கைக்குண்டு விவகாரத்தில் அரசும் பொலிஸும் நாடகம் உண்மைத்தன்மை வெளிவரும் வரை போராடுவோம்.

பொரளை அனைத்துப் பரிசுத்தவான்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டைப் பிறிதொரு தரப்பின் மீது சுமத்திவிட்டு, அதிலிருந்து நழுவிச் செல்ல அரசு மற்றும் பொலிஸாருக்கு இடமளிக்கப்பட மாட்டாது எனப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்தச் சம்பவத்தின் உண்மைத்தன்மை வெளிவரும் வரை இந்த அரசுக்கு எதிராக நாம் போராடுவோம். ஏனென்றால் இந்த அரசும், பொலிஸும் ஆடும் நாடகம் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

அதனால்தான் காலையிலிருந்து குறித்த காட்சிகளைப் பார்வையிடுமாறு எங்களது அருட்தந்தைமார்களிடம் கூறினேன். அப்போது வெடிகுண்டை வேறு எவரும் கொண்டுவந்தனரா என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது. எனினும், தற்போது ‘முனி’ என்ற நபரை இதில் சிக்க வைத்துப் பொலிஸார் கைகழுவ முயற்சித்தது.

மனச்சாட்சி உள்ள எவரொருவராலும் அவ்வாறு செய்வதற்கு இடமளிக்க முடியாது. எனவே, இந்த விடயத்திலிருந்து அரசு, பொலிஸார் நழுவிச் செல்லவிடமாட்டோம். எமக்கு நீதிமன்ற இருக்கின்றது. அதனை நாம் நம்புகின்றோம். எனவே, தற்போதைய பிழைகள் நீதிமன்றில் சரிசெய்யப்பட வேண்டும்.

இவர்தான் இதனைச் செய்துள்ளார் எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மிகவும் விரைவாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். எங்கோ வைத்தியசாலை குண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டை அந்த நபர் மீது சுமத்தப்பட்டது. மக்களை அடித்து, அச்சுறுத்திய நிலைநாட்டப்படும் நீதியை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நாம் நிராகரிப்போம். எனவே, இந்த நபருக்கும், ஏனைய மூவருக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாம் முன்வருவதற்குத் தீர்மானித்துள்ளோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.