சிறு பொருளாதார மேம்பாடு தொடர்பான மீளாய்வு கூட்டம்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற சிறு பொருளாதார மேம்பாடு தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் வியாழேந்திரன் பங்கேற்பு!!
அரசினால் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் சிறு பொருளாதார மேம்பாடு தொடர்பான மீளாய்வு கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு சிறுபொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் ஆடு வளர்ப்பு மற்றும் இஞ்சி, உழுந்து பயறு போன்ற திட்டங்களுக்காக நிதிகளை ஒதுக்கியுள்ளதன் அடிப்படையில் அவை தொடர்பான மீளாய்வு கூட்டங்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்களது ஏற்பாட் டில் இடம்பெற்று வருகின்றது.

அதனடிப்படையில் மட்டக்களப்பில் குறித்த அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஆடு வளர்ப்பு மற்றும் இஞ்சி, உழுந்து, பயறு போன்ற திட்டங்கள் தொடர்பாக மீளாய்வுக் கூட்டம் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு சிறுபொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியழேந்திரன் தலைமையில் இன்று (12) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி திணைக்கள உயர் அதிகாரிகலென பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இவ்வமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட ஆடு வளர்ப்பு மற்றும் இஞ்சி, உழுந்து, பயறு தொடர்பான திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்வாண்டில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இங்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில் இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி உழுந்து பயறு போன்ற சிறு பொருளாதார பயிர்ச் செய்கைக்கான தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உதவிகள் வழங்குதல், ஆடுவளர்ப்புத்திட்டம் மற்றும் சேதனைப் பசளை உற்பத்திக்கான உபகரணங்களை வழங்கள் போன்ற திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதுதவிர இஞ்சி, உழுந்து, பயறு, மஞ்சள் போன்ற உற்பத்திப் பொருட்களையும் அவ்வுற்பத்திகளை மேற்கொள்வதற்கான விவசாய உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக இம்மாவட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.