உயிர் வாழ ஏதாவது ஒரு தடுப்பூசியை உடன் போடுங்கள் : மக்களுக்கு மனோவின் அன்பு வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசிகளின் வர்த்தக பெயர்களை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். இவை பற்றிய கருத்துகள், வழமையான மருந்து வர்த்தக உலக போட்டா போட்டி விவகாரம். உள்நாட்டில் வாழ்வதற்கும், வெளிநாடு செல்வதற்கும், முதலில் உயிர் வாழ வேண்டும். 

ஆகவே தடுப்பூசிகளின் வர்த்தக பெயர்களை மறந்து விட்டு, தடுப்பூசியை தாமதிக்காமல் போட்டுக்கொள்ளுங்கள். 

குறிப்பாக கொழும்பு மக்கள் இனியும் தாமதம் செய்ய வேண்டாம். இங்கே அனர்த்தம் வெளியே சொல்லப்படுவதை விட அதிகம் என்பதை பொறுப்புடன் கூறுகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 தடுப்பூசிகளின் வர்த்தக பெயர்களை தெரிவு செய்து பெற்றுக்கொள்வது காரணமாக தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளாமல் பலர் இருப்பது தொடர்பில் மனோ எம்பி  கூறியுள்ளதாவது,

நான் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யவில்லை. நானும் அப்படிதான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். 

கொழும்பு ஜிந்துபிட்டி மாநகரசபை பொது வைத்திய வாரியத்தில், ஜூன் 21ம் திகதியன்று பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட போது, நானும் அங்கு போய், அவ்வேளையில் அங்கிருந்த சைனோபார்ம் (SinoPharm) தடுப்பூசியைதான் போட்டுக்கொண்டேன். இராணுவ வைத்தியசாலையில் எம்பீக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட போது அங்கு நான் போகவில்லை. அவ்வளவுதான். இதில் எந்தவித பிரச்சினையும் இல்லை.    

“கோவிட் அனர்த்தத்தை தடுக்க நடவடிக்கை எடுங்கள்” என நாம் கடந்த 2020ம் வருடம் பெப்ரவரி மாதம் முதல் புலம்பியும், இந்த அரசாங்கம், பல கோமாளி வேலைகளை செய்து காலத்தை ஓட்டியது. 

கடந்த வருடம் மார்ச் மாதம் அலரி மாளிகையில் பிரதமர் நடத்திய கொரோனா தடுப்பு தொடர்பான கட்சி தலைவர்கள் கூட்டத்தையடுத்து, “இந்நாடு ஒரு தீவு. இதனால், எங்களுக்கு நான்கு புறம் கடல் என்ற இயற்கை அரண் இருக்கிறது. ஆகவேதான் நோயாளிகள் குறைவாக இருக்கிறார்கள். ஆனால், நோயாளிகளுடன் பழகிய முதற்தொற்றாளர்கள் 40,000 பேர் இருக்கிறார்கள். அவர்களை உடன் கண்காணியுங்கள்” என நான் கூறினேன்.

அவ்வேளையில், நோயாளிகள்  40,000 பேர் இருப்பதாக நான் பொய் சொல்லி நாட்டை குழப்புகிறேன் என்று சொல்லி, அரசுதரப்பு அரசியல்வாதிகள் எஸ்.பி. திசாநாயக்க, உதய கம்மன்பில ஆகியோர் என்னை திட்டினார்கள். ஜிநானந்த தேரர் என்ற அரசு சார்பு பௌத்த பிக்கு என்னை கைது செய்யும்படி சிஐடியில் புகார் செய்தார். பொலிஸ் என்னை விசாரிக்கவோ, கைது செய்யவோ வரவில்லை. ஆனால், இன்று அந்த முட்டாள் அரசியல்வாதிகளின் ஆட்டங்கள் முடித்துள்ளன. அந்த முட்டாள் பிக்குவையும் காணோம்.   

அதன்பிறகு இன்றைய அரசாங்கம், பவித்ரா வன்னியாராச்சி, பிரசன்ன ரணதுங்க, உதய கம்மன்பில ஆகிய அமைச்சர்களை கொண்டு, “மந்திர” சட்டியை களனி கங்கையில் போட்டு, தம்மிக்க என்பவரின் நாட்டு “வைத்திய” பாணியை பாராளுமன்ற வரை கொண்டு வந்து வயதான சபாநாயகருக்கும், வயதாகும் சுகாதார அமைச்சருக்கும் பருக்கி, ஒரு வருடத்தை வீணடித்து, மக்களின் மரணங்களுக்கும், துன்பங்களுக்கும், அழுகுரல்களுக்கும், கண்ணீருக்கும் காரணமாகி விட்டார்கள்.

இன்று, நமது நாட்டுக்கு இலவசமாக அல்லது போட்டி நிறைந்த உலக நிலைமைகளில் விலைக்காகவது, பெருந்தொகை தடுப்பூசிகளையும், அவற்றை விலைக்கு வாங்க நிதி உதவிகளையும் தந்த இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நட்பு நாடுகளுக்கும், ஐநா, உலக சுகாதார ஸ்தாபனம், உலக வங்கி. ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய அமைப்புகளுக்கும் நன்றி.  

ஆகவே இன்று தரப்படும் தடுப்பூசிகள் இந்த அரசாங்கத்தால் தரப்படுபவை அல்ல. மேற்கண்ட நட்பு நாடுகளும், நட்பு உலக அமைப்புகளுமே அவற்றை தருகின்றன.  தரப்பட்ட தடுப்பூசிகளை நமது நாட்டு, சுகாதார துறை மருத்துவ ஊழியர்களும், இராணுவத்தினரும் மிக சிறப்பாக மின்னல் வேகத்தில் மக்களுக்கு செலுத்துகின்றனர். 24 மணித்தியாலங்களில், இவர்கள் 48 மணித்தியால வேலைகளை படுவேகமாக செய்கிறார்கள். இவர்களுக்கு நன்றி கூற முழு நாடும் கடமைப்பட்டுள்ளது.

இந்த மந்திர பாணி, மந்திர சட்டி கோமாளி வேலைகளை கைவிட்டு, கடந்த வருடமே இன்று போல் இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொடுத்து இருந்தால், இந்நேரம் முழுநாடும் தடுப்பூசிகளை பெற்று இருக்கும். அவற்றை இவர்கள் சிறப்பாக செய்து முடித்து இருப்பார்கள். நான்கு புறமும் கடல் என்ற, இயற்கை அரண் கொண்ட ஒரு தீவான எமது நாடு, உலகில் கொரோனாவை முறியடித்த முதல் நாடாக வெற்றிக்கொடி நாட்டி இருக்கும்.  

எது எப்படி இருந்தாலும், இந்த வேளையில், சுகாதார துறை மருத்துவ ஊழியர்களுக்கும், இராணுவத்தினருக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கும் முகமாக, நாம் கொரோனா தடுப்பூசிகளின் வர்த்தக பெயர்களை கேட்டு நிற்காமல் இருப்பதை போட்டுக்கொள்ள வேண்டும். அதன்மூலம் படு வேகமாக பரவி வரும் டெல்டா கோவிட் கிருமிகளில் இருந்து உங்களையும், நாட்டையும் பாதுகாக்க முடியும்.

– மனோ கணேசன்

Leave A Reply

Your email address will not be published.