கோட்டா பயம் : சஜித் பயம் – உபுல் ஜோசப் பெர்னாண்டோ

கோட்டாவின் வாய் பொய் சொன்னாலும் , கோட்டாவின் நாக்கு பொய் சொல்லாது என்பதே உண்மை. இவர் கடந்த புதன்கிழமை சர்ச்சைக்குரிய உரை ஒன்றை நிகழ்த்தினார். அவரது உரையில் மூன்று விடயங்கள் மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.

ஆனால் அந்த மூன்று விடயங்களையும் மறைமுகமாக  அவரது பேச்சில் முன் வைத்துள்ளார். பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் தலைவரான தன்னால் அந்த மூன்று விடயங்களையும் பகிரங்கமாக சொல்ல முடியாது என்பதை அறிந்தே ,  அவர் அந்த மூன்று விடயங்களையும் மறைமுகமாக முன்வைக்கிறார்.

‘அந்த மூன்று சொல்லப்படாத விடயங்களான ரகசியங்கள் என்ன?

முதலாவதாக, அடுத்த தேர்தலில் பொதுஜன முன்னணி (மொட்டு கட்சி) தோற்கடிக்கப்படும் என்பதை அவர் அவரது பேச்சுக்குள் ஒப்புக்கொண்டுள்ளார்.

மக்கள் முன்னணியின் நிலையை காப்பாற்ற நினைக்கும் கோட்டா ‘தோல்வியுற்றால்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

தானும் , இன்றைய அரசும் தோல்வியடைந்துவிட்டதாகவும், வேறோர் கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியாது என்றும் அவர் மேலோட்டமாக தெரிவிக்கிறார். அடுத்த மூன்றாண்டுகளில் தன்னாலும் , அரசாங்கத்தாலும் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்தவர் போல் , தன்னை மக்கள் தோற்கடித்தால் , அடுத்து ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டிய ஒரு கட்சி குறித்து மக்களுக்கு மேலோட்டமாக ஆலோசனை வழங்கியுள்ளார்.

இரண்டாவதாக, அவர் அடுத்து தெரிவாகப் போகும்  ஜனாதிபதி குறித்து பேசாமல் , ஒரு குழுவைப் பற்றி பேசுகிறார். ஒரு குழுவைப் பற்றி என்பதானது , அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஒரு பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பது அவரது பேச்சிலிருந்து வெளிப்படுகிறது.

இதுவரை கால இலங்கை அரசியல் வரலாற்றில் , ஒரு கட்சியை தலைமை தாங்கி கட்சியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லாது , திடீரென ஜனாதிபதி ஆன ஒவ்வொருவரும் தனது முதல் பதவிக்காலம் முடிவதற்குள் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல அஞ்சினர்.

எனவே அப்படி பதவிக்கு வந்தோர் , எப்போதுமே தமது பதவிக் காலத்துக்கு முன் , பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்லவே முயற்சி செய்துள்ளார்கள்.
தற்செயலாக. ரணசிங்க பிரேமதாசவின் படுகொலையின் காரணமாக டி.பி. விஜேதுங்க திடீரென ஜனாதிபதியானார்.

அவரை ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லுமாறு ஐ.தே.க. அரசாங்கத்திற்குள் இருந்து அழுத்தங்கள் இருந்தபோதிலும், அவர் அப்படி செய்யாது , பொதுத் தேர்தலை நடத்தவே விரும்பினார்.

முதலில் தனது கழுத்தைக் கொடுப்பதை விட , பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி நிலையை அறிந்து கொள்வது நல்லது என அவர் நினைத்திருக்கலாம்.

நேரடியாக  ஜனாதிபதி தேர்தலுக்குச் சென்றால் , ஐதேக கட்சியின் பிரேமதாச ஆதரவாளர்களால் தான் தோற்கடிக்கப்படலாம் என விஜேதுங்க அஞ்சினார்.
2015ஆம் ஆண்டு திடீரென ஜனாதிபதியான மைத்திரிபாலவும் அவ்வாறே நினைத்தார்.

19வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு நான்கு வருடங்களுக்கு முன் பாராளுமன்றத்தை கலைக்க தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் அச்சத்தில் , அரசியலமைப்பை கூட பொருட்படுத்தாமல் மைத்ரிபால பாராளுமன்றத்தைக் கலைத்தார். அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பினார். அவருக்குள்ளும் பயம் ஏற்பட்டு இருந்தது.

தான் தேர்தலுக்குச் சென்றால், தன்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்த ஐ.தே.கட்சியே தன்னைத் தோற்கடித்துவிடும் என அன்று மைத்திரிபாலவும் அஞ்சினார்.
அதுபோன்ற பயம் இன்று கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ளதா என சரியாக தெரியவில்லை. ஆனால்  ‘நான்  ஜனாதிபதியாகி உங்களை (பாராளுமன்றத்தில் உள்ளோரை) வெற்றியடைய வைத்தேன். ஆனால் நீங்கள் என்னை இரண்டாவது தவணைக்கு ஜனாதிபதியாக்க விரும்பவில்லையா என்று கோத்தபாய கேள்வி எழுப்புகிறாரா என்ற சந்தேக பேச்சே அவரிடமிருந்து வெளிப்பட்டுள்ளது. 

மைத்திரி செயல்பட்டது  போல ‘செய்றன் பார்’ என கோட்டாவும் திடீர்த் பொது தேர்தலுக்குச் செல்ல முயற்சிக்கலாம்.

இந்நிலையில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படும் நிலையை ,  அவரது பேச்சிலிருந்து உறுதியாகக் கூற முடியும்.

அவசர அவசரமாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்துவது பற்றி அவர் மனதில் ஒரு எண்ணம் ஏற்பட்டு இருந்திருந்தால், அவர் ஒரு தனி நபரைப் பற்றித்தான் பேச வேண்டும், ஆனால் அவர் ஒரு குழுவை பற்றி பேச வேண்டியதில்லை. அவர் அடுத்த நாடாளுமன்ற ஆட்சி குறித்து பேசுகிறார். அதனாலேயே ஏனைய தேர்தல்களுக்கு முன் பொதுத் தேர்தல் ஒன்று  வரும் வாய்ப்புகளே அதிகமாக தெரிகிறது.

மூன்றாவது இரகசியம் அடுத்த பொதுத் தேர்தலில் அல்லது ஜனாதிபதித் தேர்தலில் சஜித் தலைமையிலான  ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்தே உள்ளது. எனவேதான் முன்னையவர்களுக்கு, அதாவது முன்னர் ஆட்சிகளில் இருந்தோருக்கு  வாக்களிக்காதீர்கள் என்கிறார்.
கோட்டா இராணுவத் தலைவராக இருப்பதால் , அவர் உளவுத்துறை அறிக்கைகளை பெரிதும் நம்பியிருக்கும் ஒருவராவார் . உளவுத்துறை தகவல்கள் மூலம் அடுத்த தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் என அவர் உணர்ந்திருக்க வேண்டும் என நன்கு தெரிகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் ,  கோட்டாவின்   அரசியல் நிகழ்ச்சி நிரல் தகர்த்துவிட்டதை ஒப்புக்கொள்ளும் கோட்டா , ஐக்கிய மக்கள் சக்தி பற்றி சற்று ஆவேசமாகவே பேசுகிறார். இப்படி ஒரு எதிர்க் கட்சியை தான் எதிர்பார்க்கவே இல்லை என்கிறார். அதாவது அவர் ,  தனக்கு அடக்கிப் போகக் கூடிய  எதிர்க் கட்சி ஒன்றை அவர் எதிர்பார்த்துள்ளார் என்பதே அவரது பேச்சில் துல்லியமாக வெளியாகிறது.

இரண்டு வருடங்களுக்குள் , அனைத்து அதிகாரமும் பெற்ற  சாதனை ஜனாதிபதி ஆணை மூலம் வரம்பெற்று அதிகாரத்தை கைப்பற்றிய தானும் , தனது மூன்றில் இரண்டு பங்கு பலம் கொண்ட அரசாங்கமும் ஐக்கிய மக்கள் சக்தியால் தகர்க்கப்பட்டுள்ளதை அவரே ஒப்புக்கொள்கிறார்.

சஜித் பிரேமதாச பலமான ஒருவர் இல்லை, ஐக்கிய மக்கள் சக்தி , ஒரு கட்சியே இல்லை, எதிர்க்கட்சி பலவீனமாக உள்ளது என்று கூறும் பண்டிதர்களுக்கு, அது உண்மையில்லை என்பதை ,  கோட்டாவின் அண்மைய உரை நல்லதொரு பதிலை கொடுத்துள்ளது.

கோட்டா – சஜித் இடையே ஒரு டீல் . அதாவது ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக சொல்லும் முட்டாள்களுக்கும் நல்லதொரு பதில் அவரது பேச்சிலிருந்து தெரிகிறது.

சஜித்தும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஆட்சிக்கு வரப்போவதை அறிந்து கோட்டா , அதிர்ச்சியடைந்துள்ளார் என்பது தெட்டத் தெளிவாகிறது. எனவேதான் முன்பு ஆட்சியில் இருந்தோர் எவருக்கும் வாக்களிக்காதீர்கள் ,  புதியதொரு கட்சியனரை தேர்வு செய்து வாக்களியுங்கள் என்கிறார். அப்படியே வாக்களித்தாலும்  ஐக்கிய மக்கள் சக்திக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள் என்கிறார்.
ஜே.வி.பியினர் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை.  ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கக் கூடாது எனும் அச்சத்தோடு பேசுகிறார். அடுத்த பொதுத்தேர்தலில் ,  ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், அவருக்கும் கூட ஜனாதிபதி பதவியை துறந்து வீட்டுக்குப் போக வேண்டிய நிலை ஏற்படும் என்பது தெரிந்தே உள்ளது.

எனவே ஜே.வி.பி ஓரளவு அதிக ஆசனங்களைப் பெற்றால் கூட , அடுத்த அரசாங்கத்தை கலப்பு சாம்பார் அரசாக இணைந்து நடத்த முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

அதனால்தான் முன் ஆட்சி செய்த எவருக்கும் வாக்குகளை கொடுக்காதீர்கள் என்று சற்று கடும் தொனியில் பேசுகிறார். எதிர்க்கட்சியாக இருந்து வரும் ஐக்கிய மக்கள் சக்தி ,  ஆட்சியமைத்து தன்னை தொடர்ந்து ஜனாதிபதியாக ,  ஆள அனுமதிக்கவில்லை என்றால், தனது ஜனாதிபதி பதவிக்கு நேரப் போகும் மோசமான நிலையை அவர் பதட்டமாக கூக்குரலிட்டு சொல்கிறார்.

சஜித் பலமான ஒருவர் இல்லை, ஐக்கிய மக்கள் சக்தி மாற்று சக்தியே இல்லை. எதிர்க் கட்சி பலவீனமாக உள்ளது என சொல்லும் பண்டிதர்களுக்கு உறைப்பது போல , தற்போதைய ஆட்சியையும் , கோட்டாவையும் , சஜித் தரப்பு முகம் குப்புற வீழ்த்தியுள்ளமையை காண முடிகிறது.

முன்னைய மைத்திரி – ரணில் அரசாங்கத்தைக் கைப்பற்றி ,  தமக்கான பிம்பத்தை உருவாக்கிக் கொண்டவர்கள்  அரசாங்கத்தைப் பாதுகாக்க எதனையும் செய்யாதவர்களாக இருந்தனர். யானை கட்சிக்கும் , ஐ.தே.க ஆதரவாளர்களுக்கும்  கூட எதனையும் செய்யவிடாதபடி தடுத்தோர் ,  பொதுத் தேர்தலில் வெல்லாது தேசியப்பட்டில்கள் வழி உள்ளே புகுந்து கொண்டவர்களாகவே இருந்தனர்.

ரணிலும் தனது கட்சித் தலைமையைப் பாதுகாத்துக் கொள்ள ,  ஐக்கிய தேசியக் கட்சியினரை முற்றிலுமாக ஓரங்கட்டி , ஐதேக சாராத அவர்களைத்தான் நெருக்கமாக்கிக் கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தல் களத்தில் கடுமையாக பாடுபட்டனர். ஆனால் ரணில் தனது கட்சியினருக்கு கடைசிவரை எதையும் செய்யவில்லை.

சஜித் , ஐக்கிய தேசியக் கட்சியை மிகவும் நேசிப்பவர் என்பது ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு முறை நடந்த ,  ஐதேக மாநாடுகளிலும் துயரத்தோடு இருக்கும்  ஐ.தே.க.வினர் பற்றி  சஜித் பேசி வந்துள்ளார். அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான ஐ.தே.க.வினர் பற்றியும்  பேசி வந்துள்ளார். வெட்டினாலும் தாங்கள் பச்சை UNP காரர்கள் என இருந்தோர் UNPயை விட்டு வெளியேறி சஜித்தை பின் தொடரத் தொடங்கியுள்ளனர்.

ஏனெனில் அவர் , தனது கட்சியினரை நேசிக்கிறார் என்பதை அவர்கள் முழுமனதோடு அறிந்துள்ளனர். சஜித்தின்  ஆட்சியொன்று வந்தால் மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்த எவருக்குமே அரசாங்கப் பதவிகள் கிடைக்காது என்பது தெரியும். எனவே சஜித் பலமில்லாதவர் , எதிர்க்கட்சி பலவீனமானது என பலர் மூக்கால் அழுவது , அவர்களுக்குள் உள்ள அச்சத்தால்தான். ரணில் , அன்று அப்படியானவர்கள் சொல்வதைக் கேட்காது ஐ.தே.க.காரரை நம்பியிருந்திருந்தால் , ரணில் எப்போதோ ஜனாதிபதியாகியிருப்பார்.

சஜித் , ரணில் செய்தது போன்ற முட்டாள்தனத்தை செய்யப்போவதில்லை. அதனாலேயே அவரை சுற்றி வளைத்து தாக்குகிறார்கள். கடந்த சில வாரங்களாக நடந்து வரும் போராட்டங்களை தடுக்க , எவ்வளவு முயற்சி செய்தாலும் , பொது மக்கள் சஜித் தரப்பை சுற்றி இருப்பது சஜித் மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. உண்மையில், கொரோனாவினால் மிகப்பெரிய பாதகம் எதிர்க்கட்சிக்கும் , சஜித்துக்கும்தான்.

சஜித் கொழும்பில் இருந்து கொண்டு அலுவலகத்திற்குள் முடங்கிக் கொண்டு  கனவு மாளிகைகளை கட்டுபவர் அல்ல. ஊர் ஊராகச் சென்று ஊர் மக்களுடன் அரசியல் செய்கிறார். கொரோனா காரணமாக மக்கள் மத்தியில் செல்ல முடியாமல் அவரது இறக்கைகள் துண்டிக்கப்பட்டன. தற்போது மீண்டும் மக்களுடன் கலந்து ஆட்டத்தில் இறங்க ஆரம்பித்துள்ளார். மக்களுடன் டீல்களையும் ,  தொடர்புகளையும் ஏற்படுத்த தொடங்கியுள்ளார்.

அதனால்தான் முன்னர் ஆட்சியில் இருந்தோருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கோட்டா கூச்சலிடுகிறார்.
‘கோட்டா இன்னும் ஆறு வருடங்கள் இருப்பார். எஞ்சிய ஆறு வருடங்கள் நாமல் இருப்பார் . சஜித் , ஆட்சியொன்றை அமைக்க குறைந்தது 15 வருடங்கள் காத்திருக்க வேண்டி வரும்…..

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கும் , 2020 பொதுத் தேர்தலுக்கும் பின்னர் மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் பெரும் பதவிகளை வகித்த அநேகர் மேற்கண்டவாறு கூறி நாட்டை விட்டு வெளியேறினர். அவரவர் வேலைகளை அவர்களே கவனித்துக் கொண்டனர். சிலர் தற்போதைய அரசாங்கத்துடன் ஒப்பந்தமும் செய்து கொண்டனர். சில காலங்களுக்கு முன்னர் கோட்டா கம சமக பிலிசந்தர ( கிராமத்துடனான உரையாடல்) உரையாடலில் தனக்கு ஆட்சியில் இருக்க , இன்னும் 8 வருடங்கள் உள்ளன எனக் கூறினார். அவர் அப்போது , இரண்டாவது பதவி காலத்தையும் சேர்த்தே அப்படிச் சொன்னார். ஆனால் இன்று அவர் அப்படி சொல்வதை தவிர்த்து , தனது ஆட்சி சரியில்லை என்றால் முன் ஆட்சி செய்தோர் கையில் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டாம் என்கிறார்.
அது மட்டும் அல்ல. கொழும்பில் சஜித் தரப்பு நடத்தவிருந்த போராட்டம் ,  கொரோனா வர்த்தமானி மூலம் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது கோட்டாவும் , அரசாங்கமும் இந்தப் போராட்டத்திற்கு அஞ்சுகிறார்கள்.

அப்போது எதிர்க்கட்சியினருக்கு இருந்தது கோட்டா பயம்.
இப்போதோ கோட்டாவின் அரசாங்கத்துக்கு இருப்பது சஜித் பயம்.

உபுல் ஜோசப் பெர்னாண்டோ  (குருதாவிக்ரகய)
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.