வாகரை விக்னேஸ்வரா தேசிய பாடசாலையின் தொழிநுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு!!

மட்டக்களப்பு கல்குடா கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய
தேசிய பாடசாலையின் புதிய தொழிநுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி தலைமையில் இடம்பெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ அவர்களின் சுபீட்சத்தின்பால் நாட்டை கட்டியெழுப்பும் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் புதிய தொழில்நுட்ப கற்கைகள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்க படவேண்டும் எனும் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிற்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்ப பீடம் கட்டிட தொகுதி அமைக்கப்படவுள்ள நிலையில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் முன்மொழிவிற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலைக்கு 53.30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்ப பீடத்திற்கான கட்டிட தொகுதியினை அமைப்பதற்கு கல்வியமைச்சர் டினேஸ் குணவர்த்தன அனுமதியளித்தமைக்கு அமைவாக இன்றைய தினம் குறித்த உயர் தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கலினை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்ட அதிதிகளினால் நாட்டிவைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டிருந்தார்.

மேலும் குறித்த நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக கல்வி அமைச்சின் ஊடகச் செயலாளர் லலித் ரோஹன லியனகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன், வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ.அருணன், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட கோட்டக்கல்லி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மாணவர்களின் பேற்றோர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

மாணவர்களின் கல்வி உயர்வை நோக்காகக் கொண்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் வருடாந்தம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரிட்சையில் 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுக்கு செல்லும்போது அந்த தேர்வில் 3 லட்சம் மாணவர்கள் மாத்திரமே உயர்தர வகுப்புகளுக்கு தெரிவாகின்றனர்.

ஏனையோர் கல்வி நிலையை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்,அரசாங்கத்தினால் பல்வேறு திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதும் அவை சிறந்த கொள்கை திட்டத்தின் கீழ்பின்தங்கிய பிரதேசங்களை விஸ்தரிக்க படவில்லை எதிர்காலத்தில் அனைத்து மாணவரும் ஏதேனும் ஒரு துறையில் அரசாங்கத்தின் உதவியோடு பட்டப்படிப்பு வரை கல்வியை தொடர வழி வகுக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த உயர் தொழில்நுட்ப பீடம் நாடலாவிய ரீதியில் அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக அமைக்கப்படுகின்றது.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வழிகாட்டலுடன் மாணவர் சமுதாயத்தினருக்கு தொழிற்கல்வி மற்றும் உயர் தொழில்நுட்ப ஆர்வமுள்ளவர்களுக்கும், மின்னியல் இலத்திரனியல் பொருளியல் ஆகிய துறைகளில் கற்கைநெறிகளை மேம்படுத்த கல்வி அமைச்சின் உயரிய நோக்கத்துடன் உயர் தொழில்நுட்ப பீட கட்டிட தொகுதி அமைக்கப்பட உள்ளதுடன், இந்தக் கற்கை நெறிகள் ஊடாக எதிர்காலத்தில் மாணவ சமுதாயத்தினருக்கு சர்வதேச ரீதியிலான உயர் தொழில்நுட்ப தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வித் தகைமை உடைய சமுதாயமாக சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.