ஆப்பிழுத்த குரங்கான ஜோர்ஜிய நாட்டு சாக்காஸ்விலி : சண் தவராஜா

ஜோர்ஜிய நாட்டின் முன்னாள் அரசுத் தலைவரான மிக்கைல் சாக்காஸ்விலி 8 வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோர்ஜிய நாட்டின் மூன்றாவது அரசுத் தலைவரான அவர் 2004 முதல் 2013 வரையான காலப்பகுதியில் இரண்டு தடவைகள் அந்த நாட்டின் அரசுத் தலைமைப் பொறுப்பை வகித்தவர்.

ரஸ்யாவின் எல்லையோரம் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசு நாடான ஜோர்ஜியாவை மேற்குலகின் செல்லப்பிள்ளையாக மாற்றத் துடித்த சாக்காஸ்விலி தனது மேற்குலக எசமானர்களின் ஆசீர்வாதத்துடன் மக்கள் விரோத நடவடிக்கைகளில் தாராளமாக ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் ஜோர்ஜிய மாகாணங்கள் இரண்டு பிரிந்துசெல்ல முற்பட்ட போது, அவற்றின் மீது படையெடுப்பை மேற்கொண்டு அதன் விளைவாக ரஸ்யாவுடன் சிறிய போர் ஒன்றையும் நடாத்தினார். 2008 இல் தோல்வியில் முடிந்த இந்த மோதலை அடுத்து அவரின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
“சமாளிப்பதற்குக் கடினமானவர்” என அமெரிக்கத் தரப்பினராலேயே விமர்சனத்தைச் சந்திக்கும் சாக்காஸ்விலி 2013இல் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட முடியாத சூழ்நிலையிலும், 2012 ஒக்ரோபர் 2இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவர் சார்ந்த ஐக்கிய தேசிய இயக்கக் கட்சி தோல்வியைத் தழுவியிருந்த நிலையிலும், ஆட்சிக் காலத்தில் இவர் மேற்கொண்டிருந்த பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாகக் கைது செய்யப்படும் அபாயம் இருந்த நிலையிலும் நாட்டைவிட்டுத் தப்பியோடினார்.

தொடர்ந்து பதவிக்கு வந்த அரசாங்கம் இவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர் நேரில் சமூகம் தராத நிலையிலும் விசாரணைகளை மேற்கொண்டது. பதவிக் காலத்தில் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை, எதிர்க் கட்சிகளின் நடவடிக்கைகளை முறியடிக்க வன்முறைகளைப் பாவித்தமை, அரசியல் கைதிகளைச் சித்திரவதைகளுக்கு உட்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நாட்டைவிட்டு வெளியேறிய சாக்காஸ்விலி முதலில் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார். 2 வருடங்களின் பின்னர், அப்போதைய உக்ரைனின் அரசுத் தலைவர் பெற்ரோ புரஷெங்கோவின் அழைப்பின் பேரில் உக்ரைன் வந்த அவருக்கு அந்த நாட்டின் பிரஜாவுரிமையும், ஒடேசா ஒப்லாஸ்ற் மாகாணத்தின் ஆளுநர் பதவியும் வழங்கப்பட்டது.
உக்ரைன் பிரஜாவுரிமையை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில் – ஜோர்ஜிய நாட்டுச் சட்டங்களின் பிரகாரம் – அவர் தனது ஜோர்ஜிய பிரஜாவுரிமையை இழக்க நேரிட்டது.

2015 மே மாதத்தில் ஆளுநர் பதவியை ஏற்ற சாக்காஸ்விலி 2016 நவம்பர் வரை அப்பதவியில் நீடித்தார். ஒடேசா பிராந்தியத்திலும், ஒட்டுமொத்த உக்ரைனிலும் அரசுத் தலைவர் புரஷெங்கோ ஊழலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய சாக்காஸ்விலி தனது பதவியைத் துறந்தார்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையிலான தேனிலவு முடிவுக்கு வந்தது. தொடர்ந்து சாக்காஸ்விலியின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதால் நாடற்றவராக மாறிய அவர் மீண்டும் அமெரிக்கா செல்ல நேரிட்டது.

உக்ரைனில் புதிதாகப் பதவியேற்ற அரசுத் தலைவர் வொலோடிமிர் செலன்ஸ்கி அவரது பிரஜாவுரிமையை மீண்டும் வழங்கியதைத் தொடர்ந்து, சாக்காஸ்விலி 2019 மே 29இல் உக்ரைன் திரும்பினார்.
தொடர்ந்து, 2020 மே 7 முதல் உக்ரைனின் தேசிய மறுசீரமைப்புக் குழுவின் தலைமைப் பொறுப்புக்கு அவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே – உக்ரைன் அரசுத் தலைவருக்கு அறிவிக்காமலேயே(?) – அவர் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறி ஜோர்ஜியாவுக்குள் புகுந்துள்ளார்.

ஜோர்ஜியாவுக்கு வருகிறேன் என அவர் பூச்சாண்டி காட்டுவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே, பல தடவை இவ்வாறு சொல்லியிருந்த சாக்காஸ்விலி அவ்வாறு செய்யவில்லை. ஆனால், இம்முறை அவர் சொல்லியவாறு செய்த போதிலும், அரசாங்கத்திடம் சிக்கிக் கொண்டார். ஏற்கனவே, அவர் சிறைத் தண்டனைக்கு ஆளாகியிருந்த நிலையில் தற்போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்தமை, நுழைவிசைவு அனுமதி இன்றிப் பிரவேசித்தமை உள்ளிட்ட புதிய குற்றங்களுக்காகவும் தண்டிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளார். இந்தக் குற்றச் சாட்டுகளின் கீழ் அவருக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அது மாத்திரமன்றி, அவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படக்கூடிய ஏதுநிலைகள் உள்ளன. தலைமை அமைச்சர் இராக்லி கரிபாஸ்விலியின் தகவல்களின் பிரகாரம், “அக்டோபர் முதலாம் திகதி வெள்ளிக் கிழமை நாட்டிற்குள் பிரவேசித்த சாக்காஸ்விலி மறுநாள் இரண்டாம் திகதி சனிக் கிழமை நடைபெறும் மாநகரசபைத் தேர்தல்களைத் தொடர்ந்து, மூன்றாம் திகதி ஞாயிற்றுக் கிழமை எதிர்க்கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் பத்தாயிரம் பேர் வரை திரட்டி, எதிர்க் கட்சிப் பிரதிநிதிகள் சிலரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார். இத்தகைய குழப்ப நிலையைப் பயன்படுத்தி வெளிநாடுகளின் தலையீட்டைக் கோர நினைத்திருந்தார். அவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகச் செய்து, புதிய தேர்தல் ஒன்றுக்கு வழி செய்வதே அவரின் திட்டம்” என்கிறார் அவர்.

அவரின் கூற்று உண்மையானால், ஜோர்ஜியாவின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அமெரிக்கப் பாணி ஆட்சிக் கவிழ்ப்பின் ஒரு முறைமையே இது. மாநகர சபைத் தேர்தல்கள் ஜோர்ஜியாவைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானவை. அவை ஆளும் கட்சியின் செல்வாக்கு எத்தகையது என்பதன் காட்டியாக விளங்கக் கூடியவை. தேர்தல் முடிவுகள் ஆளுங் கட்சிக்குப் பாதகமாக முடியுமானால், மக்களை அணிதிரட்டி அரசாங்கத்தைக் கவிழ்ப்பது இலகுவானது என்பது சாக்காஸ்விலியின் கணக்கு. அதற்கு தனது வருகை அவசியமானது என அவர் நினைத்திருக்கக் கூடும்.
ஆனால், அவரின் கணக்கு ஆரம்பம் முதலே தப்பாகவே அமைந்திருக்கின்றது. செப்டெம்பர் 30ஆம் திகதியே அவர் ஜோர்ஜியாவுக்குள் நுழைந்துவிட்டதை – உக்ரைனில் இருந்தே அவரின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த – அரசாங்கம் அறிந்திருந்தது. இருந்தும், அது பொய்ச் செய்தி என்ற தகவலை அரசாங்கம் கசிய விட்டிருந்தது. இதனாலேயே, சாக்காஸ்விலி நாட்டினுள் பிரவேசித்து 18 மணி நேரத்தில் பாரிய மோதல்கள் எதுவும் இன்றி அவரைக் கைது செய்ய முடிந்திருக்கின்றது.

அது மாத்திரமன்றி, நடைபெற்று முடிந்த மாநகர சபைத் தேர்தல்களில் கூட அவருடைய கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. உத்தியோகபூர்வ முடிவுகள் வெளிவராத நிலையில், கருத்துக் கணிப்புகள் அடிப்படையில் ஆளுங் கட்சி 47.6 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது. சாக்காஸ்விலி தலைமையிலான கட்சியால் 27.1 வீத வாக்குகளை மாத்திரமே பெற முடிந்துள்ளது.

கோக்கசஸ் பிராந்தியத்தில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடான ஜோர்ஜியாவில் தனது நலன் பேணும் ஒரு அரசாங்கம் அமைய வேண்டும் என்பது அமெரிக்க சார்பு மேற்குலகின் நீண்டநாள் ஆசை. சாக்காஸ்விலி பதவியில் இருக்கும் வரை அமெரிக்காவின் ஆசை நிறைவேறியே வந்தது.

ஆனால், 2013 இல் பதவிக்கு வந்து இன்றுவரை நீடிக்கும் அரசியல் தலைமை அமெரிக்காவின் ஆசைக்கு முழுமையாக அடிபணியாத நிலையே உள்ளது. இதனை மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தற்காலிகமாக நிறைவேறாது போயிருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இது போன்ற முயற்சிகள் வேறு வழிமுறைகள் ஊடாக, வேறு நபர்களை முன்னிறுத்தி நடைபெறுவது தடைப்படாது என உறுதியாக நம்பலாம்.

வல்லரசுகளின் இத்தகைய விளையாட்டில் பாதிக்கப்படுவது சாக்காஸ்விலி போன்ற பகடைக் காய்கள் மாத்திரமல்ல. பொது மக்களும்தான்.

Leave A Reply

Your email address will not be published.