சர்க்கரைப் பொங்கல் செய்முறை.

சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்:
1/2 சுண்டு – 130 கிராம் தீட்டிய சேரல் பச்சையரிசி
150 கிராம் சர்க்கரை
1 1/2 மேகரண்டி பயறு
1 மேகரண்டி கடலைப் பருப்பு
1 1/2 மேகரண்டி நெய்
3/4 சுண்டு தேங்காய் அல்லது பசுப்பால்
20 கிராம் ௧ஜூ
20 கிராம் உலர்ந்த திராட்சை
5 ஏலக்காய்

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பைப் போட்டு வறுக்கவும். கடலைப்பருப்பு ஓரளவிற்கு சூடு ஏறி வறுபடும் பொழுது பயற்றம் பருப்பையையும் சேர்த்து மெல்லிய மண்நிறமாக வறுத்தெடுக்கவும்.
1/2 மேகரண்டி நெய்யில் கஜூவை, உலர்திராட்சை இவற்றை வறுத்து எடுத்து வைக்கவும்.
சர்க்கரையுடன் 1 சுண்டு தண்ணீர் சேர்த்து கரையக் காய்ச்சி வடித்து எடுக்கவும்.
வறுத்த பயறு அரிசி இவற்றைக் கலந்து கழுவி ஒரு பாத்திரத்தில் இட்டு 3 சுண்டு தண்ணீர் சேர்த்து அவிக்கவும்.
அரிசி, பயறு,கடலை அவிந்து தண்ணீர் வற்றும் பொழுது 3/4 சுண்டு தேங்காய்ப் பால் காய்ச்சி வடித்த சர்க்கரைத்தண்ணீர் இவற்றைச் சேர்த்து அவியவிடவும். அவிந்த அரிசி நீர்த்தன்மை குறைந்து இறுகி வரும் பொழுது ஏலக்காய் தூள், 1 மேகரண்டி நெய், வறுத்த கஜூ, உலர்திராட்சை இவற்றைப் போட்டு கிளறி பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

Leave A Reply

Your email address will not be published.