உடற்தகுதி இல்லை என்றால் சம்பளம் கிடையாது – இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி.

கிரிக்கெட் விளையாட்டில் உடற்தகுதி என்பது ஒவ்வொரு வீரருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன்படி கிரிக்கெட் அணிகளும் உடல் தகுதிக்கு முக்கியத்துவம் தர தொடங்கிவிட்டன.
கிரிக்கெட்டுக்கு உடல் தகுதி முக்கியம் தான்.ஆனால் இதனைதீவிரமாக கடைபிடிக்க கூடாது என்றும், அப்படி செய்து இருந்தால் லட்சுமணன், சச்சின்,சேவாக் போன்ற வீரர்கள் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்கள் என்றும் ரசிகர்கள் சிலர் யோ யோ உடல்தகுதி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகள் உடல்தகுதி தேர்வை தீவிரப்படுத்தினர். அந்த மாற்றத்திற்கான வெற்றி களத்திலும் தென்பட்டன. தற்போது இந்த பட்டியலில் இணைந்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அந்தநாட்டு வாரியம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், உடல் தகுதிக்கான வரம்புக்குள் கிரிக்கெட் வீரர்கள் இல்லை என்றால் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்று கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு, அந்நாட்டு வீரர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் இலங்கை வீரர்கள் தற்போது உடல் தகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்தும் முயற்சியில் இது ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட் அணி மோசமாக விளையாடி வந்தது. இதனால் அந்த நாட்டு ரசிகர்களும் அதிர்ச்சியில் இருந்தனர். தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் எடுத்த முயற்சியால் டி20 உலகக் கோப்பை போட்டியில் குறிப்பிட தகுந்த வெற்றி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி என்று முன்னேறி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.