யாழ். பல்கலை நுழைவாயிலின் வெளியிலே இன்று பெரும் போராட்டம்!

இலவசக் கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலின் வெளியிலே இன்று கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

அபாயகரமான கட்டத்தை நோக்கி கல்வித்துறையைத் தள்ளுவதற்கு மேற்கொள்ளப்படும் அரசின் முயற்சிகளை எதிர்க்கக் கல்வித்துறையைச் சேர்ந்தோரையும், தொழிற்சங்கங்களையும், சிவில் அமைப்புக்களையும், பொதுமக்களையும் இன்று இடம்பெறவிருக்கும் போராட்டத்திலே ஒன்றிணைந்து பங்கேற்குமாறு யாழ். பல்கலைக்கழக சமூகத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வியை இராணுவமயமாக்கும் வகையிலும், தனியார்மயமாக்கும் வகையிலும் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம் மற்றும் பல்கலைக்கழகச் சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருக்கும் திருத்தம் ஆகியவற்றை எதிர்க்கும் வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனொரு பகுதியாக இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணி வரை ஒரு அமைதிப் போராட்டம் யாழ். பல்கலைக்கழகத்துக்கு வெளியே இடம்பெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினரை உள்ளடக்கிய யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரின் அழைப்பில் இடம்பெறும் இந்தப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, புதிய அதிபர் சங்கம், முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் ஆகிய அமைப்புக்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.