்

கொரோனா வைரஸ் 2ம் அலை அடித்து ஓய்ந்து வரும் நிலையில் டெல்லியில் 5 கோவிட் நோயாளிகளுக்கு மலக்குடல் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது, இதில் ஒருவர் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 5 நோயாளிகளும் கோவிட் பாதித்து 20-30 நாட்களுக்குப் பிறகு மலக்குடல் கசிவு ஏற்பட்டு டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதாவது சாதாரண, இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளவர்களுக்கு மலக்குடல் ரத்தக் கசிவு நோய் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகான கேன்சர் நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் போன்ற எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மலக்குடல் ரத்தப் போக்கு இருப்பது அறியப்பட்டதே. ஆனால் முதல் முறையாக நல்ல நோய் எதிர்பாற்றல் இருக்கும் கோவிட் நோயாளிகளுக்கு 20-30 நாட்களுக்குப் பிறகு இது ஏற்படுவது அரிதானது என்பதோடு முதல் முறை என்கின்றனர், மருத்துவர்கள்.

லிவர் கேஸ்ட்ரோ எண்டராலஜி துறையின் பேராசிரியர் அனில் அரோரா, இந்த 5 நோயாளிகளின் ரத்தக் கசிவு நோயை உறுதி செய்தார்.

இந்த நோயாளிகளுக்கு அடி வயிறு வலியும் மலம் கழிக்கும் போது ரத்தப் போக்கும் இருந்துள்ளது. கொரோனா தொற்றும் அதற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளும் அதாவது ஸ்டீராய்ட் போன்றவையே நோயாளிகளின் உடல் எதிர்ப்புச் சக்தியை அமுக்கி விடும். இதனால் வேறு பல நோய்கள் தோன்றுகின்றன, என்று கங்காராம் மருத்துவமனை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கிறது.

இந்த நோய்க்கூறு இந்திய மக்கள் தொகையில் 80% பேருக்கு இருக்கிறது. ஆனால் பொதுவாக அறிகுறிகள் இல்லாமல் இருக்கும்.

ஆனா ரத்தப்போக்குடன் வந்த இந்த 5 நோயாளிகளுக்கும் டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் லிம்போசைட் எனப்படும் நிணநீர் உயிரணுக்கள் குறைவாக இருந்தது, லிம்போசைட்கள் இயல்பாக 20-40% வரை இருக்க வேண்டும், ஆனால் இந்த 5 நோயாளிகளுக்கும் இதன் எண்ணிக்கை 6-10% தான் இருந்தது.

இந்த ஐவரில் 2 பேருக்கு மலம் கழிக்கும் போது கடுமையாக ரத்தம் வெளியேற உயிர் காப்பு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. அதாவது பெருங்குடலின் வலது பகுதியை அகற்ற வேண்டியதாயிற்று, ஆனால் இன்னொருவருக்கு கடும் ரத்தப் போக்கு மற்றும் கோவிட் 19 நுரையீரல் நோய் இருந்ததினால் மரணம் ஏற்பட்டது.

மற்ற 3 பேருக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்தான ganciclovir வேலை செய்ய பிழைத்தனர், என்கிறார் டாக்டர் அரோரா.

வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் வரும் தகவல்களின் அடிப்படையில் சுய மருத்துவம் பார்த்துக் கொண்டு நோயை முற்ற விட வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கோவிட் நோயாளிகள் சிலர் குணமடைந்த பிறகும் வைட்டமின் டி, வைட்டமின் சி ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வது ஓவர் டோஸாகி தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.