52 கொவிட் உடலங்கள் எரியூட்டுவதற்கு அனுராதபுரம் அனுப்ப ஏற்பாடு!

வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கொவிட் காரணமாக மரணித்தவர்களின் 52 உடலங்கள் சேர்ந்துள்ளதால், நெருக்கடியைச் சமாளிக்க அவற்றை வடமேல் மாகாணத்தில் எரியூட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம் முழுவதற்கும் மின் மற்றும் எரிவாயு உடல் தகனம் செய்யக்கூடிய வசதி யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் மற்றும் வவுனியா ஆகிய இரண்டு இடங்களில் மாத்திரமே காணப்படுகின்றன.

கோம்பயன்மணலில் ஒரு நாளைக்கு 4 – 5 உடலங்களையே எரியூட்டக்கூடியதாக இருக்கிறது. இதே நிலையே வவுனியா தகனசாலையிலும் காணப்படுகிறது.

ஆனால் தற்போது வடக்கு மாகாணம் முழுவதும் 52 கொவிட் மரண உடலங்கள் சேர்ந்துவிட்டதால் அவற்றை வடமேல் மாகாணம் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவையிலுள்ள தகனசாலைகளில் எரியூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது 20 கொவிட் உடலங்கள் காணப்படுவதுடன், யாழ் மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளையும் சேர்த்து 31 உடலங்கள் சேர்ந்துள்ளன.

கிளிநொச்சியில் 9 உடலங்களும், முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் 12உம் என மொத்தம் 52 உடலங்களை எரியூட்டவேண்டிய நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இதனாலேயே நெருக்கடியைச் சமாளிக்க வடமேல் மாகாணத்திலுள்ள தகனசாலைகளில் இவற்றை எரியூட்டுவதற்கான மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பத்தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை(05-09-2021) முதல் கட்டமாக 10 உடலங்கள் வடமேல் மாகாணத்துக்கு அனுப்பப்படவிருப்பதாகவும், இவற்றில் 5 உடலங்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த உடலங்களை பொலன்னறுவை ஹிங்குராகொடவிலுள்ள தகனசாலையில் எரியூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்துக்கென தனியாக ஒரு மின்-எரிவாயு தகனசாலை ஒன்றை அமைக்கப்படவேண்டும் என்று கிளிநொச்சி பொது வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சுகந்தன் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.