60 தமிழ் அரசியல் கைதிகளின் விவரம் அடங்கிய கடிதங்கள் 225 எம்.பிக்களுக்கும் அனுப்பிவைப்பு.

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 60 பேரின் விவரங்கள் அடங்கிய கடிதங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குரலற்றவர்களின் குரல் அமைப்பால் இந்த கடிதங்கள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

யாழ். பிரதான தபாலகத்திலிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதன்பின்னர் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது:-

“அண்மையில் 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதனை நாங்கள் வரவேற்கிறோம். இது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தொடக்கப் புள்ளியாக அமையும். அதேநேரம் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். அப்படி ஒரு சம்பவத்தை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

11 வருடங்கள் தொடங்கி 26 வருடங்களாக சிறையில் இருக்கும் சிறையிலுள்ள 60 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர், தண்டணை விபரங்கள், வழக்கு விபரங்கள் போன்ற சகல விபரங்களும் உள்ளடக்கிய கோவை ,225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாங்கள் அனுப்பி வைத்துள்ளோம் .

விரைவாக அவர்களின் விடுதலை செய்தியை எதிர்பார்த்து இருக்கின் றோம். அந்தவகையில் ,அவர்களுடைய பெற்றோரும் எதிர்பார்ப்புடன் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாடாளுமன்றத்திலே கூறப்பட்ட அந்த விடயங்கள் விரைவாக நடைபெற வேண்டும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

முன்னுக்குப் பின் முரணாக பல மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 60 பேர் தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர். அந்த விவரங்களை நாம் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அண்மைக்காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உடைய விவரங்களை நாங்கள் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கின்றோம்.

விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம், சுமந்திரம் மீதான கொலை முயற்சி காரணமாக கைதுசெய்யப்பட்டவர்களின் விபரங்களையும் நாங்கள் சேகரித்து வருகின்றோம். அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்.

கடந்த காலம் தொட்டு விடுதலை என்று வருகின்றபோது அண்மைக்காலங்களில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டவர்களை அவ்வாறே சிறையில் முடக்கியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்.

2009 இற்குப் பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அந்தக் காலப்பகுதியில் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் இருந்தனர். ஆனால், இன்றைக்கும் அந்த அரசியல் கைதிகள் அப்படியே தேக்க நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றார்கள். 25 வருடங்களாக அவர்கள் இருக்கின்றார்கள். வயதானவர்கள் கூட அவர்களில் உள்ளனர். அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.