பிரியந்த குமாரவின் சடலம் இன்று இலங்கைக்கு…

பாகிஸ்தானில் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பிரியந்த குமாரவின் சடலம் இன்று (06) இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பாகிஸ்தான், பஞ்சாப் மாநில அரசின் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று காலை 10 மணியளவில் லாஹூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தில் அவரின் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 124 சந்தேக நபர்களில் 13 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தண்டனைச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை நேற்று பாகிஸ்தான் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சந்தேகநபர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிவில் சமூகத்திற்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளை கருத்திற் கொண்டு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ அந்தஸ்தை மறுபரிசீலனை செய்வதற்கான யோசனை ஒன்றை ஐரோப்பிய பாராளுமன்றம் தயாரித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானின் சியல்கோட்டில் உள்ள விளையாட்டு ஆடைத் தொழிற்சாலையின் பொது முகாமையாளர் பிரியந்த குமார என்பவர் தாக்கி கொலை செய்யப்பட்டு அவரது உடல் கடந்த வெள்ளிக்கிழமை எரியூட்டப்பட்டிருந்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு இரகசிய இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விசாரணைக்காக 160 சிசிடிவி கெமராக்களில் இருந்து 12 மணி நேரத்திற்கும் மேலான காட்சிகள் மற்றும் சம்பவ இடத்தில் இருந்தவர்களின் கைப்பேசி தரவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஆடைத் தொழிற்சாலையின் 900 ஊழியர்களுக்கு எதிராக ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தலைமறைவாக உள்ள சந்தேக நபர்களும் இதில் அடங்குவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.