ஊரடங்கு தளர்வுகள்: தமிழகத்தில் இன்று முதல் எதற்கு எல்லாம் அனுமதி

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தணிந்துள்ளதன் காரணமாக கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. 5-07-2021 முதல் 12-07-2021 மாலை 6 மணி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் இன்று முதல் எவையெல்லாம் இயங்கும் என்பதை பார்க்கலாம்

பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி!

மாவட்டத்துக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50% இருக்கைகளில் மட்டும் குளிர்சாதன வசதிகள் இல்லாமல் பயணிகள் பயணிக்கலாம்.

உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி!

உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களிலுள்ள உணவகங்களில் காலை 6:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை உரிய வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்த அனுமதி. அதேபோல், தேநீர்க் கடைகளில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அனைத்து மாவட்டங்களிலும் கேளிக்கை விடுதிகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை.

அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதி. உரிய அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். அரங்குகளில் பொருட்காட்சி அமைப்பாளர்கள் மற்றும் விற்பனைக் கூடங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் கட்டாயம் RTPCR பரிசோதனை அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி!

வணிக வளாகங்கள் (Shopping complex / Malls) காலை 9:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிக வளாகங்களிலுள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டு கூடங்கள் இயங்க அனுமதியில்லை.

இ-பாஸ் நடைமுறை ரத்து!

மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.