‘மொட்டு’வின் ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது! – பீரிஸ் பதிலடி.

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகவும் இந்த அரசின் பிதாமகனாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே உள்ளார். அவர் தலைமையிலான ஆட்சியை இனி ஒருபோதும் கலைக்கவும் முடியாது; கவிழ்க்கவும் முடியாது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

‘மொட்டு’ அரசு விரைவில் கவிழும் என்று சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிரணியினர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற இந்தக் கட்சியை ஆரம்பிக்கும்போது நாம் பல சவால்களை எதிர்கொண்டோம். எனினும், அந்தச் சவால்களை முறியடித்து தனிப் பெரும் கட்சியாக பொதுஜன முன்னணியை வளர்த்தெடுத்துள்ளோம். இதற்கு மக்களின் அமோக ஆதரவே முக்கிய காரணம். இப்போது எவராலும் அசைக்க முடியாத மாபெரும் கட்சியாக – கூட்டணியாகப் பொதுஜன முன்னணி திகழ்கின்றது.

எதிரணியினர் நினைப்பது போல் பொதுஜன முன்னணிக்குள் முரண்பாடுகள் எதுவும் இல்லை. இங்கு கருத்துச் சுதந்திரத்துக்கு இடமுண்டு. எவரும் கருத்துக்களைப் பகிரங்கமாகத் தெரிவிக்க முழுச் சுதந்திரம் உண்டு.

ஒரு சிலரின் உணர்ச்சி மிகுந்த கருத்துக்களை வைத்துக்கொண்டு எதிரணியினர் அரசியல் நடத்துகின்றனர்.

எதிரணியினரின் இந்தச் சிறுபிள்ளைத்தனமான அரசியல் பரப்புரைக்கு மக்கள் எவரும் செவிசாய்க்கக்கூடாது.

2022ஆம் ஆண்டில் எமது அரசின் வேலைத்திட்டங்களை நாடெங்கும் விஸ்தரிக்கவுள்ளோம். பொருளாதாரப் பாதிப்பிலிருந்து நாம் மீண்டெழுவோம். இந்த நம்பிக்கை இன்னமும் வீண்போகவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.