கொரணாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.

கண்டியில் இருந்து சென்று லண்டனில் மென்ஜஸ்டர் பகுதியில் வாழும் முஸ்லிம் சகோதரர்கள் இக்கெட்டான தருணத்தில் கண்டி நகர் மக்களுக்காக செய்த உதவியை நாங்கள் ஒரு போதும் மறக்கக் கூடாது என்று கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எச். உமர்தீன் தெரிவித்தார்.

கண்டி லைன் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் லண்டனில் உள்ள நோத் வெஸ்ட் இன்டர் மென்ஸ்ஜஸ்டர் ஜீ கிரேட்டட் கல்சரல் அசோசியேசன் என்ற அமைப்பின் அனுசரணையுடன் கண்டி நகரில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 1300 குடும்பங்களுக்கு 3000 ரூபா பெறுமதியான உலருணப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி எச். உமர்தீன் தலைமையில் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
கொரோனா தொற்றினால் அரசாங்கத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டு நாடு முற்றாக முடக்கப்பட்ட சூழலில் கணிசமானளவு பாதிக்கப்படுவது கொழும்பு மற்றும் கண்டி போன்ற நகர்ப்புறங்களில் வாழும் மக்களே பாதிக்கப்டுகின்றனர். இக்கால கட்டத்தில் வயிற்றுப் பசிக்காக வெறும் பப்பாசி மட்டும் உண்டு வாழ்ந்தவர்கள் உள்ளார்கள்.

அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்கள் மூன்று வேளைச் சாப்பாட்டுக்கும் வழியின்றி கஷ்டப்படக் கூடிய நிலைமை இருந்தது.
நாட்டுப்புற பகுதிகளில் தேங்காய் மாங்காய் பிலாக்காய் எனச் சாப்பிட்டு காலத்தைக் கழிப்பார்கள். கொழும்பு கண்டி போன்ற பகுதிகளில் மாடி வீட்டு வீடமைத் தொகுதிகளில் எந்தவொரு செடி கொடிகளும் காணமுடியாது. வீடுகள் எல்லாம் பாலை வனம் போன்று தான் காணப்படும்.அன்றாடம் உணவுத்தேவையை பூர்த்தி செய்வது மிகக் கஷ்டமானதாகும்.

இந்த கால கட்டத்தில் கொழும்பு கண்டி போன்ற நகரப் பகுதிகளில் வாழக் கூடியவர்களுக்குத் தான் உதவி செய்யவேண்டும் என்பதை கணிசமானளவு மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
வேண்டுகோளை அடுத்து கண்டியைச் சேர்ந்த லண்டன் மென்ஜஸ்டர் என்ற இடத்தில் வாழக் கூடியவர்கள் ஒன்று சேர்ந்து தம் பகுதி மக்களுக்காக பெருந்தொகை நிதியை சேகரித்து உலருணப் பொதிகளைப்பெற்றுக் கொடுக்குமாறு அனுப்பினார்கள். அவர்களுடைய அந்த அமானிதப் பணத்திற்கு மக்களுக்கு தேவையான அத்தியவசியமான உணவுப் பொருட்களை வாங்கி இன மத வேறுபாடுகளின்றி பகிர்ந்தளித்துள்ளோம். இதில் எல்லோருக்கும் கிடைக்க வில்லை என யாரும் கோபித்துக் கொள்ள முடியாது. எல்லா மக்களுக்கும் கொடுக்க முடியாது. மிகவும் வறுமைக் கோட்டில் வாழக் கூடியவர்களுக்கும் மற்றும் அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களுக்கும் மட்டும் தான் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இப்படியான ஒரு இக்கெட்டான கால கட்டத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கான நல்ல உள்ளங்களைக் அல்லாஹ் தொடர்ந்து கொடுக்க வேண்டும். இந்த உதவியை வழங்கியவர்களது குடும்பங்களுக்கும் மற்றும் அவர்களது தொழில்கள் போன்றவற்றில் அல்லாஹ் நல்லருள் புரிய வேண்டும். இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் அவர்களது சேவையினை பொருந்திக் கொள்ள வேண்டும் என்று எமது பிரார்த்தனையினை அவர்களுக்கான நாங்கள் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதில் கொரோனா தொற்றினால் முடக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சுதுஹ{ம்பல கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வாழும் 450 குடும்பங்களுக்கு உலருணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஏனைய உலருணவுப் பொதிகள் யாவும் கண்டி நகரபுறத்திலுள்ள 24 பள்ளிவாசல்கள் ஊடாக வறிய குடும்பங்களுக்கு இந்த உலருணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கண்டி லைன் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் முஸ்லிம் சேவை ஆலோசனை சபை உறுப்பினரான அப்சல் மரைக்கார், பள்ளிவாசலின் செயலாளர் முஹமட் பாஸில், கண்டி மாநகர முதல்வர் இலாஹி ஆப்தீன், கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் லாபீர் செய்னுலாப்தீன், முஸ்லிம் வர்த்தக சங்க செயலாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.