நாட்டில் ஏழை, பணக்காரர் இடைவெளியை அதிகப்படுத்திய பெருமை பாஜக அரசையே சேரும்.. ராகுல் காந்தி சாடல்!

நாட்டில் ஏழை, பணக்காரர் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்திய பெருமை பாஜக அரசையே சேரும் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.06 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,43,495 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,68,04,145 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 93.07 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,06,064 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 22,49,335 ஆக உள்ளது, நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 5.69 சதவீதமாக உள்ளது. இதனிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு திறம்பட செயல்படவில்லை என ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு 4 கோடி போ் வறுமை நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அதே சமயம் நாட்டில் உள்ள இரு பெரும் கோடீஸ்வரா்களின் சொத்து மதிப்பு அதீத வளா்ச்சியை அடைந்துள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்குமுன் வெளியான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை கூறியது. இந்த அறிக்கையை பகிர்ந்து மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அதில், கடந்த ஐந்து ஆண்டுகளில், ஏழை 20 சதவீத இந்திய குடும்பங்களின் ஆண்டு குடும்ப வருமானம் சுமார் 53 சதவீதம் குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், 20 சதவீதத்திற்கு கீழ் நடுத்தர மக்களின் குடும்ப வருமானமும் 32 சதவீதம் குறைந்துள்ளது. இந்தச் அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில் உள்ள 20 சதவீத பணக்காரர்களின் வருமானம், 39 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள அவர், கொரோனா தொற்றால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டிருக்கும் அதே நேரம், மோடி அரசின் பொருளாதார பெருந்தொற்றால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், ஏழை – பணக்காரர் இடைவெளியை விரிவுபடுத்திய பெருமை பாஜக அரசையே சேரும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.