மீண்டும் முடங்கும் அச்சத்தில் ஐரோப்பா? : சண் தவராஜா

கொரோனாப் பெருந் தொற்றின் நான்காவது அலைத் தாக்குதலை (சில நாடுகளில் ஐந்தாவது அலை) எதிர்கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகளுள் ஒருசில தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களை இலக்கு வைத்து புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளன.

தடுப்பூசி பெற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதற்காகவும், மருத்துவமனைகளில் உருவாகும் நெருக்கடிகளைக் குறைக்கும் நோக்குடனுமே புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்வதாக அரசாங்கத் தரப்பில் இருந்து விளக்கங்கள் தரப்பட்டாலும், புதிய நடைமுறைகள் தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானவை, அரசமைப்புச் சட்டங்களுக்கு முரணானவை என்கின்ற குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

தடுப்பூசி பெற்றுக் கொள்வதை விரும்பாதவர்கள் தீண்டத் தகாதவர்கள் போன்ற ஒரு விம்பம் கட்டியமைக்கப்படுவதாகத் தெரிவிக்கும் அவர்கள், தெருவில் நடமாடவே அஞ்சும் நிலை உருவாகிவிடுமோ எனக் கவலை கொள்ளத் தொடங்கியுள்ளனர். இத்தகைய பின்னணியில் மேற்குலகின் விழுமியங்கள் கேள்விக்கு இலக்காகி உள்ளதாக கருத்தாடல்கள் நிகழ்வதை அவதானிக்க முடிகின்றது.

உலகில் முதல் நாடாக ஆஸ்திரியா கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதைக் கட்டயமாக்கியுள்ளது. பெப்ரவரி முதலம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருவதாக அரசாங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏலவே, தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களை இலக்கு வைத்து உள்ளிருப்பு விதிகள் அமுல் படுத்தப்பட்டிருந்தன.

நவம்பர் 15ஆம் திகதி அமுலுக்கு வந்த புதிய விதிகளின் பிரகாரம், தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் அல்லது கொரோனாத் தொற்றுக்கு ஆளாகிக் குணமடைந்தவர்கள் தவிர 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அவசிய தேவைகள் அன்றி வீடுகளை விட்டு வெளியே வர முடியாது. தொழிலுக்காவும், உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்யவும், மருத்துவ உதவிகளுக்காகவும், உடற்பயற்சி செய்வதற்காகவும் மாத்திரமே அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியும்.

விதிமுறைகளை மீறுவோர் காவல் துறையின் கண்காணிப்பின்போது கண்டுபிடிக்கப்பட்டால் ஐநூறு முதல் 1,450 ஈரோ வரை அபராதம் விதிக்கப்படும். அதேவேளை, புதிய விதிமுறைகளை மீறும் வர்த்தக நிறுவனங்களுக்கு 30,000 ஈரோ வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 நாட்களுக்கு மாத்திரமே பரீட்சார்த்தமாக புதிய உள்ளிருப்பு விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது. 19ஆம் திகதி வெளியான தகவல்களின் பிரகாரம் இந்த நடவடிக்கை 3 வாரங்களுக்கு நீடிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேவேளை, தடுப்பூசியைக் கட்டாயமாகப் பெற்றுக் கொள்ளாதோர் எவ்வாறு கையாளப்படுவார்கள் போன்ற விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

புதிய விதிகள் தொடர்பான அறிவித்தலை விடுத்த தலைமை அமைச்சர் அலெக்சான்டர் ஷல்லன்பேர்க், “இந்த முடிவு கடினமானது, ஆனாலும் மிகவும் அவசியமானது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கான அபாயம் மிகவும் அதிகமானது. எனவே, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாம் இந்த நடவடிக்கையை எடுத்தே ஆகவேண்டியுள்ளது. தயவு செய்து அனைவரும் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிடில், இந்த விசச் சுழலில் இருந்து நாம் தப்பிக்கொள்ள முடியாது” என்கிறார்.
புதிய நடைமுறைகள் காரணமாக ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் பாதிப்பை எதிர்கொள்வர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள நாடுகளுள் மிகக்குறைந்த எண்ணிக்கையிலானோர் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நாடுகளுள் ஒன்றாக ஆஸ்திரியா விளங்குகின்றது. அந்த நாட்டில் இதுவரை 65 விழுக்காடு மக்கள் மாத்திரமே தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில், 5 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியையும் அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், நெதர்லாந்தும் கடுமையான உள்ளிருப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளில் தளர்வை அறிவித்திருந்த நெதர்லாந்து அரசாங்கம் ஓரிரு வாரங்களுக்கு முன்னரேயே – மிகுந்த தயக்கத்துடன் – அவற்றை மீள் அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் நவம்பர் 12ஆம் திகதி முதல் இறுக்கமான நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிகளின் பிரகாரம் உணவகங்கள், மதுபானச் சாலைகள், பெரும்பாலான அங்காடிகள் போன்றவை மாலை 7 மணியுடன் மூடப்படும். மக்கள் தமது வீடுகளுக்கு 4 விருந்தினர்களை மாத்திரமே அனுமதிக்கலாம். விளையாட்டு நிகழ்வுகள் பார்வையாளர்கள் இன்றியே நடைபெறும்.

புதிய விதிகளை அறிமுகம் செய்த காபந்து தலைமை அமைச்சர் மார்க் றுற்றே தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், “கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒரு கவலைக்குரிய செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கொரோனாத் தீநுண்மி அனைத்து இடங்களிலும் உள்ளது. எனவே, அதனோடு அனைத்து இடங்களிலும் போராட வேண்டும்” என்கிறார்.

கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை இலக்கு வைத்து புதிய நடைமுறைகளை அறிவிக்கும் நாடுகளின் வரிசையில் செக் குடியரசும் இனைந்து கொள்கிறது. அந்த நாட்டில் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் புதிய நடைமுறைகள் அமுலுக்கு வருகின்றன. புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்த தலைமை அமைச்சர் அன்டரேஜ் பாபிஸ், “மரண வீதம் அதிகரிக்கின்றது. நிலைமை மோசமாகின்றது. தடுப்பூசியைத் தவிர வேறு தீர்வு இல்லை” என்கிறார்.

செக் குடியரசைப் பொறுத்தவரை அங்கே 60 விழுக்காடு மக்கள் மாத்திரமே தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய நாட்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவற்றிலும் கொரோனாத் தொற்றின் வேகம் வெகுவாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிந்தது. குளிர்காலத்தில் இத்தகைய அதிகரிப்பு நிகழும் என்பது எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும் கூட, தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும், எனவே தொற்றுவீதம் குறையும் என்ற நம்பிக்கை அரசாங்கங்களிடம் இருந்தது. ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று அவ்வாறு தடுப்பூசி பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுவிடவில்லை. மாறாக, தடுப்பூசிச் சான்றிதழ் வலியுறுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டங்களே அதிகம் நிகழ்ந்து வருகின்றன.

நவம்பர் 12ஆம் திகதிய நிலவரப்படி யேர்மனியில் தினசரி தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை 50,377 ஆக இருந்தது. ஆஸ்திரியாவில் இந்த எண்ணிக்கை 13,152 ஆகவும், நெதர்லாந்தில் 16,364 ஆகவும் பதிவாகியிருந்தது. ஒரு வாரத்தில் ஒரு இலட்சம் பேரில் பாதிக்கப்படுவோரின் விழுக்காடு என்ற கணக்கீட்டின்படி ஆஸ்திரியாவில் 807 பேரும், நெதர்லாந்தில் 556 பெரும், யேர்மனியில் 309 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, ஐரோப்பியக் கண்டத்தில் இந்த வீதம் ஒரு இலட்சம் பேருக்கு 971.5 என்பதாக இருக்கிறது.
உலகின் பல பாகங்களிலும் கொரோனாத் தடுப்பூசிக்காக ஏங்கும் மக்கள் இருக்கையில், ஐரோப்பாக் கண்டத்தில் தடுப்பூசியை வலிந்து திணிப்பதை அவதானிக்க முடிகின்றது. இது ஒருவகையான முரண்நகையே. உலகம் ஒரு பூகோளக் கிராமம் எனச் சொல்லிக் கொண்டாலும் மக்கள் மனநிலை என்னவோ வெவ்வேறாகவே இருக்கின்றது. ஐரோப்பியப் பண்பாடு ஏனைய பிராந்தியங்களோடு ஒப்பிடுகையில் அதிக சுதந்திரம் கொண்டதாக இருப்பதாலேயே இத்தகைய நிலை இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் தனிநபருக்குக் கிடைக்கவுள்ள அனுகூலங்கள் பற்றிப் பரப்புரை செய்யாமல், பொதுவில் என்ன நன்மை கிடைக்கும் என்ற அடிப்படையிலான பரப்புரைகளை மேலைத்தேய அரசாங்கங்கள் முன்னெடுப்பதாலேயே இத்தகைய நிலை உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.

காரணம் எதுவாக இருந்தாலும், ஐரோப்பிய அரசாங்கங்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் அவை கொரோனாத் தடுப்பு விடயத்தில் பொறுமையை இழந்து வருவதையே குறித்து நிற்கின்றன. அரசாங்கங்களின் நடவடிக்கைகள் அடுத்து எத்தகைய எல்லைவரை
செல்லும் என்பதை அடுத்துவரும் நாட்களில் நிச்சயம் தெரிந்துகொள்ள முடியும். ஆஸ்திரியா விடுத்துள்ள அறிவிப்புகள் இத்தகைய நடவடிக்கைகளின் எதிர்காலம் தொடர்பான செல்நெறியைக் காட்டி நிற்கிறது என்பது மாத்திரம் தெளிவாகப் புரிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.