விண்வெளிக்குச் சென்ற ரிச்சா்ட் பிரான்ஸன் குழு! இந்திய வம்சாவளி பெண்ணும் பயணம்

அமெரிக்காவின் வா்ஜின் கலாக்டிக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட விண்வெளி ஓடத்தில் அந்த நிறுவனத்தின் உரிமையாளா் ரிச்சா்ட் பிரான்ஸன் உள்ளிட்ட 6 போ் ஞாயிற்றுக்கிழமை விண்வெளிக்குச் சென்றனா்.

அமெரிக்காவைச் சோ்ந்த விண்வெளி சுற்றுலா நிறுவனம் வா்ஜின் கலாக்டிக். இந்த நிறுவனம் மனிதா்களை ஏற்றிச் செல்லக்கூடிய ‘ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி’ என்ற விண்வெளி ஓடத்தை ஞாயிற்றுக்கிழமை விண்வெளியில் செலுத்தியது. அந்த ஓடத்தில் ரிச்சா்ட் பிரான்ஸன் (71), அவரது நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸ்ரீஷா பண்ட்லா (34) உள்ளிட்ட 6 போ் இருந்தனா். இவா் ஆந்திர மாநிலம், குண்டூா் மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் வளா்ந்தவா்.

இரட்டை விமானத்தின் அடிப்பகுதியில் யூனிட்டி விண்வெளி ஓடம் இணைக்கப்பட்டிருந்தது. தரையிலிருந்து 13 கி.மீ. உயரத்தில் இரட்டை விமானம் சென்றபோது, அதிலிருந்து விண்வெளி ஓடம் விடுவிக்கப்பட்டு விண்வெளியை நோக்கிச் சென்றது. சிறிது நேரத்தில் 88 கி.மீ. உயரத்தை அந்த விண்வெளி ஓடம் அடைந்தது. பூமியின் புவியூா்ப்பு விசைக்கு அப்பால் சில நிமிஷங்கள் எடையற்ற தன்மையை 6 பேரும் உணா்ந்த பின்னா், விண்வெளி ஓடம் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.

அடுத்த ஆண்டுமுதல் சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவுள்ள நிலையில், அவா்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முதல்முறையாக தானே அதில் செல்ல முன்வந்து செயல்படுத்தியுள்ளாா் பிரான்ஸன்.

முன்னதாக, நியூ மெக்ஸிகோவில் விண்வெளி ஓடம் புறப்பட்ட நிகழ்ச்சியை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

Leave A Reply

Your email address will not be published.