வாகனங்களின் பிஎச் பதிவு: மாநிலங்களுக்கு மற்றொரு நிதி இழப்பு ஆபத்து?

மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த பிஎச் வாகனப் பதிவு நடைமுறை, மாநிலங்களுக்கு மற்றொரு நிதி இழப்பு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்தப் புதிய நடைமுறை குறித்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன. உதாரணமாக, சாலை வரி என்பது ஒரு மாநிலத்தின் உரிமைக்குள்பட்டது. அதனை பிஎச் வாகனப் பதிவு முறையில், மத்திய அரசு எவ்வாறு கையாளும். 15 ஆண்டுகளுக்குப் பதிலாக, இரண்டு ஆண்டுகளுக்கு வாகன வரி விதிப்பது என்பது, எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட நடைமுறை எனவும் சில மாநிலங்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசின் விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வாகனங்களின் பிஎச் பதிவு முறை, தமிழகத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம், மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதுவுமே.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மாநிலங்களின் வருவாய்க்கான முக்கிய ஆதாரங்களாக விளங்குபவை, பதிவுத் துறை, வாகனப் பதிவுத் துறை மற்றும் விற்பனை வரி. ஏற்கனவே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால், மாநில அரசுகள் விற்பனை வரி மூலம் கிடைக்கும் வருவாயில் இழப்பை சந்தித்து வருகின்றன. தற்போது, பிஎச் வாகனப் பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், வருவாய் ஆதாரமாக இருக்கும் வாகனப் பதிவுத் துறையிலும் வருவாய் இழப்பு ஏற்படலாம்.

தற்போது மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் வாகனப் பதிவுக் கட்டணம், பல மாநிலங்களில் வசூலிக்கும் வாகனப் பதிவு கட்டணங்களை விட சில சதவீதம் குறைவாகும். எனவே, மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறிவிடும் என்றே மாநில போக்குவரத்துத் துறையின் அச்சமாக உள்ளது.

சாலை வரி, வாகனப் பதிவுக் கட்டணம் போன்ற மாநில அரசுகளின் வருவாயில் இழப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் பிஎச் முறையில் மேலும் பல குறைபாடுகளும் உள்ளன.

அது குறித்து சில மாநிலங்களிலிருந்து வந்திருக்கும் சந்தேகங்கள் இவை..
ஒருவர் பிஎச் வாகனப் பதிவுக்காக விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பதாரர், அதற்கு தகுதியானவரா என்பதை எவ்வாறு பரிசோதிப்பது என்பதும் மிகப்பெரிய கேள்வியாக நீள்கிறது.

அதாவது, விதிமுறைப்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் மாநிலங்களுக்கிடையே பணியிட மாறுதல் பெறும் ஊழியர்கள் இந்த பிஎச் வாகனப் பதிவு முறைக்கு விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு ஊழியராக இருப்பின் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவது எளிது. ஆனால், தனியார் நிறுவன ஊழியர்கள் விண்ணப்பிக்கும் போது, அந்த ஊழியர் பணியாற்றும் நிறுவனம், 4 மாநிலங்களில் தங்களது கிளைகளைக் கொண்டிருக்கிறதா என்பதை எவ்வாறு உறுதி செய்ய முடியும்? அதற்கான வழிமுறைகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎச் பதிவெண் ஓர் அறிமுகம்

பணி நிமித்தமாக வெவ்வேறு மாநிலங்களில் அடிக்கடி குடிபெயா்வோா் தங்கள் வாகனங்களுக்கு ‘பிஎச்’ தொடரில் அமைந்த பதிவெண் முறையில் பதிவு செய்வதை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. இந்த புதிய வாகனப் பதிவெண் முறை 2021ஆம் ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது.

இந்தப் புதிய நடைமுறையின்படி பதிவு செய்யப்படும் வாகனங்களின் பதிவெண்கள் தற்போதிருப்பது போல் அல்லாமல், பிஎச் என்ற வரிசையில் அமைந்திருக்கும். இந்த பதிவெண் கொண்ட வாகனங்கள், நாடு முழுமைக்கும் பொருந்தும். இந்த பதிவெண் கொண்ட வாகனங்களை வைத்திருப்போர், நாட்டின் எந்த மாநிலத்துக்கு குடிபெயர்ந்தாலும், தங்களது வாகனப் பதிவெண்ணை மாற்ற வேண்டியது இல்லை.

பொதுவாக, வாகனங்கள் பதிவு செய்யப்படும் மாநிலங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கான எண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, தமிழகம் என்றால் டிஎன், மத்தியப் பிரதேசம் என்றால் எம்.பி. என்று வாகனப் பதிவெண் அமைந்திருக்கும்.

மத்திய அரசு அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோா் பணி நிமித்தமாக அடிக்கடி வேறு மாநிலங்களுக்கு குடிபெயர வேண்டிய நிலைமை உள்ளது.

அவ்வாறான சூழலில், குடிபெயரும் மாநிலத்துக்குச் சென்ற ஓராண்டுக்குள் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் வரி செலுத்தி, தாம் வைத்திருக்கும் வாகனத்துக்குப் புதிய வாகனப் பதிவெண்ணைப் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. வாகனத்தை வேறு மாநிலத்தில் மறுபதிவு செய்வதற்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மாநிலத்திலிருந்து தடையில்லாச் சான்று பெற்று வழங்க வேண்டியதும் மிக அவசியம்.

எதற்காக வாகனங்களில் பிஎச் பதிவெண்?

இந்த நடைமுறையை எளிதாக்கும் நோக்கில், ‘பிஎச்’ என்ற பாரத் தொடா் அடிப்படையிலான வாகனப் பதிவெண்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு இடையே அடிக்கடி குடிபெயா்வோா் தங்கள் வாகனங்களுக்கு மாநில அளவில் அல்லாமல், நாடு முழுவதும் பயணிக்கும் வகையில்‘பிஎச்’ என்ற வரிசைத் தொடா் அடிப்படையிலான பதிவெண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்.

எப்படி இருக்கும் பிஎச் பதிவெண்?

இந்த முறையில், வாகனம் முதலில் பதிவு செய்யப்படும் ஆண்டு (இரு இலக்கம்) – பிஎச் – வாகனத்துக்கான 4 இலக்க எண் – இரு ஆங்கில எழுத்துகள் என்ற வரிசையில் வாகனப் பதிவெண் அமையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. உதாணரமாக.. 21- பிஎச்-xxxx-AA.

இத்தகைய பதிவெண்ணைக் கொண்ட வாகனங்கள் மாநிலங்களுக்கிடையே எளிதில் குடிபெயர முடியும். ‘பிஎச்’ தொடா் அடிப்படையில் பதிவு செய்வதற்கு, வாகனத்தின் விலையைப் பொருத்து 8 முதல் 12 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனங்களுக்குக் கூடுதலாக 2 சதவீத வரியும், மின்சார வாகனங்களுக்கு 2 சதவீதம் குறைவான வரியும் விதிக்கப்படுகிறது.

அடிக்கடி, வேறு வேறு மாநிலங்களில் சென்று குடிபெயரும் மத்திய, மாநில ஊழியர்கள், பிஎச் பதிவெண் முறையை வரவேற்றாலும் கூட, மாநிலங்களுக்கான உரிமை மற்றும் வருவாய் மீதான மறைமுகத் தாக்குதலாக இந்த புதிய நடைமுறை இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது.

தற்போதுவரை, இந்த பிஎச் வரிசை கொண்ட வாகனப் பதிவெண்ணை நடைமுறைக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. மத்திய அரசின் பிஎச் வரிசை பதிவெண் முறையை நாட்டில் 15 மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளன. அதிலும் சில மாநிலங்கள் வருவாய் இழப்பைக் காரணம் காட்டி, அந்த திட்டத்திலிருந்து பின்வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய பதிவெண் முறை நடைமுறைக்கு வந்துவிட்டால், வேறொரு மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை புதிதாக பதிவு செய்யும் போது கிடைக்கும் கணிசமான வருவாய் குறைந்துவிடும், பிஎச் பதிவெண் கொண்ட வாகனங்கள், ஆயுள் கால (15 ஆண்டுகள்) வரியை செலுத்த வேண்டிய அவசியமில்லை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரி செலுத்தினால் போதும் என்பதால், வரி வருவாயில் பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.

செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், இதுவரை, நாடளவில் மிகச் சொற்ப வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே, நிதிச்சுமை, வருவாய் இழப்பு போன்றவற்றை சமாளித்து வரும் தமிழகத்தில், பிஎச் வாகனப் பதிவு முறை நடைமுறைப்படுத்துவது வருவாய் இழப்பை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுவது தவிர்க்க இயலாததுதான்.

வருவாய் இழப்பு, நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் தீர்க்கப்படும் வரை, அதற்கு மாறாக, வேறொரு மாநிலத்திலிருந்து கொண்டு வரும் வாகனங்களை பதிவு செய்ய மற்றும் தமிழகத்திலிருந்து வாகனத்தை வேறொரு மாநிலத்துக்கு கொண்டு செல்லும் போது மேற்கொள்ளப்படும் வாகனப் பதிவு முறையை கணினி முறையில் எளிமையாக்கும் நடைமுறையை தமிழக அரசு உடனடியாகக் கொண்டு வர வேண்டும். அதற்கு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், பிஎச் வாகனப் பதிவு முறைக்கு மிகச் சிறந்து மாற்று உபாயமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.