கொரோனா மரணங்களை குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்

“இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. உண்மைத் தகவல்களையே ஊடகங்களுக்கு வழங்குகின்றோம்.”

இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

நாளாந்தக் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து வருகின்றது என எதிரணியினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகின்றது. அந்த எண்ணிக்கையை அப்படியே ஊடகங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம். மரண எண்ணிக்கையில் குறைப்பு எதையும் நாம் செய்யவில்லை. மரண எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் சுகாதார அமைச்சுக்குக் கிடையாது.

நாளொன்றில் முதல் தடவையாக நேற்றுமுன்தினம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளது. நேற்றுமுன்தினம் 108 ஆண்கள், 101 பெண்கள் உள்ளிட்ட 209 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டுக்கு நல்லதல்ல. இது நாட்டின் ஆபத்து நிலைமையை எடுத்துக்காட்டுகின்றது. எனவே, தனிமைப்படுத்தல் சட்டத்துக்கமைய இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தமது அத்தியாவசிய நாளாந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.