கொரோனா சவாலை முறியடிப்போம்! – மஹிந்த சூளுரை.

“கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமாக முறியடிப்போம். நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வோம்.”

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

தெற்கு அதிவேக வீதியின் கபுதுவ பிரதேசத்தின் நுழைவாயிலைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (02) அலரிமாளிகையில் இருந்து வீடியோ தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அன்று பின்தங்கிய பிரதேசங்களாக ஒதுக்கப்பட்ட பல கிராமங்கள், நாட்டில் நெடுஞ்சாலைகள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் தற்போது முன்னேற்றமடைந்து வருகின்றன.

நாட்டு மக்கள் மருத்துவமனைகள் மற்றும் தமது தொழில்புரியும் இடங்களுக்கு குறித்த நெடுஞ்சாலைகள் மூலம் சென்று வருகின்றனர்.

இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது எதிர்க்கட்சியினர் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

ஒரு சிலர் கொரோனாத் தொற்று முடியும் வரை அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தனர்.

இவ்வாறு சொல்பவர்கள் உண்மையாகவே சொல்கிறார்களா, இல்லையா என்பது தொடர்பில் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

கொரோனாவைக் காரணம் காட்டி ஒன்றையும் செய்யமுடியாதென்று கூறினால் அது நாட்டு மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

நாம் நாட்டு மக்களை முறையாகப் பாதுகாப்போம். அதற்காக ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கிறோம். நாம் ஒன்றுபட்டால் முடியாதது எதுவும் இல்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.