தடுப்பூசி போட்டுக்கொண்டதும் பீரியட்ஸ் சுழற்சி மாறுவது ஏன்? : ஆர்.வைதேகி

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் சிலருக்கு பீரியட்ஸ் சுழற்சியில் மாற்றங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே… சிலருக்கு பீரியட்ஸ் இல்லாத நாள்களில் எதிர்பாராத ரத்தப் போக்கு ஏற்படுவதாகவும், அது அசாதாரணமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தற்காலிகமானதா அல்லது நிரந்தர பிரச்னையாக மாறிவிடுமா? இது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

“கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு பீரியட்ஸில் அசாதாரண நிலை இருப்பதாகச் சில பெண்கள் சொல்வதைக் கேள்விப்படுகிறோம். என் தோழிகள் உட்பட பரவலாக நிறைய பெண்கள் இப்படிச் சொல்வதை சமீப நாள்களில் கேட்கிறேன். ஆனால், இந்த அசாதாரண நிலை என்பது அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு மாதவிடாய் சுழற்சிகளுக்குப் பிறகு சரியாகிவிடுகிறது.

மாதவிலக்கு சுழற்சியில் பொதுவாக என்ன நடக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மூளையிலிருந்து குறிப்பிட்ட சில ஹார்மோன்கள் விடுவிக்கப்படும். அவை சினைப்பை களுக்குச் சென்று அவற்றைத் தூண்ட வேண்டும். சினைப்பை ஒரு கருமுட்டையை விடுவிக்கும்.

அந்தக் கருமுட்டை ஆணின் உயிரணுவோடு சேர்ந்து கருவாகவில்லை, கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் எண்டோமெட்ரியம் லேயர் உதிர்ந்து உதிரப்போக்காக வெளியேறுகிறது. இதுதான் மாதவிலக்கு. இந்தச் சுழற்சியானது 28 – 30 நாள்களுக்கொரு முறை நடக்கும்.

மேலே குறிப்பிட்ட எண்டோமெட்ரியம் லேயர் உதிர்ந்து வெளியேறியதும் அது மீண்டும் வளர ஆரம்பிக்கும். அதில் நிறைய செல்களின் செயல்பாடு இருக்கும். இந்த நேரத்தில் ஏதோ காரணத்துக்காக ஏதோ ஸ்ட்ரெஸ் ஏற்பட்டால் இந்தச் செயல்பாடு பாதிக்கக்கூடும்.

கோவிட் தடுப்பூசி என்றில்லை, எந்தத் தொற்றுக்கான தடுப்பூசியைச் செலுத்தும்போதும் உடலில் நோயை எதிர்க்கும் ஆன்டிபாடிக்கள் உருவாகும். அந்த ஆன்டிபாடிக்கள் பீரியட்ஸ் சுழற்சியைப் பாதிக்கக்கூடும். ஆனால், அதே நேரம் தடுப்பூசி போட்டுக்கொண்ட எல்லா பெண்களுக்கும் பீரியட்ஸ் சுழற்சியில் பிரச்னைகள் இருக்கும் என்று சொல்ல முடியாது.

தடுப்பூசியால் சிலருக்கு பீரியட்ஸ் சுழற்சி பாதிக்கப்படும்போது, ப்ளீடிங் குறையலாம் அல்லது சற்று அதிகரிக்கலாம் அல்லது சிலருக்கு குறிப்பிட்ட நாள்களுக்கு முன்பே பீரியட்ஸ் வரலாம். `டாக்டர்… வாக்சின் போட்டுக்கிட்டேன். வழக்கத்தைவிட பீரியட்ஸ் சீக்கிரம் வந்திருச்சு’ எனச் சிலர் கேட்கிறார்கள்.

இப்போதைக்கு இந்த விஷயம் குறித்து நமக்கு உறுதியாக எந்தத் தகவலும் இல்லை. இன்னும் சில மாதங்கள் கழித்து தடுப்பூசிக்கும் பீரியட்ஸ் சுழற்சிக்குமான தொடர்பு பற்றிய தகவல்கள் நமக்குத் தெரியவரலாம். அதுவரை நமக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட மாதிரி பீரியட்ஸ் நாள்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அதில் தயக்கமோ, பயமோ தேவையில்லை. பீரியட்ஸ் பிரச்னைகளுக்கு பயந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தள்ளிப்போடுவது ஆபத்தானது. ஏனென்றால் கொரோனாவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், பீரியட்ஸ் பிரச்னைகளைவிட ஆபத்தானவை. எனவே தாமதிக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.”

 

 

 

 

 

 

 

 

– ஆர்.வைதேகி

Leave A Reply

Your email address will not be published.