கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய பாதிரியார் விவகாரம் !

கேரளாவில் முஸ்லீம்களுக்கு எதிராக கடுமையான கருத்தைத் தெரிவித்த பாதிரியர் விவகாரம் பரபரப்பாகியுள்ளது, அவரை எதிர்த்து அந்த சர்ச்சின் கன்னியாஸ்த்ரீகளே வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

பாதிரியார் ஜோசப் கல்லரங்கட் என்பவர் கேரளாவில் போதை மருந்துக்கு முஸ்லிம் அல்லாதார் சமுதாயம் அடிமையாவதற்கு முஸ்லீம்களை குற்றம்சாட்டுமாறு ‘நார்க்கோடிக் ஜிகாத்’ என்று இதை வர்ணித்து பேசியுள்ளார். இது கிறித்துவத்தின் கொள்கைகளுக்கும் ஏசு கிறித்துவின் போதனைக்கும் எதிரானது என்று கூறி அங்கு இதற்கான எதிர்ப்புகள் இன்னமும் அடங்காத வேளையில் இன்னொரு பாதிரியார் முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷப் பேச்சு பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பாலியல் பலாத்காரக் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக வெளிப்படையாக போர்க்கொடி தூக்கிய அதே கன்னியாஸ்திரீகள்தான் இப்போது இந்தப் பாதிரியாருக்கு எதிராகவும் கிளம்பியுள்ளனர். குரவிலங்காட்டில் உள்ள செயிண்ட் பிரான்ஸிஸ் திருப்பணி கோயிலில் ராஜீவ் என்ற பாதிரியார் தான் வழிபாட்டு நேரத்தில் முஸ்லிம் விரோதப் பேச்சை பேசியுள்ளார்.

அதாவது பாதிரியார் ராஜீவ் தன் பிரார்த்தனை நேர உரையில் போதைமருந்து ஜிகாத் என்று பேசிய ஜோசப் கல்லரங்காட்டுக்கு ஆதரவாகப் பேசியும், முஸ்லீம்களிடமிருந்து காய்கறிகள் உள்ளிட்டவைகளை வாங்கக்கூடாது என்றும் அவர்கள் ஓட்டும் ஆட்டோக்களில் பயணிக்கக் கூடாது என்றும் பேசியதாக இந்த கன்னியஸ்திரீகள் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளனர். இவையெல்லாம் மத விரோதங்களை வளர்க்கும் செயல் என்று இவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இவர் இப்படி பேசுவது புதிதல்ல என்று கூறும் கன்னியாஸ்திரீகள், பலமுறை பேசியிருக்கிறார், ஆனால் இம்முறை பொறுத்துக் கொள்ள முடியாமல் வெளிநடப்பு செய்தோம் என்கின்றனர்.

“இயேசு கிறிஸ்து எங்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்துள்ளார்? அனைவரிடத்திலும் அன்பு செலுத்தவே கட்டளையிட்டுள்ளார். அண்டை வீட்டாரை நேசியுங்கள் என்று கூறியிருக்கிறார். மதவிரோதத்தை வளர்க்கக் கூடாது. கிறிஸ்து என்ன சொல்லியிருக்கிறாரோ அதற்கு நேர் எதிரான முறையில் போதிக்கும் இவரை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

2018-ல் கேரளாவை உலுக்கிய பாலியல் பலாத்கார வழக்கில் பிஷப் பிராங்கோவை கைது செய்யச் சொல்லி இவர்கள் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பிராங்கோ கைது செய்யப்பட்டதும் நடந்தது.

முதல்வர் பினராயி விஜயன் ‘நார்க்கோடிக் ஜிகாத்’ கருத்தை கண்டித்து போதை மருந்திற்கு மதச்சாயம் பூசாதீர்கள் என்றார். குற்றங்களுக்கு மதச்சாயம் பூசலாமா என்று கேள்வி எழுப்பி கண்டித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.