உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?

பயணத்திற்கு ஏற்ற பாஸ்போர்ட்களை கொண்ட உலக நாடுகளின் பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து கொண்டு ஒருவர் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடிகிறது என்பதை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் நாடுகள் தரவரிசைபடுத்தப்படுகின்றன.

அதன்படி இந்தியா, கடந்த ஆண்டை விட 6 இடங்கள் பின்னுக்கு சென்று 90-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட்டு வைத்திருப்பவர்கள் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வரலாம். இதில், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன. இந்த இரு நாடுகளின் பாஸ்போர்ட்டுடன் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

தென் கொரியா மற்றும் ஜெர்மனி நாடுகள் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸில், இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின் நாடுகள் 3-வது இடத்தையும் ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகள் 4-வது இடத்தையும் பகிர்ந்துக்கொண்டுள்ளன. மிகவும் சக்தி வாய்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்கா 7-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா பாஸ்போர்ட்டுடன் 185 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். இதே இடத்தை பிரிட்டனும் பிடித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, பாகிஸ்தான் மற்றும் ஏமன் உள்ளிட்டவை குறைந்த சக்திவாய்ந்த நாடுகளாக பட்டியலின் கடைசி இடத்தில் இருக்கின்றன. ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்டுடன் 26 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி பயணிக்க முடியும். உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், விமான சேவைகளை பல நாடுகளும் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் தரவரிசை

1. ஜப்பான், சிங்கப்பூர் (192)

2. ஜெர்மனி, தென் கொரியா (190)

3. பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின் (189)

4. ஆஸ்திரியா, டென்மார்க் (188)

5. பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், சுவீடன் (187)

6. பெல்ஜியம், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து (186)

7. செக் குடியரசு, கிரீஸ், மால்டா, நார்வே, பிரிட்டன், அமெரிக்கா (185)

8. ஆஸ்திரேலியா, கனடா (184)

9. ஹங்கேரி (183)

10. லிதுவேனியா, போலந்து, ஸ்லோவாக்கியா (182)

குறைந்த சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள்:

1. ஈரான், லெபனான், இலங்கை, சூடான் (41)

2. வங்கதேசம், கொசோவோ, லிபியா (40)

3. வட கொரியா (39)

4. நேபாளம், பாலஸ்தீன பிரதேசம் (37)

5. சோமாலியா (34)

6. ஏமன் (33)

7. பாகிஸ்தான் (31)

8. சிரியா (29)

9. ஈராக் ( 28)

10. ஆப்கானிஸ்தான் ( 26)

Leave A Reply

Your email address will not be published.