இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரியில் சிறை திருவிழா!

மாதிரி சிறைச்சாலைத் திட்டத்தின்கீழ், ஸ்ரீ அரவிந்தர் குழுமத்துடன் இணைந்து புதுச்சேரி சிறைத்துறை இன்று ஏற்பாடு செய்துள்ள “ஜெயில் மஹோத்சவ்“ நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர்,• சூழ்நிலை காரணமாக சிலர் கைதிகள் ஆகிறார்கள். கண நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத கோபத்தினால் தவறிழைத்து விடுகிறார்கள். யாரும் குற்றவாளியாக பிறப்பதில்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் குற்றம் செய்ய அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அதற்கு அவர்கள் சார்ந்த சூழலும் சமூகமும் கூட காரணம் என்றார்.

பல தேசிய தலைவர்கள் சிறைவாசம் அனுபவித்து இருக்கிறார்கள். சிறைவாசம் நம்மை புதுப்பித்துக் கொள்வதற்கு உதவ வேண்டும். காந்தியடிகள், தான் சிறையில் இருந்த காலத்தில் ஒரு நிமிடம் கூட வீணடித்தது கிடையாது என கூறிய தமிழிசை, புதுச்சேரி சிறையில் நேரத்தை வீணடிக்காமல் சிறைத் துறை அதிகாரிகளின் உதவியோடு பொம்மை, விவசாயம், கால்மிதியடி, ஓவியம், யோகா கற்றுக் கொள்ளுதல் என பலவற்றை இங்குள்ள கைதிகள் செய்கிறார்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

குடும்பத்திற்கு பயனுள்ளவர்களாக இங்குள்ள கைதிகள் நேரத்தை மிக சிறப்பாக செலவழித்து வருகிறார்கள். சிறை அனுபவம் என்பது நமது வாழ்க்கையில் புது அனுபவத்தைத் தருவதாக இருக்க வேண்டும் என்றார். இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரியில் சிறை திருவிழாவை நடத்தப்படுவதை பாராட்டிய ஆளுநர், நவீன மயமான பார்வையாளர்கள் அறை கட்டப்பட்டிருக்கிறது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது. சிறைக் கைதிகள் குடும்ப விருப்பம் உறுப்பினர்களோடு பேசுவதற்கு தொலைபேசி வசதி, படிப்பதற்கு நூலகம் ஆகிய வசதிகளை செய்திருக்கிறார்கள். அதற்காக சிறைத்துறையைப் பாராட்டுகிறேன் என்றார்.

24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனை அமைக்க கோப்பு அனுப்ப்பட்டிருப்பதாக அறிகிறேன். அதன் அவசியம் கருதி விரைவாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் பெண்களுக்கென்று தனி சிறைச்சாலை வளாகம் அமைத்து இருப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தமிழிசை கூறினார்.

சிறைச்சாலை என்பது மனதிற்கு கனமான ஒன்று. அதையும் சுவையான அனுபவமாக மாற்றி நீங்கள் விடுதலை அடைந்த பிறகு, நம் கையிலும் ஒரு தொழில் இருக்கிறது என்ற நம்பிக்கையை இந்த சிறைச்சாலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும் அவர் பேசினார்.

முன்னதாக, துணைநிலை ஆளுநர் பார்வையளர் அறை, கண்காணிப்பு அறை, பெண்கள் சிறை வளாகம், நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார். புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமைச் செயலர் அஷ்வனி குமார், சிறைத்துறை காவல் அதிகாரி ரவிதீப் சிங் சாஹர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.