பாவை பதிப்பகம் ஊடாக வெளிவந்த சமூக நாவல் தேரியாயணம்

அக்டோபர் 2021 ல் பாவை பதிப்பகம் ஊடாக வெளிவந்த சமூக நாவல் தேரியாயணம் .

இதை எழுதியவர் தேரிக்காட்டு இலக்கியவாதி என்று அழைக்கப்படும் ஆறுமுகப் பெருமாள் என்ற கண்ணகுமர விஸ்வரூபன்.

இவர் நாசரேத்தை சேர்ந்தவர். பாளையம்கோட்டையை சேர்ந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் முனைவர் நா. இராமசந்திரன் முன்னுரை வழங்கி உள்ளார்.

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பெற்ற எழுத்தாளர், 300 க்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதி சிற்றிதழ்களில் பிரசுரித்து உள்ளார். நான்கு சிறுகதைத் தொகுப்பை வெளிக் கொண்டு வந்துள்ளார்.

தேரி மண் நிலத்தைத் தேரிக்காடு என்று அழைக்கப்படுகிறது . இந்த தேரிக் காட்டை நம்பிப் பிழைக்க வந்தவர்கள், தனது சக சனங்களின் செம்மண் புழுதிவெளி வாழ்நிலையை நாவல் வடிவத்தில் எழுதியுள்ளார்.
கதை நாசரேத் தூய யோவான் ஆலைய மணியோசையுடன் ஆரம்பிக்கிறது.

கதை அன்றைய சமூக நிலை, கல்வி நிலை, பண்பாட்டுத் தளம், அரசு அதிகாரிகளின் ஊழல் என படம் பிடித்து காட்டுகிறது.

அன்றைய சமூக கட்டமைப்பு, தன் குழந்தைகளுடன் தனி மனுஷியாக வாழ்ந்து காட்டிய சுப்பம்மா, சாதாரண மக்கள் மத்தியில் மனசாட்சியாக, சில போது நீதிபதியாக சிலபோது முதியவராக வழிநடத்தும் சொடலையாண்டி கிழவர் எப்படியும் பணம் ஈட்ட வேண்டும் என்று வாழும்; அரசு அதிகாரிகளின் கையாளான அரைகுறை கல்வியறிவு பெற்ற சடையன், அன்பு காட்டுவதன் மூலம் ஆளுமை செலுத்தும் குழுவின் தலைவி மாரி, பொல்லாதவளான பேச்சி, சுயநலம் கொண்ட கோசலை, கோசலையின் காதலன் மற்றும் சொடலையாண்டி கிழவரின் பேரன் வள்ளி முத்து காக்கையன், ராசபாண்டி,சாமைக் கோழி, செல்லக்கனி போன்ற இளைஞர்கள், என ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் சிறப்பான அம்சங்களுடன் படைத்துள்ளார்.

உச்சி வெயிலிலும், தங்கள் கஞ்சி பாத்திரங்களை தேரி மண்ணுக்குள் வைத்து பருகும் பழையவர்களின் நுட்பம் , அன்றைய நாட்களில் துட்டளவு ஒப்பந்தம், தொகையளவு ஒப்பந்தம், போன்ற கைலஞ்சம் கொடுப்பு என எளிய மக்கள் வாழ்க்கையையும் இயற்கையை வேரறுக்கும் வளமழிப்பு ஒப்பந்தம் போன்றவற்றை பற்றியும் குறிபிட்டுள்ளார். கல்வியின் தேவையும் பெண்கள் படித்திருக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் குறிப்பிடுகிறார்.

இந்த நாவலில் கையாளப் பட்டுள்ள வட்டார மொழிப் பிரோயகம் தனித்துவமான நாவலாக மாற்றுகிறது. மற்றும் கருத்தாக்கம், கதைப்பின்னல், கதையின் அமைப்பு சிறப்பாக உள்ளது. கதையின் பின்புலன் தேரிக்காடு என்பது மிகவும் புதுமையும் எளிய மனிதர்களின் வாழ்வியல் அறிவது சுவாரசியமாகவும் உள்ளது.

குடும்பம் என்ற அமைப்பு எப்படியாக ஒருவர் நலனை இன்னொருவர் மிதித்து ஏற காரணமாக அமைகிறது, குடும்ப உறவின் உச்சம் தாய்மை என்ற நிலை, தன் ஆண் மகன் நலனை நாடி பெண் வாரிசின் வாழ்க்கையை பலி கொடுக்க தயங்காததையும் சுட்டி உள்ளார்.

முடிவு பல கம்யூனிஸ்டு நாவல்கள் என்பது போல் குடும்பம் என்ற கட்டமைப்பில் மாட்டுவதை விட துறவறம் ஏற்க நினைத்த மாரி கதாப்பாத்திரம் சில கேள்விகளையும் இட்டு செல்கிறது.

இது ஒரு விருது பெறுவதற்கான எல்லா தகுதியும் உள்ள நாவல் .

  • J P Josephine Baba

Leave A Reply

Your email address will not be published.