ஒரே கல்லூரியில் பயிலும் 43 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

தெலுங்கானாவில் ஒரே கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவ, மாணவிகள் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 150 மாணவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவு வந்தபின்னர் தான் அவர்களுக்கு தொற்று உள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் சல்மேடா ஆனந்த் ராவ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் என்ற பெயரில் தனியார் மருத்துவ கல்லூரி உள்ளது. அங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர். சமீபத்தில் , கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது.

இதையடுத்து 200 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் வந்தநிலையில், மாணவர்களில் 43 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் 150 மாணவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

பெரும்பாலான விடுதி மாணவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நிர்வாகம் கல்லூரியை மூடிவிட்டு அனைத்து மாணவர்களையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளது. மார்ச்-ஜூன் மாதங்களில் திட்டமிடப்பட்ட தேர்வுகளையும் கல்லூரி நிர்வாகம் ஒத்திவைத்தது.

ஒரே கல்லூரியில் 43 மாணவ மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் அங்கு படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கொரோன பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.