மகளிர் பகரலிவு டெஸ்ட் டிராவில் முடிவு.

இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி குயின்ஸ்லேண்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா 44.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் பாதிக்கப்பட்டு முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. மந்தனா 80 ரன்னுடம், பூனம் ரவுத் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர் .

இதையடுத்து இரண்டாம் நாளில் சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். பூனம் ரவுத் 16 ரன்னிலும், கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன்னிலும் அவுட்டாகினர். யஸ்திகா பாட்டியா 19 ரன்னில் வெளியேறினார். இந்திய அணி 101.5 ஓவரில் 276 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. பொறுப்புடன் ஆடிய தீப்தி சர்மா அரை சதமடித்தார். அவர் 66 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இந்திய மகளிர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, ஆஸ்திரேலியா மகளிர் அணி நேற்றைய நாள் உணவு இடைவேளைக்கு பின் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீராங்கனை மோனி 4 ரன்னிலும், அலீசா ஹீலி 29 ரன்னிலும், கேப்டன் மெக் லானிங் 38 ரன்னிலும், மெக்ராத் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் கடைசி நாளான இன்று 241 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதனால் 136 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்து இரண்டாவது இன்னிங்ஸையும் டிக்ளர் செய்தது.

இதில் ஷஃபாலி வர்மா அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி இலக்காக 272 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 32 ரன்களை எடுத்திருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதனால் இப்போட்டியில் முடிவின்றி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்த ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.