முஸ்லிம் சமூகத்தினை நோக்கி , சில கேள்விகள் : நடிக்கிறீர்களா அல்லது இயல்பிலே இப்படித்தானா? – Fauzer Mahroof

கண்டிக்கத்தக்கதும், மனிதாபிமானத்தினை உலுக்கக்கூடியதும், நீதிக்காக குரல் எழுப்பக்கூடியதுமான ஒரு அவல மரணம் நடந்துள்ளது. இந்த சம்பவம் ஒரு சிறுமியின் துயரம் மட்டுமல்ல, ஆயிரமாயிரம் சிறுவர், சிறுமியுடனும் அவர்களது வாழ்வுடனும் சம்பந்தப்பட்ட விடயம்.

வர்க்கம், ஆண்டான் , அடிமை, உழைப்புச்சுரண்டல், மனித நேயம் , நீதி , நியாயம் … இன்ன பிற காரணிகளுடன் பிணைந்தது.

இந்த சிறுமியின் மரணமும், அதற்கான காரணிகளும் தொடர்பான விடயத்தினையொட்டி வாதவிவாதங்களும், கள்ளமௌனங்களும் , நியாயப்படுத்தல்களும், குற்றச்சாட்டுக்களும், “ தாமரை இலைத் தண்ணீர் “ பாசாங்குகளும் நடந்து வருகின்றன.

இந்த சம்பவத்தினை நோக்கும், கருத்துக்கூறும், சமூக அணுகுமுறையானது பிரதானமாக இரண்டு தளங்களில் அணுகப்படுகின்றன.

01.இன, மத, அரசியல் நீக்கம் செய்த பொதுப் பார்வை

01.இன, மத, அரசியல் சார்ந்த பார்வை

இலங்கையின் இன்றைய நிலைமையில் , இந்த பிரதான இரண்டு வகை அணுகுதல்களும் தவறு என்று சொல்ல முடியாத சமூகச் சூழல் அங்குள்ளது. இன்னோரு வகையில் பார்த்தால் , இப்படியான விடயங்கள் நடக்கும் சந்தர்ப்பங்களில், குற்றவாளித் தரப்பில் இருக்கும் சமூகத்தின் குரல் , இது தொடர்பாக எடுக்கின்ற நிலைப்பாடும், அது வெளிப்படுத்தும் உணமைக்கும், நியாயத்திற்குமான குரல்களுமே, இப்படியான விடயங்களை ஒரு சமூகம் சார்ந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விலக்கி வைக்கும். குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் தரப்பு மொக்குத்தனமாகவும், கள்ள மௌனமாகவும், நியாயப்படுத்தலாகவும் இவற்றினை எதிர் கொண்டால் , விளைவை அந்த சமூகமே ஒட்டு மொத்தமாக எதிர் கொள்ள வேண்டும்.

முதல் பார்வை
01.இன, மத, அரசியல் நீக்கம் செய்த பொதுப் பார்வை

பெயர் : ஜூட் குமார் ஹிசாலினி
பிறந்த திகதி : 12.11.2004
வயது : 16 வருடங்களும் 8 மாதங்களும்
தொழில் : வீட்டு வேலைக்காரி
மரணம் : 15.07.2021

சம்பவித்த இடம்- பாராளுமன்ற உறுப்பினரின் வீடு

வைத்திய அறிக்கை 
01. வெளிப்புற தீக்காயங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி , (ஹிஷாலினியின் உடலில் 72 வீதமான பகுதி தீயினால் முற்றாக எரிந்துள்ளது) .

02. நாற்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலான சான்றுகள் உள்ளது.

ஒருவரை வேலைக்கமர்த்துவது தொடர்பில், இலங்கைச் சட்டம் என்ன சொல்கிறது ?

கட்டாயப் பாடசாலைக் கல்வி, மற்றும் தொழில் கட்டளைச் சட்டத்தில் , தொழிலில் ஈடுபடுத்தும் ஆகக் குறைந்த வயது 16 ( 0.07.2020 அமைச்சரவையில் அங்கீகாரம் ).

நடந்திருப்பது என்ன?

அ. பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு அந்தச் சிறுமி , வீட்டு வேலை செய்ய கொண்டுவரப்படும் போது, அச்சிறுமி, 16 வயதினை பூர்த்தி செய்திருக்கவில்லை.
( கடந்த ஒக்டோபர் மாதம் 2020 இல் அச்சிறுமி வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்).

ஆகவே, ஒரு சாதாராண பொதுமகன் இந்த சட்டத்தினை மீறி இருந்தாலும் , ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இந்த சட்டத்தினை மீறி இருந்தாலும் , இந்தச் சிறுமி வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டது சட்டப்படி தண்டணைக்குரிய குற்றமே .

ஆ. அந்த சிறுமி பணிபுரியும் வீட்டிலிருந்து , பலத்த தீக்காயங்களுடன், கடந்த 3ம் திகதி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 15ம் திகதி மரணத்தினை தழுவி உள்ளார். அந்த சிறுமியின் முழுப்பாதுகாப்புக்கும் நலத்திற்கும் அவர் பணி செய்த வீட்டு நிர்வாகமே முழுப் பொறுக்கூறல் வேண்டும்.

ஆகவே, ஒரு சாதாராண பொதுமகன் என்றாலும் , ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும், இந்த நிகழ்விற்கான பொறுப்புக்கூறல் அவர் தரப்பு சார்ந்ததே.இவற்றிற்கு பதில் சொல்வதற்கான பொறுப்பிலிருந்தும், சட்ட நடவடிக்கையில் இருந்தும் , ஒரு சாதாராண பொதுமகன் என்றாலும் , ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும் விலக்களிக்க முடியாது.

அடுத்து, சட்டமியற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவர் சட்டம் தொடர்பான அறிவின்மையாகவும், சட்டத்தினை மீறுவதும் , அதிக பொறுப்புக்கூறலை அவர் மீது சுமத்தும்.

இ. சட்டம் 16 வயதுக்குற்பட்டவர்களுக்கு கல்வி வழங்கப்படுவது அவசியம், அதனை தடுத்து, குழந்தைதை தொழிலாளர்களாக அவர்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இந்தக் குற்றத்தினை ஒரு சாதாராண பொதுமகன் சட்டத்தினை மீறி செய்து இருந்தாலும் , ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மீறி இருந்தாலும் குற்றம் குற்றமே.

ஆகவே சட்டம் வலியுறுத்துவதன் படி , மரணம் நிகழ்ந்த வீட்டில் இருந்தோர், அதற்கு பொறுப்பானவர்கள் குற்றச்சாட்டினை எதிர் கொள்வது தவிர்க்கமுடியாதது.

அடுத்து மரணம் சம்பவித்த சூழல் தொடர்பானது, பல்வேறு கருத்துக்களில் இருந்து பின்வரும் கேள்விகளுக்கு பதில் அவசியப்படுகின்றன ….

அ. அந்தச் சிறுமியின் உடலில் தீக்காயங்கள் எவ்வாறு வந்தன?

ஆ. மண்ணெண்ணெய் அடுப்பில் தற்செயலாக தீப்பற்றிக் கொண்டது என்றால், அதற்கான பாதுகாப்பின்மை இருந்தது ஏன்?

இ. தன்னைதானே அந்தச் சிறுமி எரித்துக் கொண்டால் என்றால், அதற்கான சூழல், உளவியல் அழுத்தம் , நிர்ப்பந்தங்கள் என்ன?

இ. அந்தச் சிறுமியின் உயிர்ப்பாதுகாப்புக்கு யார் பொறுப்பு ?

ஈ. வேலைக்கு சேர்ந்த கடந்த 8 மாதங்களுக்கு மேல் அவரது குடும்பத்தினை சுதந்திரமாக சந்திப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணங்கள் என்ன?

சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கை

அ. இந்த உடற்கூற்று ஆய்வில் கூறப்பட்டிருக்கும் நாட்பட்ட பாலியல் அறிகுறி என்பது இலகுவில் புறம் தள்ளக் கூடியதா?

இவற்றினை அடிப்படையாக வைத்துக் கொண்டு, இந்த சம்பவத்தினை பொதுப்பார்வையில் ( இன, மத, அரசியல் நீக்கம் செய்து பார்க்கின்ற போதும்) அடிப்படையில் அந்த மரணம் நிகழ்ந்த வீட்டு உரிமையாளர்களும் வேலைக்கு அமர்த்தியவர்களும் , சட்டத்தினை மீறி உள்ளதுடன், ஏதோ ஒரு வகையில் அந்த சிறுமியின் மரணத்திற்கும் காரணமாக இருந்துள்ளார்கள் என சொல்வதற்கு தயங்கமாட்டார்கள்.

ஆனால், ஒரு தரப்பு , இதில் சம்பந்தப்பட்டுள்ள அந்த வீட்டின் உரிமையாளர், வேலைக்கு அமர்த்தியவர்கள் இந்த மரணத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தமில்லை என வாதிடுவதும், இன்னுமொரு பகுதியினர் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பதும் , அந்தத் தரப்பின் மனிதாபிமானத்திற்கும் நீதிக்கும் எதிரான நிலைப்பாட்டை நம்முன் துலக்கமாகவே நிறுவுகிறது…

மிக சராசரியாக இந்த விடயத்தினை ஒரு பொதுப்பார்வை சார்ந்து அணுகும் ஒருவர், அந்த சிறுமியின் மரணத்தில் இருந்து, குற்றம்சாட்டப்படும் தரப்பினை விடுவிக்க எந்த நியாயமும், சட்ட விலக்கும் இல்லை என்பதை மிகத் தெளிவாகச் சொல்வதுடன், மிக அநியாயமான அந்த உயிர் இழப்புக்கு நியாயம் வழங்கப்படுவதுடன், நீதியும் கிடைக்க வேண்டும் என்பதை உரத்து அல்லது மெல்லிய குரலிலாவது சொல்வார்!

இதில் எங்கு நாம்?

இலங்கை முஸ்லிம் சமூகமும், ஏனைய இலங்கைச் சமூகங்களும்….

இரண்டாவது இந்த விடயத்தினை , இன, மத, அரசியல் சார்ந்த பார்வையுடன் அணுகும் தன்மையும் அதற்கான சூழலும்… இந்த விடயத்தில்தான் இலங்கை முஸ்லிம் சமூகம் தனது பொறுப்பினை ஆழமாகவும் நீதியாகவும் கைக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் நீங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள், உங்கள் கருத்துக்களில் இருந்துதான், பிறர் உங்களை மதிப்பிடும் தன்மை உருவாவது சாத்தியப்படுவதும் புறவயமாகவும் நிகழ்கிறது…

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராக ஆகிவிடுங்கள். உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுங்கள். (யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ அவர்) செல்வந்தராக இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். எனவே, நீதி செலுத்துவதில் சுய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் மாற்றிக் கூறினாலோ அல்லது (சாட்சி கூற) மறுத்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்:4:135)

இந்த வசனத்தை அனைத்து சாராரும் ,விருப்பு வெறுப்பின்றி படித்துப் பாருங்கள்!

இனி, இரண்டாவது விடயத்தினை அடுத்த குறிப்பில் பார்ப்போம்
தொடரும்….

Wrote by : Fauzer Mahroof  (லண்டன்)

Leave A Reply

Your email address will not be published.