ஆபாசப் படம் எடுத்து ஆண்களிடம் பணம் பறித்த கும்பல்:ஆணும் ஒரு பெண்ணும் கைது.

ஆண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி, அவர்களின் நிர்வாணப்
படங்களை நூதனமாகப் பெற்று பின்னர், அவற்றினை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த இருவர் இலங்கை அக்கரைப்பற்று பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் கணவனை இழந்த மூன்று பிள்ளைகளின் தாய் என்றும், மற்றையவர் திருமணமான ஆண் எனவும் காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை பொலிஸாரால் அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோது, இருவருரையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்கள் சூழ்ச்சியில் மாட்டிக்கொண்ட ஆண் ஒருவரிடம் ஐந்து லட்சம் இலங்கை ரூபாய் பணத்தை மிரட்டிக் கேட்ட மேற்படி நபர்கள், அந்தப் பணத்தை குறிப்பிட்டதொரு இடத்தில் வைக்கச் சொல்லி விட்டு, பின்னர் அதனை எடுப்பதற்கு முயற்சித்த போதே, அங்கு மறைந்திருந்த பொலிஸாரிடம் அகப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட ஆண், ஏற்கனவே இந்தப் பெண் தரப்பிடம் ஆறு லட்சம் இலங்கை ரூபாய் பணத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது முகத்தை கடைசி வரை காண்பிக்காமல் தொலைபேசி மூலம் ஆண்களைத் தொடர்புகொண்டுள்ள மேற்படி பெண், ஆபாசமாக அந்த ஆண்களை வீடியோ அழைப்பில் நிர்வாணமாக நிற்கும்படி செய்து, அதனை நூதனமாக அந்தப் பெண் தனது கைபேசியில் பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்தப் படங்களை வைத்து, மிரட்டி பெருந்தொகைப் பணம் பெற்று வந்துள்ளார் என பி.பி.சி தமிழிடம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கைதான பெண்ணிடமிருந்து பொலிஸார் கைப்பற்றிய செல்பேசியில், அரச உயர் பதவிகளிலும், பெரும் பதவிகளிலும் உள்ள சிலரின் நிர்வாணப் படங்கள் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

ஆயினும், அவர்களிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில், இதுவரை தகவல்கள் எவையும் பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை.
அம்பாறை மாவட்டம் – ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ‘கட்டார் சிற்றி’ எனும் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருமே இந்த மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் மாமா, மருமகள் உறவுடையவர்கள் என்றும் (கைது செய்யப்பட்டுள்ள ஆணுக்கு கைதாகியுள்ள பெண், சகோதரியின் மகளாவார்) இவர்கள் கணவன் – மனைவி போல் நடித்து, இவர்களிடம் சிக்கிய நபரிடம் மிரட்டிப் பணம் பறித்துள்ளனர் எனவும் காவல் துறை மூலம் பி.பி.சி தமிழுக்குத் தெரியவருகிறது.

படத்தை வைத்து மிரட்டினர்: பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம்
இந்த மோசடியில் சிக்கி, ஏற்கனவே 06 லட்சம் ரூபாய் பணத்தை பறிகொடுத்த ஒருவர், அக்கரைப்பற்று காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடைப்படையில்தான் சந்தேக நபர்கள் சிக்கினர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட நபரை சந்தித்து பி.பி.சி தமிழ் பேசியது.
நடந்த விடயங்களைக் கூறுவதற்கும் தன்னிடமுள்ள சில ஒளிப்பதிவுகளை கேட்பதற்கும் தரச் சம்மதித்த அவர், தன்னுடைய பெயர் மற்றும் ஊர் ஆகிய அடையாளங்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 42 வயதுடைய திருமணமான இந்த நபர், ஆறு லட்சம் ரூபாய் பணத்தை மேற்படி மோசடித் தரப்பிடம் பறிகொடுத்த நிலையில், மீண்டும் பணம் கேட்டு மிரட்டப்பட்டபோது காவல்துறை உதவியை நாடியிருக்கின்றார்.

“மூன்று வருடங்களுக்கு முன்னர் பாத்திமா ஷிபானி எனும் பேஸ்புக் கணக்கிலிருந்து எனக்கு நட்பு அழைப்பொன்று வந்தது. அதனை நான் ஏற்றுக் கொண்டேன். எனது பேஸ்புக் பக்கத்தில் என்னுடைய கைப்பேசி இலக்கத்தைப் பதிவு செய்துள்ளேன். ஒருநாள் பெண் ஒருவர் என்னிடம் பேசினார். அவர் தன்னை ‘சானாஸ்’ என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அந்தப் பெண் என்னிடம் ஆபாசமாகப் பேசினார். ஒரு கட்டத்தில் நானும் அவ்வாறே பேசத் தொடங்கினேன். ‘நீ’ என்று என்னை அவர் அழைக்குமளவுக்கு அந்தப் பேச்சு நாளடைவில் நெருக்கமானது.

ஒரு நாள் என்னை நிர்வாணமாகப் பார்க்க வேண்டுமென அவர் என்னிடம் கேட்டார். நான் கீழ் உள்ளாடையுடன் ‘வீடியோ கால்’ முன்பாகத் தோன்றினேன். அப்போதும் அவர் தனது முகத்தைக் காட்டவில்லை. நான் அவ்வாறு தோன்றியதை எனக்குத் தெரியாமல் அந்தப் பெண் ‘ஸ்க்ரீன் ஷாட்’ (Screen shot) ஆகப் பதிவு செய்து கொண்டார் என்பதை பின்னொரு நாளில்தான் தெரிந்து கொண்டேன்.

இது நடந்து கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வேறொரு பெண் குரல் என்னிடம் பேசியது. முன்னர் பேசிய பெண்ணின் நண்பி என்று – அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நான் உள்ளாடையுடன் தோன்றிய படம் தன்னிடமும் உள்ளதாக அவர் என்னிடம் கூறினார். பிறகு அவரும் என்னுடன் ஆபாசமாகப் பேசத் தொடங்கினார் நானும் பேசினேன்.
கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி இரண்டாவதாகப் பேசிய பெண் என்னை செல்பேசியில் அழைத்து, தனக்கு அவசரமாக ஐந்து லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகக் கூறி, அதனை வழங்குமாறு என்னிடம் கேட்டார். மேலும் அதனை டிசம்பர் மாதம் திருப்பி வழங்கி விடுவதாகவும் கூறினார். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்றேன்.

பிறகு முதலாவதாகப் பேசிய பெண்ணும் இது தொடர்பில் என்னிடம் கதைத்தார். அவரின் கைபேசியில் இருந்த எனது உள்ளாடைப் படத்தை அவரின் நண்பி களவாக எடுத்து விட்டார் என்றும், அவர் கேட்பது போல் பணத்தை கொடுத்து விடும்படியும் சொன்னார். நான் முடியாது என்றேன்.
பணம் கொடுக்காமல் விட்டால் எனது படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக இரண்டாவதாகப் பேசிய பெண் என்னை மிரட்டினார். அப்படி படம் வெளியானால் மானம் போய்விடும் என்று பயந்தேன். அதனால் மிகவும் கஷ்டப்பட்டு பணத்தை திரட்டினேன்.
கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி இரண்டாவதாக பேசிய பெண்; ஒலுவில் – கட்டார் சிற்றியிலுள்ள ஒரு வளவினுள் இரவு 7.30 மணியளவில் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு போகச் சொன்னார். அதன்படி செய்தேன்.

அந்தக் காசை இழந்து இரண்டு வாரம் கழிந்திருக்கும். மீண்டும் இரண்டாவதாகப் பேசிய பெண்ணிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு கைபேசி வாங்க வேண்டுமெனக் கூறி, என்னிடம் அவர் 40 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார்.
அத்தோடு எனது விந்து தடவப்பட்ட என்னுடைய கீழ் உள்ளாடையொன்றை அவர் சொல்லும் இடத்தில் வைக்கச் சொன்னார். பணத்தை ‘ஈசி கேஷ்’ (eZ cash) வழியாக (கைபேசி வழியாக பணம் பரிமாறும் செயலி) பணத்தை அனுப்பி வைத்ததோடு, அவர் கேட்டபடி எனது உள்ளாடையையும் அவர் சொன்ன இடத்தில் வைத்து விட்டு வந்தேன்.”

இரண்டு வாரங்களுக்குப் பின்னர், வெளிநாட்டுக்குச் சென்றிருந்த தனது கணவர் ஊர் வந்து விட்டதாக இரண்டாவது பெண் கூறினார். இடையில் முதலாவதாகப் பேசிய பெண், தனக்கு 10 ஆயிரம் ரூபா பணம் கேட்டார்; அனுப்பினேன். இது இவ்வாறிருக்க இவர்கள் இருவரின் தொலைபேசிக்கும் ஒவ்வொரு வாரமும் தலா 100 ரூபாய் ரீலோட் செய்து வந்தேன்.
ஒரு நாள் ஆண் ஒருவர் எனது கைபேசிக்கு அழைப்பெடுத்து, என்னுடன் இரண்டாவதாகப் பேசிய பெண்ணின் கணவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரின் மனைவியை நான் கெடுத்து விட்டதாகவும் காவல் நிலையம் செல்லப் போவதாகவும் என்னை மிரட்டினார்.
நான் மிகவும் பயந்து விட்டேன். ஒரு கட்டத்தில் எனக்கு மாரடைப்பு வந்துவிடுமோ என்று அச்சப்பட்டேன். போலீசுக்குப் போக வேண்டாம் என்றும், எது வேண்டுமானாலும் நான் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவரிடம் கூறினேன்.

அவர் ஜப்பான் செல்லவுள்ளதாகவும் அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும் கூறி, அந்தப் பணத்தை என்னிடம் கேட்டார். தருகிறேன் என்றேன். ஆனாலும், அவ்வளவு தொகைப் பணம் என்னிடம் இருக்கவில்லை.

பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. அக்கரைப்பற்றிலுள்ள எனது நண்பர் ஒருவரைச் சந்தித்து நடந்தவை அனைத்தையும் கூறினேன். அவர் என்னை நட்புடன் திட்டினார். பிறகு அரசியல் அதிகாரத்திலுள்ள ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்று விடயத்தைச் சொன்னார்.
அந்த அரசியல்வாதி என்னை கடந்த 28ஆம் திகதி அக்கரைப்பற்று காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் அழைத்துச் சென்றார். நடந்தவை அனைத்தையும் அங்கு கூறினேன். சம்பந்தப்பட்ட நபர்களை பிடிப்பதற்கான திட்டம் அங்கு தீட்டப்பட்டது” என்றார் பாதிக்கப்பட்ட அந்த நபர். மொத்தமாக ஆறு லட்சம் ரூபாயை இழந்த நிலையில்தான், மேற்படி நபரிடம் மீண்டும் ஐந்து லட்சம் ரூபாய் பணம் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைதானவர்கள் சிக்கியது எப்படி?

கடந்த மாதம் 29ஆம் திகதி, குறித்த நபரின் முறைப்பாடு அக்கரைப்பற்று போலிஸ் நிலையத்தில் பதியப்பட்டது. அன்று இரவு 7.00 மணிக்கு தாங்கள் கேட்ட பணத்தை ஒலுவில் – கட்டார் சிற்றியிலுள்ள ஓர் இடத்தில் வைக்குமாறு சந்தேக நபர்கள் ஏற்கனவே சொல்லியிருந்தார்கள்.
அதுபோலவே செய்வதென பொலிஸார் முடிவு செய்தனர். ஆனால், பணத்துக்குப் பதிலாக கடுதாசிப் பொதியொன்றை வைத்தனர். அன்று இரவு 7.00 மணியளவில் தான் கொண்டு வந்த ‘பொட்டலத்தை’ குறித்த இடத்தில் பாதிக்கப்பட்ட நபர் வைத்தார். அதற்கு முன்பதாகவே அந்த இடத்துக்கு அக்கரைப்பற்று காவல் நிலையத்தின் பெருங்குற்றப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஐவர் – சிவில் உடையில் வந்து, மறைவில் காத்திருந்தனர்.

பணம் வைக்கச் சொன்ன நபரை பாதிக்கப்பட்ட நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டார். உரிய இடத்தில் பணத்தை வைத்து விட்டதாகக் கூறினார். உடனே அவரை அந்த இடத்திலிருந்து கிளம்புமாறும், 10 கிலோமீட்டர் தூரத்திலுள்ள நிந்தவூர் பிரதேசத்துக்குச் சென்று, அங்கு நிற்பதை உறுதிப்படுத்தும் வகையில் கைபேசி மூலம் ‘லொகேசன் ஷேர்’ செய்யும் படியும் பாதிக்கப்பட்ட நபரிடம் பணம் பறிக்கும் கும்பல் கூறியுள்ளது. அவரும் அவ்வாறே செய்துள்ளார்.
கைதானவர்கள் பிறகு அங்கு என்ன நடந்தது என்பதை போலீசார் விவரித்தனர்.

“நாம் இருளில் மறைந்திருந்தோம். இரவு 7.30 மணியிருக்கும். பணம் வைக்கப்பட்டிருந்த இடத்தைக் கடந்து, முன்னாலுள்ள வீதியில் மோட்டார் பைக் ஒன்று சென்றது. சற்று தூரம் சென்ற அந்த பைக் திரும்பி, பணம் வைக்கப்பட்ட வளவுக்கு முன்னால் வந்து நின்றது.
அந்த பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து வந்த நபர் இறங்கிச் சென்று, ‘போலிப் பணப் பொதி’யை எடுத்தார். நாங்கள் உடனடியாக அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தோம். அவர் ஒரு பெண். பைக் ஓட்டி வந்தவர் ஆண். அவரையும் கைது செய்தோம்” என்றனர்.
கைது செய்யப்பட்டவர் தன்னுடன் இரண்டாவதாகப் பேசிய பெண் குரலுக்குரியவரே என, பாதிக்கப்பட்ட நபர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் பிபிசிக்கு கிடைத்த சில குரல் பதிவுகளை பிபிசி செய்தியாளர் கேட்டார். அவற்றில் ஒன்றுக்கும் மேலான பெண்களின் குரல்கள் இருப்பதாக உணர முடிகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து பொலிஸார் கைப்பற்றிய கைப்பேசியில் பல ஆண்களின் நிர்வாணப் படங்கள் இருந்துள்ளன. அவற்றில் மிக உயர்ந்த அரச பதவிகளை வகிக்கும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சில நபர்களின் படங்களும், அரசியல்வாதி மற்றும் சமயத் தலைவர் உள்ளிட்டவர்களின் படங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களும் மேற்படி சந்தேக நபர்களிடம் பணத்தை இழந்துள்ளனரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில் இந்தக் கும்பலிடம் பணத்தை வேறு யாராவது இழந்திருந்தால், அவர்களும் முறையிடலாம் எனவும் காவல்துறை தரப்பு கூறுகிறது.

இந்தப் பின்னணியில், நேற்று முன்தினம் (01ஆம் தேதி) இரவு, அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர், சுமார் 20 லட்சம் ரூபாய் பணத்தையும் ஆறு பவுண் நகையினையும் மேற்படி பெண்ணிடம் இழந்ததாகக் கூறி முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக, அக்கரைப்பற்று போலீசார் தரப்பு தெரிவிக்கின்றது.
மேற்படி கும்பல் சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்களை ஆபாச வலையில் சிக்க வைத்து, பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல்துறை தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.