தமிழீழ போராட்ட களமும் , கோட்டாவின் யுத்தமும் : சீ.ஏ. சந்திரபிரேம உடன் உரையாடல் : ஜீவன் & கமகே

(சுவிட்சர்லாந்தின் KanalK வானொலிச் சேவையின் சிங்கள ஒலிபரப்புக்கு  Gota’s War எனும் “கோட்டாவின் யுத்தம் ” என்ற நூலின் ஆசிரியர் சீ.ஏ. சந்திரபிரேம அவர்களால் வழங்கப்பட்ட நேர்காணலின் முக்கிய பகுதிகள் இலங்கையிலிருந்து வெளிவரும் “லங்காதீப”   2012. 07.05ம் திகதி ஞாயிறு பத்திரிகையில் வெளிவந்தது. அதன் தமிழாக்கம்…… )

அரசியல் விமர்சகர் என்ற ரீதியிலேயே நீங்கள் புகழ் பெற்றிருக்கின்றீர்கள். எனினும் நீங்கள் எழுதியுள்ள கோட்டாவின் யுத்தம் என்ற நூலை பார்க்கும் பலரும் உங்களை ஓர் யுத்த விமர்சகராகவே அடையாளம் காண்பர். நீங்கள் இப் புத்தகத்தில் விபரித்தது யுத்தம் பற்றியா ? அல்லது யுத்தத்திற்கான அரசியல் காரணிகள் பற்றியா ? அல்லது அனைத்து விடயங்களையுமா?

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இலங்கையில் நடந்து முடிந்த யுத்தம் பற்றி எழுதுவதற்கு யுத்த செய்தியாளர் ஒருவரினால் மட்டுமே முடியும் என நான் நினைக்கவில்லை. தற்போது யுத்தம் முடிவுறுத்தப்பட்டிருப்பதனால் சகல விடயங்கள் பற்றியும் எழுத வேண்டும். அதாவது அரசியல் காரணிகளில் ஆரம்பித்து பயங்கரவாதம் வரையில் வியாபித்து பின்னர் அது சிவில் யுத்தமாக பரிணமித்தமை குறித்தும் விபரிக்க வேண்டி வந்தது. மேலும் யுத்தம் பற்றி எழுதும் போது எதனால் இவ்வாறான இந் நிலை ஏற்பட்டது என்பதனையும் கவனத்திற் கொள்ள வேண்டும் . அவ்வாறு கவனம் செலுத்தாமல் எழுதப்படும் ஆக்கம் பூரணமான ஒரு ஆக்கமாகாது.

உங்களது கோதபாயவின் யுத்தம் என்ற நூலில் அரசியல் தொடர்பான விடயங்கள் 60 வீதமும், யுத்தம் தொடர்பான விடயங்கள் 40 வீதமும் அடங்கியுள்ளதே ?

இல்லை இல்லை. 1956 முதல் 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த காலம் வரையிலான யுத்தம் தொடர்பான சகல விடயங்களும் 60 வீதம் உள்ளடக்கப்பட்டுள்ளன. 1970ம் ஆண்டில் சிவகுமாரன் என்ற தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதி யாழ்ப்பாணத்தில் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் சோமவீர சந்திரசிறீயின் மோட்டார் காருக்கு குண்டு வைத்தமை முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியமை வரையில் 60 வீதமான தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஏனைய 40 வீதமும் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பானதாகும்.

நீங்கள் குறிப்பிடும் சோமவீர சந்திரசிறீயின் வாகனத்தில் குண்டு பொருத்திய சம்பவம் குறித்தும், யார் அதனைச் செய்தார்கள் என்பது பற்றியும் பலருக்கு தெரியாது. அந்தக் காலத்தில் இது தொடர்பான விடயம் அவ்வளவு பிரபல்யமாகப் பேசப்படவில்லையே?

இந்தக் குண்டுத் தாக்குதல் அந்தக் காலத்தில் அனைவருக்கும் சற்று வித்தியாசமான ஒரு அதிர்ச்சியாக அமைந்திருந்தது. அத் தகவல் பகிரங்கமாக தெரிந்தால் வரும் தாக்கத்தை தவிர்க்கும் நோக்கோடு அப்போதைய அரசாங்கம் அச் சம்பவம் குறித்த தகவல்களை மூடிமறைத்தது. இப்படியான ஒரு சம்பவம் இடம்பெற்றது என்பது பற்றிய தகவலை தொகுதி வாக்காளர்களுக்கு கூட சொல்ல வேண்டாம் என அப்போதைய அரசாங்கம் சோமவீர சந்திரசிறீயைத் தடுத்தது.

1970ம் ஆண்டு ஜூலை மாதம் 28ம் திகதி தினமின (லேக் கவுஸ்)  சிங்கள பத்திரிகையில் ஒரு சிறு சம்பவமாக இச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில்  சோமவீர சந்திரசிறி ஹெலிகொப்டரில் கொழும்புக்கு வந்தார் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. குண்டுத் தாக்குதல் பற்றி எதுவும் செய்தி குறிப்பிடப்படவில்லை. இந்தக் குண்டுத் தாக்குதலை சிவகுமாரன்  திட்டமிட்டார்.

இந்தக் குண்டு எவ்வாறு பொருத்தப்பட்டது, அதிலிருந்து சோமவீர சந்திரசிறீ எவ்வாறு தப்பித்தார்?

சோமவீர சந்திரசிறீ , யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு திரும்பும் போது வெடிக்கும் வகையில் குண்டொன்று அவர் பயணம் செய்யவிருந்த மோட்டார் காரில் பொருத்தப்பட்டிருந்தது.

சோமவீர சந்திரசிறீ யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் போது ஹரிசன குலத்தைச் சேர்ந்த மக்கள் மகஜர் ஒன்றை கையளிப்பதற்காக வழியில் குழுமியிருந்தனர். சந்திரசிறி மோட்டார் காரை நிறுத்தி மக்களை சந்தித்துப் பேச அவர் இறங்கிச் சென்ற போதே மோட்டார் காரிலிருந்த குண்டு வெடித்தது. அவர் மக்களை சந்திக்க காரிலிருந்து இறங்காமல் இருந்திருந்தால் நிச்சயம் கொல்லப்பட்டிருப்பார்.

இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு சிவகுமாரன் தொடர்புபட்டார் என்பதனை எந்தக் காரணிகளின் அடிப்படையில் நீங்கள் தெரிவிக்கின்றீர்கள்?

இதுபற்றிய தகவல்களை வரதராஜபெருமாள் நன்கு அறிவார். சிவகுமாரனும் வரதராஜபெருமாளும்  ஒன்றாக கல்வி கற்றும் உள்ளனர். வரதராஜ பெருமாளே எனக்கு இதனைக் கூறினார். சோமவீர சந்திரசிறீயின் மகளிடமும் நான் இது குறித்து கேட்டேன். அவர்கள் அதனை உறுதிப்படுத்தினர். சம்பவம் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என அரசாங்கம் சோமவீர சந்திரசிறீயின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பணிப்புரை விடுத்திருந்தது என அவர்கள் தெரிவித்தனர்.

1976ம் ஆண்டு அல்ரட் துரையப்பா கொலை செய்யப்பட்டது முதல் பயங்கரவாதம் ஆரம்பிக்கப்பட்டதாகவே பலர் கருதுகின்றனர். எனினும் நீங்கள் அதனைவிடவும் முன்னரே பயங்கரவாதம் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றீர்களே?

நிச்சயமாக, 70ல் சோமவீர சந்திரசிறீ மீது குண்டுத் தாக்குதல் நடத் முயற்சிக்கப்பட்டது. 1972ம் ஆண்டில் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய தியாகராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சிவகுமாரனின் பின்னர் ,  பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட சத்தியசீலன் மற்றும் அவரது நண்பர் ஒருவருமே இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

எனினும், இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் அவ்வளவு பிரபல்யம் அடையவில்லை அல்லவா?

ஏன் இல்லை, தியாகராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் டெய்லி நியூஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் புகைப்படத்துடன் பிரசரிக்கப்பட்டிருந்தது. சுடப்பட்ட தியாகராஜன் மற்றும் துப்பாக்கிச் சன்னம் பதித்த சுவர் ஆகியவற்றின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

சோமவீர சந்திரசிறீ தொடர்பான சம்பவம் பத்திரிகையில் பிரசுரிக்கப்படாத போதிலும், செவி வழியாக ஓரளவு தகவல்கள் வெளியாகியிருந்தன. எவ்வாறெனினும், பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றில் உயிரிழந்த முதலாவது நபர் அல்பிரட் துரையப்பாவாகும். எனினும் பயங்கரவாதத்தின் ஆரம்பம் அல்பிரட் துரையப்பா அல்ல.

இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களை நடாத்தத் தூண்டிய ஏதுக்கள் எவை?

இலங்கை தமிழரசு க் கட்சி, சில கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வெளியிட்டது. தமிழர் தேசம் பற்றிய கொள்கைகள் பிரச்சாரம் செய்யப்பட்டன. இது தமிழ் சமூகத்தின் மத்தியில் துரித கதியில் பிரபல்யம் அடைந்தது.

1965ம் ஆண்டில் அப்போதிருந்த பெடரல் கட்சி, ஆட்சியிலிருந்த டட்லி சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததாக, தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.

இவ்வாறு ஆளும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததனால் போராட்டத்தை காட்டிக் கொடுத்து விட்டதாகக் கருதிய தமிழ் இளைஞர்கள் அமைப்புக்களை உருவாக்கத் தொடங்கினர்.

1969ம் ஆண்டின் இறுதியளவில் தமிழ் இளைஞர்கள் இவ்வாறான அமைப்புக்களை உருவாக்கும் பணிகளைஆரம்பித்தனர். வடக்கு – கிழக்கு வாழ் இளைஞர் சமூகம் தனி இராச்சிய கோட்பாட்டின் கீழே வளர்ந்து வந்தது. இதிலிருந்து மீள்வதற்கு பிரபாகரனுக்கோ அல்லது வரதராஜ பெருமாளுக்கோ முடியவில்லை.

தனிநாட்டுக் கோரிக்கையை எவ்வாறு தமிழ்த் தலைவர்கள் இளைஞர்கள் தலையில் போட்டனர்?

தமிழகத்திலிருந்த மூத்த அரசியல்வாதிகள் தனிநாட்டுக் கொள்கையை பின்பற்றினர். இந்திய வரலாற்றை உற்று நோக்கினால் தென் இந்தியாவில் பிரிவினைவாதம் காணப்பட்டமை புலப்படும். தென் இந்தியாவை தனியாக பிரித்து தனியான காலணி நாடாக ஆட்சி செய்யப்பட வேண்டுமென பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

அந்தக் கோரிக்கையில் Government of Hindustan, Government of Tamil Nadu எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பிரிவினைவாதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு 1949ம் ஆண்டு தென் இந்தியாவில் திமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கு சமாந்திரமாக 1949ம் ஆண்டில் தனி இராச்சிய கோட்பாட்டை வலியுறுத்தும் தமிழரசுக்கட்சி இங்கே உருவானது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சமாந்திரமாக பிரிவினைவாதக் கோட்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவே தோன்றுகின்றது.

பிரிவினைவாத கோட்பாடுகளை பின்பற்றிய கட்சியாக பெடரல் கட்சியை குறிப்பிட முடியும். 1965ம் ஆண்டில் ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் பெடரல் கட்சி கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதனைத் தமிழ் இளைஞர்கள் ஒர் காட்டிக் கொடுக்கும்செயலாகவே நோக்கினர். பின்னர் இந்த தமிழ் இளைஞர்கள் அணி திரளத் தொடங்கினர். மாணவர்களும் அமைப்பில் இணைக்கப்பட்டனர்.

1970 ல் ஆட்சி செய்த அரசாங்கம் இழைத்த வரலாற்று தவறினால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மொழியின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனுமதியினை வழங்குவது என்ற கொள்கையை அரசாங்கம் அமுல்படுத்தியது. இதனால் தமிழ் மொழி மூல மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக இவ் இளைஞர்களால் மாணவர்களை இலகுவில் தமது அமைப்பில் இணைத்துக் கொள்ள முடிந்தது.

இந்தத் தவறை விளங்கிக் கொள்வதற்கு அப்போதைய அரசாங்கம் ஐந்து ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. பின்னர் மாவட்ட நிலை அடிப்படையிலான முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரலாற்றுத் தவறு பற்றி அறிந்து கொள்வது சிங்கள மற்றும் தமிழர்களுக்கு முக்கியமானது.

ஏன் இவ்வாறு நடந்தது? நாட்டின் சிங்கள, தமிழ் அரசியல் தலைவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டார்களா? இவ்வாறு பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டிருந்தால் பிரச்சினை இவ்வளவு தூரத்திற்கு சென்றிருக்காதல்லவா? என்ற கேள்விகளை நாம் எம்மிடமே கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த யுத்தத்தை வென்ற படைவீரர்களுடன் நான் பேசினேன். யுத்த வெற்றி குறித்து பெருமிதத்துடன் அவர்கள் பேசினார்கள். எனினும், மீண்டும் இவ்வாறான ஓர் யுத்தம் இடம்பெறவும் கூடாது, இப்படியானதொரு வெற்றியும் வேண்டாம் என்றே அவர்கள் அனைவரும் தெரிவித்தனர்.

தமிழ் தலைவர்களினால் உருவாக்கப்பட்ட தனி இராச்சிய கோரிக்கையை பிரபாகரன் இறுதி வரை எடுத்துச் சென்றார், அதற்காக அவருக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் எவை?

உலகில் வாழ்ந்த பயங்கரவாதிகளில் பிரபாகரன் மிகவும் விசித்திரமான ஓர பயங்கரவாதி. தம்மையும் தமது அமைப்பையும் தவிர்ந்த ஏனைய எந்தவொரு அமைப்பு, இனம், குலம், மதம் அல்லது நாட்டுடன் பிரபாகரன் நட்பு பாராட்டவில்லை. தனியாகவே தங்களது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக மிகவும் கொடூரமான முறையில் செயற்பட்ட நபராக பிரபாகரனை நோக்குகின்றேன். அவருக்கு இந்தக் கொள்கைகள் எங்கிருந்து கிடைத்தன. தமிழ் தலைவர்களிடமிருந்தே அந்தக் கொள்கைகள் அவருக்குக் கிடைத்தன.

இறுதியில் தமக்கு ஆலோசனைகளை வழங்கிய அவரது தலைவர்களையும் பிரபாகரன் கொலை செய்தார். தமக்கு எதிராக செயற்படுவார்கள் எனக் கருதிய அனைவரையும் பிரபாகரன் கொலை செய்தார்.

பிரபாகரனுடன் சமகாலத்தில் போராடிய ஏனைய ஆயுதக் குழுத் தலைவர்களை எவ்வாறு கொலை செய்தார்?

கடந்த 25 ஆண்டுகளாக பிரபாகரன் மற்றும் உமா மகேஸ்வரனைத் தவிர ஏனைய ஆயுதக் குழுத் தலைவர்களுடன் நான் பழக்கியிருக்கின்றேன். எனக்கு ஒரு விடயம் தோன்றியது, அது பற்றி அவர்களிடம் கூறியும் இருக்கின்றேன். தமிழ் ஆயுதக் குழுக்களைக் கொண்டே பிரபகாரனைத் தாக்க வேண்டுமென நான் அப்போது குறிப்பிட்டிருந்தேன். நீங்களாகவே பிரபாரனைக் கட்டுப்படுத்த வேண்டுமென நான் குறிப்பிட்டிருந்தேன். எனினும் துரதிஸ்டவசமாக பிரபாகரனை கட்டுப்படுத்தும் தைரியம் எவருக்கும் இருக்கவில்லை. இதுவே பிரச்சினையாக காணப்பட்டது. இறுதியில் பிரபாகரனே ஏனைய தமிழ் ஆயுதக் குழுத் தலைவர்களை கொலை செய்தார்.

உண்மையில் ரெலோ அமைப்பின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்ட போது நான் இளைஞனாக இருந்தேன். அதன் பின்னர் நான் அவரைப் பற்றி தேடிப்பார்க்கவில்லை. இந்த நூலை ஏழுதுவதற்கு நான் அவர் பற்றிய தகவல்களை திரட்டினேன். ரம்போ போன்ற ஒருவர் என்ற காரணத்தினால் அவர் பற்றிய தகவல்களை திரட்டினேன்.

நீர்வேலி வங்கிக் கொள்ளையின் போது, பணம் கொண்டு செல்லப்படும் வாகனத்தை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் பொறுப்பு பிரபாகரனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வீதியின் நடுவில் பாய்ந்து வாகனத்தின் மீது பிரபாகரன் சுட வேண்டும். பிரபாகரன் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும், அவர் கையிலிருந்த துப்பாக்கி இயங்கவில்லை.

அப்போது அருகில் இருந்து இதைக் கண்ணுற்ற ஶ்ரீ சபாரட்ணமே உடனடியாக செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி பிரபாகரனைக் காப்பாற்றினார். இதன் காரணமாகவே நான் அவரை ரம்போ என நினைக்கின்றேன்.

இப் புத்தகத்துக்கான தகவல்களை திரட்டும் போது ஶ்ரீ சபாரட்னத்தின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரை சந்தித்தேன். எனினும் சபாரட்ணம் துப்பாக்கி ஏந்திய நிலையில் நான் எப்போதும் பார்த்ததில்லை என அவரது மெய்ப்பாதுகாவலர் சொன்னார். நான் ஆச்சரியமடைந்தேன்.இது தொடர்பில் வரதராஜா பெருமாளிடம்கேட்டேன், அவரும் அதனையேக் கூறினார். இதுவே பிரச்சினையாக அமைந்தது. 

பிரபாகரனுடன் நேருக்கு நேர் போராடக் கூடிய ஆற்றல் உடையவர்கள் இருக்கவில்லை என பலர் கருதுகிறார்கள். அவ்வாறானவர்கள் இருக்கவில்லை என்றும் குறிப்பிட முடியாது. என்னுடைய நூலில் தாஸ் என்ற நபர் பற்றிய தகவல்களைக் குறிப்பிடப்பட்டுள்ளேன். தாஸ் பிரபாகரனைப் போன்றே மிகவும் துடிப்பான, தைரியமான நபராகும். 

1985ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தின் நெல்லியடி பிரதேசத்தை இந்த தாஸ் என்ற நபரின் தலைமையிலான டெலோ அமைப்பினர் கட்டுப்படுத்தி வந்தனர். நெல்லியடி சோதனைச் சாவடிக்குள் செல்ல முற்பட்ட புலிகளின் துணைத் தலைவர் மாத்தையாவை, தடுத்து தாஸ் தலையில் குட்டியுள்ளார். அனுமதியின்றி எங்கள் பிரதேசத்திற்குள் பிரவேசிக்காதே என தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு புலிகளை குட்டக் கூடிய நபர்களும் இருந்தார்கள்.

துரதிஸ்டவசமாக உள் முரண்பாடு காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலை சிற்றுண்டிச் சாலையில் வைத்து தாஸை சக உறுப்பினர் ஒருவர் (பொபி) சுட்டுக் கொலை செய்தார். பிரபாகரனின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த தாஸ் போன்ற இளைஞர்கள் ஒட்டு மொத்த சமூகத்திலும் இல்லாமையே மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். அவ்வாறு இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை நந்திக்கடலில் முடிந்திருக்காது.

உமா மகேஸ்வரன், பிரபாகரனுக்கு அச்சுறுத்தலாக அமையவில்லையா?

நிச்சயமாக, அது பற்றியும் எனது நூலில் குறிப்பிட்டுள்ளேன். 1981ம் ஆண்டில யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட மிகவும் வலுவான ஆயுதக் குழுக்களாக புளொட் மற்றும் டெலோ ஆகிய அமைப்புக்களை குறிப்பிட முடியும்.

இவர்கள் அரச நிறுவனங்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியிருந்தனர். புளொட் அமைப்பே முதன் முதலில் பொலிஸ் நிலையமொன்றை தாக்கியிருந்தது. அந்தக் காலத்தில் அவ்வாறான தாக்குதல்களை நடத்துவதனை புலிகள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. பாரியளவிலான வங்கிக் கொள்ளைகளில் புளொட் மற்றும் டெலோ ஆகிய அமைப்புக்கள் ஈடுபட்டன.

யாழ்ப்பாணமாவட்ட அபிவிருத்தி வாக்கெடுப்பை புளொட் அமைப்பே சீர்குலைத்தது.

ரெலோ அமைப்பே யாழ்தேவி ரயில் மீது குண்டு தாக்குதல் நடத்தியது. இந்தக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தூர நின்று வேடிக்கைப் பார்த்தனர். இந்த நடவடிக்கைகள்  சற்று தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் புளொட் அமைப்பும், ரொலோ அமைப்புமே வலுவான ஆயுதக் குழுக்களாக திகழ்ந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தக் குழுக்களின் அருகாமையில் செல்லக் கூடிய தகுதியற்றே இருந்தனர்.

இவ்வாறு ஒதுங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் வலுவான ஆயுதக் குழுவாக எவ்வாறு பரிணமித்தனர்?

திட்டமிட்ட படுகொலைச் சம்பவங்களின் மூலமாக புலிகள் தமது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டனர்.

1981களில் வலுவான ஆதிக்கத்தைக் கொண்டிருந்த புளொட் அமைப்பை புலிகள் எவ்வாறு அழித்தனர்?

புளொட் அமைப்பின் பிரதி தலைவரான சுந்தரம் என்பவரை படுகொலை செய்ததன் மூலமாகும். பிரபாகரனின் மிக நெருங்கிய சகாவான டக்ளஸ் அந்தனி எனப்படும் சீலன் என்பவரே இந்த கொலையைச் செய்தார். சுந்தரத்தின் மறைவின் பின்னர் புளொட் அமைப்பின் ஆதிக்கம் கிரமமாக வீழ்ச்சியடைந்தது.

டெலோ அமைப்பு எவ்வாறு வீழ்ச்சியடைந்தது?

யாழ்தேவி ரயில் மீதான தாக்குதல், சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீதா தாக்குதல் என மிகவும் வெற்றிகரமான தாக்குதல்களை முன்னெடுத்த அமைப்பின் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் படுகொலைச் செய்யப்பட்டார். இவ்வாறு ஏனைய ஆயுதக் குழுக்கள் இல்லாதொழிக்கப்பட்டு பிரபாகரன் எதேச்சாதிகாரத்தைக் கைப்பற்றினார்.

 

1983ம் ஆண்டில் இராணுவத்தினர் மீது நடத்திய முதல் தாக்குதலுடன் ஆயுதக் குழுவென்ற அங்கீகாரத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுக் கொண்டனர் என்றால் அது சரியா?

இந்தத் தாக்குதல் இராணுவத்தினர் மீது பழிவாங்கும் நோக்கிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். பிரபாகரனின் நெருங்கிய சகாவான டக்ளஸ் அந்தனி எனப்படும் சீலன் மீது இராணுவத்தினர் தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ததனைத் தொடர்ந்தே, இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் காலச் சூழ்நிலையில் இந்தத் தாக்குதல் பெரும் பிரச்சினையாக உருவானது. இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் தெற்கில் கறுப்பு ஜூலை வன்முறைகள் இடம்பெற்றன.

இதன் காரணமாகவா தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் குரல் கொடுக்க முடிந்தது. கறுப்பு ஜூலை தாக்குதல்களுக்கு முன்னதாக, புலிகளைச் சாராத ஈழ ஆதரவு அமைப்புக்கள் உலகின் பல நாடுகளில் செயற்பட்டு வந்தன.

அதன் பிரதிபலனாக 1979ம் ஆண்டு அமெரிக்காவின் மெசேசூட்சேஸ் மாநிலத்தின் ஆளுனர் இலங்கையை ஈழத் தேசமாக பிரகடனம் செய்துள்ளார். தமிழ் அரசியல் தலைவர்கள் தனி இராச்சியமொன்றை அமைக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டரிடம், ஆளுனர் கோரியிருந்தார்.

83இன் பின்னர் ஈழக் கோரிக்கைக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டது.

83க்கு முன்னதாகவே ஈழக்கோரிக்கை தொடர்பான கருத்துக்கள் நிலவி வந்தன. புலிகளுக்கு சவால் விடுக்கக் கூடிய நபர்கள் இல்லாத காரணத்தினால் பிரபாகரன் முன்னேறினார் என நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஏன் தெற்கில் உருவான அரசாங்கங்களினால் பிரபாகரனைக் கட்டுப்படுத்த முடியவில்லை?

அது ஓர் பிரச்சினையாக அமைந்தது. அதில் பலவீனம் ஒன்றிருக்கின்றது. அத தொடர்பிலும் எனது நூலில் விபரிக்கப்பட்டுள்ளது. 1982ம் ஆண்டில் இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி தமிழக மாநிலம், இலங்கைத் தமிழ் ஆயுதக் குழுக்களை பயன்படுத்தின. ஆயுதக் குழுக்கள் இரகசியமாக தமிழகத்திற்கு சென்று திரும்பின, பயிற்சி பெற்றுக் கொண்டன.

1983ம் ஆண்டு பாண்டிபசாரில் பிரபாகரன், உமாமகேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, றோ அமைப்பு புலிகளுடன் பகிரங்கமாகவே தொடர்புகளைப் பேணியது.

அன்றைய ஆயுதக் குழு உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தி விட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்றனர். தப்பிச் சென்றவர்களுக்கு தமிழக அரசாங்கம் அடைக்கலம் வழங்கியது. இலங்கையிலேயே தங்கியிருந்தால் நிலைமை வேறுவிதமாக மாறியிருக்கும்.

இலங்கையைச் சுற்றிலும் கடல் காணப்படுகின்றது, அவ்வாறான ஓர் பின்னணியில் ஏன் கடற்படையினரால் புலிகளின் தமிழக பயணங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை?

அதற்கு அப்போதைய தொழில்நுட்ப பிரச்சினையே காரணம்.

இந்தத் தொழிநுட்பப் பிரச்சினைகள் எவை?

தமிழீழ விடுதலைப் புலிகள் அதி வேகப் படகுகளைப் பயன்படுத்தினர். அந்தக் காலப்பகுதியில் அதிவேகப் படகுகளைக் கட்படுத்தும் ஆற்றல் இலங்கைக் கடற்படையினருக்கு இருக்கவில்லை. ரோந்துப் பணிகளில் மட்டுமே கடற்படையினர் ஈடுபட்டனர். பிற்காலத்தில்தான் கடற்படையினர் டோரா போன்ற அதி நவீன படகுகளைப் பயன்படுத்தினர்.

அமைதி காக்கும் படையினர் என்ற பெயரில் இலங்கையில் தங்கியிருந்த இந்திய படையினர் பற்றி உங்களது நூலில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? அது தொடர்பான உங்களது விளக்கம் என்ன?

தனிப்பட்ட ரீதியில் இதனை நான் ஓர் வரலாற்றுத் தவறாகவே கருதுகின்றேன். இந்தியப் படையினர் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு இடமளித்திருந்தால் 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும். ஏனெனில் குறித்த காலப்பகுதியில் இந்தியாவிற்கும் குறித்த விஷக் கிருமிகளை இல்லாதொழிக்க வேண்டிய தேவை காணப்பட்டது. எனினும் அது அவ்வாறு நடைபெறவில்லை. இதனை வரலாற்றுத் தவறாகவே நோக்க வேண்டும்.

1994ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க யுத்தத்தை முடிவுறுத்தி, நாட்டுக்கு சமாதானத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்திருந்தார். எனினும் அவரால் யுத்தத்தை முடிவுறுத்த முடியவில்லை. ஏன் அவ்வாறு நடந்தது?

ஆரம்ப காலங்களில் தைரியமான தீர்மானங்களை எடுத்து யுத்தத்தை முன்னெடுத்தார். உதாரணமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதனைக் குறிப்பிடலாம். எனினும் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அனைத்து யுத்த முன்நகர்வுகளும் தோல்வியிலேயே முடிவுற்றன.

அதற்கான காரணம் என்ன?

யத்தம் முன்னெடுக்கப்பட்ட காலத்தில், யுத்தத்திற்கு எதிராக அரசாங்கத்திற்குள் யுத்தமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஒரு புறத்தில் சமாதானத்தைக் காண்பித்துக் கொண்டு, மற்றுமொரு புறத்தில் யுத்தத்தை முன்னெடுக்க முடியாது. குறிப்பாக எங்கு செல்கின்றோம் என்ற இலக்கு இல்லாமை சந்திரிகா அரசிடம் பலவீனமாக இருந்தது.

அரசாங்கத்திற்குள் யுத்தத்திற்கு எதிராக நடைபெற்றதாக நீங்கள் கருதும் யுத்தம் என்ன?

சமாதானத்துக்கான வெள்ளைத் தாமரை திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனுருத்த ரத்வத்தே யுத்தத்தை வழி நடத்திய தலைவராகத் திகழ்ந்தார். வெள்ளைத் தாமரை திட்டத்தினால் படைவீரர்களை சேர்க்கும் நடவடிக்கை தடைப்பட்டதாக நான் அனுருத்த ரத்வத்தேயிடம் கூறினேன்.

– ஜீவன்

கோட்டாஸ் வோர் ஆசிரியர் சந்திரபிரேமவுடனான சிங்கள வானோலி பேட்டி :

கோட்டா வோர் புத்தகங்களை வாசிக்க :

Gota’s War (English & Singala) Books Pdf link

Leave A Reply

Your email address will not be published.