உண்மையான தொழிலாளர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல.

உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கத் துறையில் பணியாற்றி, உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய தொழிலாளர் தலைவர்கள் மற்றும் அரச சேவையில் ஈடுபட்டு தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக தமது சேவை காலத்தை அர்ப்பணித்த அரச அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அலரி மாளிகையில் வைத்து இவ்வாறு குறிப்பிட்டார்.

கௌரவிப்பு விழாவில், தொழிலாளர் சமூகத்தினருக்காக உன்னத சேவையாற்றிய 09 பிரபல தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இரண்டு அரசாங்க அதிகாரிகள் பிரதமரினால் கௌரவிக்கப்பட்டனர்.

தொழிற்சங்க தலைவர்களான மெரெஞ்ஞகே தயாரத்ன முனிதாச பெர்னாண்டோ (அகில இலங்கை மோட்டார் தொழிற்சங்கம்) லெஸ்லி ஷெல்டன் தேவேந்திர (இலங்கை சுதந்திர சேவை சங்கம்), சுப்பையா சுப்ரமணியம் ராமநாதன் (தோட்டத் தொழிலாளர் சங்கம்), ஹேம அமரதுங்க பியதாச (அகில இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் தொழிலாளர் சங்கம்), ரெங்கசாமி பழனிமுத்து (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்), விஜேவந்த பத்மசிறி அமரசிங்க (இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம்), ரெங்கையா மருதமுத்து கிருஷ்ணசாமி (விவசாய மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம்), ஆறுமுகம் முத்துலிங்கம் (ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம்), துவான் மன்சூர் ரஹீம் ரசிதீன் (இலங்கை தொழிலாளர் சம்மேளனம்) மற்றும் தொழில் அமைச்சின் செயலாளராக சேவையாற்றி தற்போது அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற மஹிந்த மதிஹஹேவ மற்றும் தொழிலாளர் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றி அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற குணசிறி வீரகோன் ஆகியோர் கௌரவ பிரதமரிடம் கௌரவ பாராட்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

உழைக்கும் மக்களின் நலனை மேம்படுத்தி திருப்திகரமான இலங்கை உழைக்கும் மக்கள் சக்தியை உருவாக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தொழில் அமைச்சராக இருந்த போது அவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிரம வாசனா நிதியத்தின் அனுசரணையில் தொழில் அமைச்சும், நிதி அமைச்சும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

மேற்படி விழாவில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

நமது நாடு சுதந்திரம் அடைந்து எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதியுடன் 74 ஆண்டுகளாகின்றன. அந்த சுதந்திரத்தை நாம் சாதாரணமாக பெறவில்லை. அந்த சுதந்திரத்தை பெறுவதற்கு தொழிலாளர் இயக்கம் பெரும் தியாகங்களை செய்தது. அவர்களின் அர்ப்பணிப்பு இல்லாவிட்டால், நமது சுதந்திரம் தாமதமாகியிருக்கும்.

அன்று முதல் நமது நாட்டின் தொழிலாளர் தலைவர்கள் இந்நாட்டில் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். அது மாத்திரமன்றி தொழிற்சங்க இயக்கங்களைக் கட்டியெழுப்பி, நாடு எதிர்நோக்கும் சவால்களை ஒவ்வொன்றாக முறியடிப்பதே அவர்களது எதிர்பார்ப்பாக காணப்பட்டது.

ஏ.ஈ.குணசிங்க, கலாநிதி என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி சில்வா, பீட்டர் கெனமன், கலாநிதி எஸ்.ஏ. விக்கிரமசிங்க, பிலிப் குணவர்தன இவ்வாறு பல தொழிலாளர் தலைவர்களை நாம் நினைவு கூருகின்றோம். இவர்கள் தலைமையிலான தொழிற்சங்க இயக்கம் இன, மத அடிப்படையில் பிரிந்து போராடவில்லை. மேலும், உழைக்கும் மக்கள் இனம், மதம், சாதி அடிப்படையில் பிரிக்கப்படவில்லை.

அனைவரும் ஒரே வர்க்கத்தினர் என்ற அடிப்படையிலேயே பணியாற்றினர். நமது நாட்டில் தொழிற்சங்க இயக்கம் இன்றும் இவ்வாறு வலுப்பெற்று வருவது அன்று போடப்பட்ட அடித்தளத்தின் காரணமாகவே என்று நான் நம்புகிறேன்.

தொழிற்சங்க போராட்டம் என்பது குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து செய்யக்கூடியதொன்றல்ல. அடிவாங்குவதற்கும் நேரிடும். சிறையில் அடைப்படவும் நேரிடும். இன்று இங்குள்ள தொழிலாளர் தலைவர்களுக்கு அது குறித்து புதிதாக கூற வேண்டிய அவசியமில்லை. எமது லெஸ்லி தேவேந்திர அவர்களுக்கு இவ்விடயத்தில் 57 வருட அனுபவம் உள்ளது. ஜே.ஆரின் காலத்தில் தொழிலாளர்களுக்காக போராடச் சென்று 12 வருடங்களாக பொய் வழக்குகள் போடப்பட்டு வேலையை இழந்தது எனக்கு நினைவிருக்கிறது. மேலும் அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதேபோன்ற கசப்பான அனுபவங்களை இங்குள்ள பிற தொழிலாளர் தலைவர்களும் கொண்டுள்ளனர். ஆனால் அந்த விடயங்களை கொண்டு தொழிலாளர் தலைவர்களின் வாய்களை யாராலும் அடைக்க முடியாது.

உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல. வேலையிழந்து சிறை சென்றாலும் எத்தனை இன்னல்கள் வந்தாலும் சகித்துக் கொண்டு போராடுகிறார்கள். இன்று இங்குள்ள தொழிலாளர் தலைவர்கள் உழைக்கும் மக்களுக்கு தங்களால் இயன்றவரை நேர்மையாக சேவையாற்றியிருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை தங்கள் தொழில்முறை சக ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே செலவிட்டுள்ளனர். அவர்களின் போர்க்குணம் இன்றும் இளமையாக உள்ளது. தொழிலாளர்களின் போராட்டக் களத்தில் இன்றும் முன்னணியில் இருப்பவர்கள் இவர்கள்தான் என்பதைப் பார்க்கிறோம். இன்று உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் பல உரிமைகள் மற்றும் சலுகைகள் இந்த தலைவர்களின் அர்ப்பணிப்பிலிருந்து பெறப்பட்ட உரிமைகள் மற்றும் சலுகைகள் என்று புதிதாக கூற வேண்டியதில்லை.

இந்த தலைவர்களில் பலர் உழைக்கும் மக்களின் வியர்வை மற்றும் கண்ணீருக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருந்தாலும், அவர்கள் தங்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதற்காக நேரத்தையும், உழைப்பையும் மட்டுமின்றி செல்வத்தையும் அர்ப்பணிக்கும் தொழிலாளர் தலைவர்கள் இருக்கிறார்கள். உயிரை பணயம் வைத்து இரவு பகலாக போராடிய இவர்கள் அடையும் ஒரே திருப்தி உழைக்கும் மக்களின் தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுப்பது தான். அதனால் தான், நான் தொழில் அமைச்சராக இருந்தபோது, தங்கள் தொழிற்சங்கங்களுக்காக அரை நூற்றாண்டு காலமாகப் போராடும் தொழிலாளர் தலைவர்களை பாராட்டும் திட்டத்தை வகுத்தேன்.

நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தி உழைக்கும் மக்களே. அவர்களுக்கு ஒரு பாதிப்பின் போது தேவைப்படும்போது நிவாரணம் வழங்க அரசு பணத்தை செலவழிப்பதற்கு 1995 ஆம் ஆண்டு வரை முறையொன்று காணப்படவில்லை. நான் தொழில் அமைச்சராக இருந்தபோது, இந்த தொழிலாளர் தலைவர்களில் பலர் என்னுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். நீண்ட நாட்களாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள். எனவே, இவர்களின் துயரமும் வேதனையும் நமக்கு புரியும். இதன் விளைவாக, அந்த தோழர்களின் நலனை மேம்படுத்தவும், அவர்களை திருப்திகரமான தொழிலாளர் சக்தியாக உருவாக்கவும் ‘சிரம வாசனா நிதியத்தை நிறுவ முடிந்தது.

அது மட்டுமின்றி, உழைக்கும் சமுதாயத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தொழிலாளர் தலைவர்களையும், அதிகாரிகளையும் அங்கீகரித்துப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தோம். அப்படித்தான் சிரம வாசனா நிதியத்தை சட்டப்பூர்வ நோக்கமாக்கி, தொழிலாளர் தலைவர்களுக்கு அரச அங்கீகாரத்துடன் இந்த அங்கீகாரம் கிடைக்க வழி வகுத்தது. எனினும், தொழிலாளர்களின் சார்பாக நான் நின்றதால், தொழில் அமைச்சில் இருந்து மீன்பிடி அமைச்சுக்கு மாற நேர்ந்தது. அந்த கடந்த காலம் உங்களுக்கு நினைவிருக்கும்.

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் இருவருடன் மேலும் தொழிலாளர் தலைவர்கள் பத்து பேர் பாராட்டப்பட்டனர். 2008ஆம் ஆண்டு பலானம்போ, அலெவி மௌலானா , பிட்ரோ, விமல் சிறி டி மெல், காரியவசம், ராமையா, செல்லசாமி ஆகிய தொழிலாளர் தலைவர்கள் 10 பேர் இவ்வாறு பாராட்டப்பட்டனர். ஆனால் இதில் தொழிற்சங்க தலைவிகள் இல்லாமையை நான் குறையாக காண்கிறேன்.

சர்வதேச ரீதியில் கவனத்தில் ஈர்க்கப்பட்ட பொன்சினாஹாமி, எமலியா ஆகிய போராட்ட தொழிற்சங்க தலைவிகள் பற்றியும் எமது நாட்டின் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரதானை சுதுவெல்லவில் வசித்த சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்மணியான பொன்சினா ஹாமிகே போராட்டக்குணம் குறித்து 1923ஆம் ஆண்டு இடம்பெற்ற மாபெரும் வேலைநிறுத்த போராட்டம் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் சர்வதேச ரீதியில் விருது பெற்ற தொழிற்சங்க தலைவியாவார். எமலியா 53 ஹர்தாலின் போது பாரிய பங்காற்றியிருந்தார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள், அந்த அமைச்சினதும், நிறுவனங்களினதும் அதிகாரிகள் இணைந்து இவ்வாறான கௌரவிப்பு விழாவொன்றை ஏற்பாடு செய்தமை குறித்து எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டின் சவால்களை வெற்றிகொள்ள எமக்குள்ள பலம் தொழிலாளர் பெருமக்களே என்பதை மீண்டும் நினைவூட்டி, இன்று கௌரவிக்கப்பட்ட தலைவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, காமினி லொகுகே, வாசுதேவ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் டப்ளிவ்.டீ.ஜே.செனெவிரத்ன, தொழில் அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே.மாபா பதிரன, தேசிய லொத்தர் சபையின் தலைவர் லலித் பியும் பெரேரா, சிரம வாசனா நிதியத்தின் பணிப்பாளர்களான லலித் கன்னங்கர, சுதத் பண்டார, ஹிமாலி ஒருகொடவத்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.