வட மாகாணத்திலுள்ள பொதுமக்கள் சேவை ஸ்தாபனங்களின் அதிகாரிகளுக்கு ஆளுநர் எச்சரிக்கை.

வட மாகாணத்திலுள்ள பொதுமக்கள் சேவை ஸ்தாபனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு பொறுப்புக்கூறல், கடமையுணர்வு மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பில் ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பாணையொன்றை அனுப்பியுள்ளார்.

09.12.2021 எனும் திகதியிடப்பட்டு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் இந்த குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் கோர்ப்புகளை மற்றுமொருவருக்கு அனுப்பி, தமது வேலையை இன்னுமொருவர் செய்யும் வரை அதிகாரிகள் பார்த்துக்கொண்டு இருக்கின்றமை தொடர்பில் குறித்த குறிப்பாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கவனத்திற்கொண்டு பழிவாங்கல்களை முன்நிறுத்தியும் ஊழல் சிந்தனையுடன் மக்கள் சேவைக்கு தடை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் காணப்படுவதாகவும் நாட்டின் மக்கள் தொடர்பில் கரிசனையின்றி அவர்களை காயப்படுத்துகின்றமை ஏனைய அரச அதிகாரிகளையும் கவலையில் ஆழ்த்துவதாக வட மாகாண ஆளுநரின் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கணக்காய்வு மற்றும் விடயங்களை மறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், பாலியல் கவர்ச்சியும் பணிகளில் செல்வாக்கு செலுத்துவதாக ஆளுநர் ஜீவன் தியாகராஜா வௌியிட்டுள்ள குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டளைகளையும் வழிகாட்டுதல்களையும் மறந்துவிட்டு கடமையை செய்யாமல் இருப்பதற்கான காரணங்களுக்கு முன்னுரிமையளித்து அரசியல் மயப்படுத்தப்படுகின்றமை அபிவிருத்திக்கும் தடையாக இருப்பதாக வடமாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்சொன்ன காரணங்களால் அழுத்தத்தினை எதிர்நோக்குபவர்கள் உடனடியாக அது தொடர்பில் ஆளுநருக்கு அறிவிக்கும் பட்சத்தில், பாதுகாக்கப்படுவார்கள் எனவும் பொதுமக்கள் சேவை ஸ்தாபனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு வட மாகாண ஆளுநர் அனுப்பியுள்ள குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விவகாரங்களில் ஈடுபடுகின்றவர்கள் அவற்றினை முற்றாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள வட மாகாண ஆளுநர், அவ்வாறு நிகழாத பட்சத்தில் நிறுவனத்திலிருந்து வௌியேறுமாறும், இல்லையெனில் அவ்வாறானவர்கள் வௌியேற்றப்படுவார்கள் எனவும் குறிப்பாணையினூடாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாணம் அர்ப்பணிப்பு, கரிசனை, திறமையுடன் கூடிய சேவையினை எதிர்பார்ப்பதாகவும் பெருமைவாய்ந்த பொதுமக்கள் சேவை ஊழியராக தூய்மையான மக்கள் பணியில் திகழவேண்டும் எனவும் வட மாகாண ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் சிறந்த பொதுமக்கள் சேவை இடம்பெறும் மாகாணமாக வட மாகாணத்தை மிளிரவைப்பதற்கு இணையுமாறு ஆளுநர் ஜீவன் தியாகராஜா வட மாகாணத்திலுள்ள பொதுமக்கள் சேவை ஸ்தாபனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.