அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதி மாற்றம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி, மதுரை அவனியாபுரத்தில் வரும் 14ஆம் தேதியும், 15ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளன. இதேபோல், அலங்காநல்லூரில் 16ஆம் தேதி ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான அன்று தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்ததால், இது குறித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆலோசனை நடத்தினார். அப்போது, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 17ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டதோடு, போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், மாடுகளுக்கான கட்டுப்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவனியாபுரத்தில் வாடிவாசல் அமைத்தல், வீரர்கள் மற்றும் காளைகள் வருவதற்கான பாதைகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விழா நடைபெறும் இடத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அப்போது வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்களை ஜல்லிக்கட்டு போட்டியை காண அனுமதிக்கக் கூடாதென அப்பகுதி மக்களுக்கு காவல்துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில், பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதற்கு பதிலாக, ஜல்லிக்கட்டு போட்டிக்கே தடை விதித்திருக்கலாம் என திரைப்பட நடிகர் வேல ராமமூர்த்தி ஆதங்கம் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டாஸ்மாக், தியேட்டர், வணிக வளாகங்களை மூடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.