`தள்ளிப் போகாதே’ விமர்சனம்: மற்றுமொரு தெலுங்கு இறக்குமதி.

தெலுங்குப் படத்தில் எதற்காக கடல் கடந்து சான் பிரான்சிஸ்கோ போனார்கள் என்பதே புலப்படாத ஒரு சூழலில் இதில் பிரான்ஸை நமக்குச் சுற்றிக் காட்டியிருக்கிறார்கள்.

தன்னைக் காதலித்த நபருக்காக ஒரு பெண் எடுக்கும் முடிவும், அந்த முடிவை அந்தக் காதலன் எப்படிக் பயன்படுத்திக்கொள்கிறான் என்பதைச் சொல்லும் கதைதான் ‘தள்ளிப் போகாதே’. நானி, நிவிதா தாமஸ், ஆதி நடித்த ‘நின்னு கோரி’ என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் வெர்சன்தான் இந்தத் திரைப்படம்.

வழக்கம் போல ஒரு வித்தியாசமான நோக்கத்துக்காக பல்லவிக்கு கார்த்திக் தேவைப்பட, அதற்கு கார்த்திக் உதவி செய்கிறார். கார்த்திக்கிற்கு முதலில் காதல் வருகிறது. பின்பு பல்லவிக்கும் வந்துவிடுகிறது. ஆனாலும் கடமை கண்ணியும் கட்டுப்பாடு என சில சிக்கல்களால் இருவரும் சேராமல் போக, பல்லவியை திருமணம் செய்துகொள்கிறார் அருண். நிம்மதியாய் பிரான்சில் இருக்கும் பல்லவி – அருண் வாழ்க்கைக்குள் பல்லவியே கார்த்திக்கை அழைத்து வர, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதி திரைப்படம்.

கார்த்திக்காக அதர்வா. காதல் எமோஷனல் காட்சிகள் ஓரளவுக்குக் கைகூடி வந்தாலும், படத்தின் இரண்டாம் பாதியில் தேவைப்படும் காமெடிக் காட்சிகளுக்கான கலாய் ஏனோ மிஸ்ஸிங். பல்லவியாக அனுப்பமா. காதல் பூக்கும் தருணங்களுக்கான காட்சிகள்தான் போதாமைகள்… மற்றபடி சிறப்பாகவே நடித்திருக்கிறார். உண்மையில் படத்தில் உணர்வு பூர்வமான பல காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பது ஆடுகளம் நரேன் மட்டும்தான். ஒரிஜினலைவிடவும் நன்கு நடித்திருக்கிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் வந்த ‘நின்னு கோரி’ படத்தினை அப்படியே தமிழில் டப் மன்னிச்சூ ரீமேக் செய்திருக்கிறார்கள். நானி கதாபாத்திரமான உமாவுக்கு பதில் கார்த்திக், மற்றபடி பல்லவி, அருண் எல்லாம் கதாபாத்திர பெயர்கள் கூட மாற்றப்படாமல் அப்படியேதான் வருகின்றன. ஆடுகளம் நரேனின் தமிழ் பேசும் மூத்த மருமகன் காளி வெங்கட்டுக்கு ஏன் ஓம்கார் எனப் பெயர் வைத்தனர் எனத் தெரியவில்லை. ஒருவேளை தெலுங்கில் பிருத்விராஜின் பெயர் லோவாபாபு என்பதால், தமிழிலும் வித்தியாசமாக இருக்க வேண்டுமென இப்படி வைத்திருக்கிறார்களா தெரியவில்லை. இரண்டிலுமே நாயகியின் தோழி வித்யூலேகாதான்.

‘பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’ என்கிற பாரதியின் இலக்கணப்படி, ஆர்.கண்ணன் மீண்டுமொருமுறை ரீமேக் கடலுக்குள் இறங்கியிருப்பதெல்லாம் ஓக்கேதான். ஆனாலும், ‘நின்னு கோரி’யில் ஓரளவுக்கு இருக்கும் காமெடி காட்சிகள் கூட இதில் மிஸ்ஸிங். நண்டு ஜெகன் அவர் பங்குக்கு இரு காட்சிகளில் சில ஒன்லைனர்களை சொல்லிவிட்டு நகர்கிறார். அந்தப் படத்தில் எதற்காக கடல் கடந்து சான் பிரான்சிஸ்கோ போனார்கள் என்பதே புலப்படாத ஒரு சூழலில் இதில் பிரான்ஸை நமக்குச் சுற்றிக் காட்டியிருக்கிறார்கள்.

கோபி சுந்தர்தான் இரு படங்களுக்கும் இசை என்பதால் எந்த எந்த இடங்களில் எந்தெந்த இசை வருமோ, அதை மீண்டும் அப்படியே பதிவு செய்து கொடுத்திருக்கிறார். வசனமும், பாடல்களும் கபிலன் வைரமுத்து.

Leave A Reply

Your email address will not be published.