புத்தாண்டின் முதல் சதம்: நியூசிலாந்து வீரர் கான்வே சாதனை..!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் மவுன்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது.

‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச கேப்டன் மொமினுல் ஹக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் கொடுத்த நெருக்கடியில் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தது. பொறுப்பு கேப்டன் டாம் லாதம் (1 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. தனது கடைசி டெஸ்ட் தொடரில் ஆடும் ராஸ் டெய்லர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

3-வது வரிசையில் இறங்கிய டிவான் கான்வே நிலைத்து நின்று விளையாடி சதம் அடித்தார். புத்தாண்டின் முதல் சர்வதேச சதத்தை அவர் ருசித்தார். 4-வது டெஸ்டில் ஆடும் அவருக்கு இது 2-வது சதமாகும். கான்வே, லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தனது அறிமுக டெஸ்டிலேயே 200 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். இப்போது சொந்த மண்ணிலும் தனது முதல் டெஸ்டிலேயே சதம் விளாசியுள்ளார். இதன் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் அறிமுக இன்னிங்சிலேயே சதம் அடித்த 6-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அவர் தனது பங்குக்கு 122 ரன்கள் (227 பந்து, 16 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் கேட்ச் ஆனார். ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 87.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேச பவுலர்கள் மொத்தம் 20 ஓவர்கள் மெய்டன்களாக வீசினர். ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட் வீழ்த்தினார். 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.