வெகுவிரைவில் ராஜபக்சக்கள் அரசியல் புயலுக்குள் சிக்குவர்! தலைமை தாங்கத் தயார் என சம்பிக்க முழக்கம்.

“ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில் சகல திசைகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றது. அவை வெகுவிரைவில் ராஜபக்சக்களுக்கு எதிரான அரசியல் சூறாவளியாக மாற்றமடையும். அதற்குத் தலைமை தாங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

“பஸில் ராஜபக்சவுக்கு எந்த அமைச்சுப் பதவியை வழங்கினாலும் அவரால் எதனையும் செய்ய முடியாது என்பது மூன்று மாதங்களிலேயே வெளிப்படும். ராஜபக்சக்கள் நாட்டுக்கு சாபமாகும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா ஒழிப்பு செயற்பாடுகள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை முகாமைத்துவம் செய்ய முடியாத ராஜபக்சக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். இதன் காரணமாக அரசியல் எதிர்ப்பு புயலொன்று அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

அன்று மஹிந்த காற்றைப் பற்றி கூறினார்கள். இன்று ராஜபக்சக்கள் இனி வேண்டாம் என்று கூறி மக்களின் எதிர்க்காற்று ஆரம்பமாகியுள்ளது. சகல துறைகளிலும் ராஜபக்சக்களுக்கு வாக்களித்தவர்கள் இன்று அவர்களது செயற்பாடுகளில் அதிருப்தியடைந்து அவர்களுக்கு எதிரான எதிர்க்காற்றுடன் ஒன்றிணைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரலில் தாய் நாடான அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பஸில் ராஜபக்ச தற்போது சுற்றுப் பிரயாணமாக நாடு திரும்பியுள்ளார். அவர் தாய் நாடு செல்ல முன்னர் இலங்கையில் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராகக் காணப்பட்டார். ஆனால், எவ்வித நிதி முகாமைத்துவமும் இன்றி நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்டுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு பஸில் ராஜபக்ச நிச்சயம் பொறுப்புக் கூற வேண்டும்.

எனவே, தற்போது அவருக்கு நிதி அமைச்சு மாத்திரமல்ல, எந்த அமைச்சை வழங்கினாலும் அவரால் எதையும் செய்ய முடியாது. அமைச்சுப் பதவியை வழங்கி மூன்று மாதங்களுக்குள் அதனைக் கண்டுகொள்ளலாம். பஸில் மாத்திரமல்ல எந்தவொரு ராஜபக்சவுக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்று நாம் ஏற்கனவே கூறினோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.