டொலர் பிரச்சனை நாட்டில் தொடர்ச்சியாக மின் வெட்டு ஏற்படும் சூழல்.

மோசமான டொலர் நெருக்கடியின் விளைவாக இலங்கை மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நாட்டில் தொடர்ச்சியாக மின் வெட்டு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபைக்குத் தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்காத காரணத்தால் ஏற்கனவே மின் வெட்டு அமுல் செய்யப்பட்டு வருகிறது.

இலங்கைக்குத் தேவையான மின்சார உற்பத்தியில் சுமார் 9 வீதம் எரிபொருள் மூலம் இயக்கப்படும் மின்பிறப்பாக்கிகளை நம்பியே உள்ளது என இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மின் பிறப்பாக்கிகளுக்குத் தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு டொலர் இல்லை என அவா் கூறினார்.

இதனால் மின் உற்பத்தி, விநியோகத்தில் நிலக்கரி மற்றும் நீர் மின் உற்பத்தித் திட்டங்களையே நம்பியிருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பற்றாக்குறையைக் சமாளிக்க ஒரு மணி நேர சுழற்சி முறையான மின்வெட்டை அமுல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மின்சார சபை அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் மின்வெட்டு எவ்வளவு காலம் நீடிக்கும்? என அவர் கூறவில்லை.

160 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் உள்ள 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மின் பிறப்பாக்கி ஆகியவை சிக்கலில் உள்ளன.

இலங்கையின் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில் ஏற்கனவே பால் மா, சீனி, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என எரிசக்தி அமைச்சு எச்சரித்துள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருட்கள் ஜனவரி மூன்றாவது வாரத்தில் தீர்ந்துவிடும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

நான் இந்த பிரச்சினையை அமைச்சரவைக்கு எடுத்துரைத்துள்ளேன். டொலர் வருவாயில் ஒரு பகுதியை எண்ணெய் மற்றும் மருந்து இறக்குமதிக்காக ஒதுக்குவதை உறுதிப்படுத்துமாறு நான் பலமுறை அமைச்சரவையில் வலியுறுத்தியுள்ளேன் எனவும் கம்மன்பில கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.