போலீஸ் எஸ்.ஐ மிரட்டியதால் 9 மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை பலி என கணவர் புகார்!

மயிலாடுதுறை அருகே வீட்டில் 20 பவுன் நகை திருட்டு புகார் அளித்த தங்களையே போலீஸ் எஸ்.ஐ மிரட்டியதால் 9 மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூரைச் சேர்ந்தவர் முகம்மது பஷீர். கிளியனூரில் கடை வைத்து நடத்திவரும் இவரது காரை அதே ஊரைச் சேர்ந்த முகம்மது ரபி என்பவர் வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 28-ஆம் தேதி அவர் வீட்டு பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் காரின் பதிவுப்புத்தகம் ஆகியன காணாமல் போயுள்ளது. இதுகுறித்து, ஊர் தலைவர் முன்னிலையில் நடத்திய விசாரணையில் ஆர்சி புக்கை திருடியதை ஒப்புக்கொண்ட முகம்மது ரபி, காணாமல் போன நகைக்கும் சேர்த்து ரூ.10.50 லட்சம் பணத்தை 2 மாதங்களுக்குள் திருப்பித் தருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, ரபியை பெரம்பூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றபோது, அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன் என்பவர் விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தியுள்ளார்.

மறுநாள் இரவு பஷீர் வீட்டுக்குச் சென்ற எஸ்.ஐ பாலகிருஷ்ணன் முன்னுக்குப்பின் தவறான தகவல்களை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டதாகவும், இதனால் பஷீரின் மனைவி 9 மாத கர்ப்பிணியான பாத்திமா ஜீபேரியா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து, அங்கு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு, குழந்தை இறந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள முகம்மது பஷீர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்கிடம் அளித்த புகார் மனுவில் நகை மற்றும் ஆர்சி புக்கை திருடிய முகம்மது ரபி மீதும், புகாரின்மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் ரபீக்குக்கு ஆதரவாக செயல்பட்டு, கர்ப்பிணி பெண்ணை விசாரணை செய்து உடல்நிலை பாதிக்கப்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை உயிரிழப்பிற்கு காரணமான எஸ்ஐ பாலகிருஷ்ணன் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்துள்ளார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட மாவட்ட எஸ்பி உரிய விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.