ஜெய் பீம் விவகாரத்தில் சூர்யா திட்டமிட்டு எதையும் செய்திருக்க மாட்டார் – சீமான்

ஜெய் பீம் விவகாரத்தில் சூர்யா திட்டமிட்டு எதையும் செய்திருக்க மாட்டார் என சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனார் 85-ம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்வுக்கு பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஜெய் பீம் திரைப்படம் சர்ச்சை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்தவர், “ நான் படத்தை பார்த்தபோது எனக்கு அதுபோன்று எதுவும் தெரியவில்லை. கதையும், கதாப்பாத்திரத்திலும் என் கவனம் இருந்தது. மற்றவர்கள் இதுகுறித்து பேசியபோது எனக்கு தெரிந்தது. அக்னி கலசம் பாமகவின் குறியீடு என்பது உலகிற்கே தெரியும்.

ஜெய்பீம் படம் தொடர்பாக கவிஞர் ஜெயபாஸ்கரன்தான் முதலில் கேள்விகளை எழுப்பினார். உண்மை சம்பவத்தில் தொடர்புடைய அந்தோணிசாமி என்கிற பெயரை ஏன் மாற்ற வேண்டும். அதேபோல வன்னியர் சங்கத்தின் அடையாளமாக இருக்கும் அந்த குறியீட்டை ஏன் காலண்டரில் பயன்படுத்த வேண்டும். அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். நான் கவனித்திருந்தால் முன்பே அதனை நீக்க சொல்லியிருப்பேன் என்றார்.

நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவோம் என பா.ம.க நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். அதுகுறித்து அந்த கட்சி தலைமை எதுவும் கூறவில்லை. விவாதங்களில் கூட எட்டி உதைத்தால் என்ன தவறு என திரும்ப திரும்ப பேசுகிறார்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், “ இது அநாகரீகமான பதிவு. எனக்கு தெரிந்தவரை சூர்யாவுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது. அவர் கதை கேட்டிருப்பார். நடித்திருப்பார். பின்புலத்தில் என்ன இருக்கிறது என்பது கலை இயக்குநர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் தான் பார்ப்பார்கள். சூர்யா இது தெரிந்து செய்திருப்பாரா என்ன. சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காணத்தான் நினைப்பார்கள். புதிதாக ஒரு பிரச்னையை உருவாக்க நினைக்க மாட்டார்கள்.

சூர்யா திட்டமிட்டு எதையும் செய்திருக்க மாட்டார். தம்பி சூர்யாவை மிதியுங்கள்.. உதையுங்கள் என்பது எல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. அப்படி பதிவு செய்தவரை வேண்டுமானால் உதையுங்கள் நான் வேண்டுமானால் காசு தருகிறேன்.” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.