முடிந்தால் அடுத்த தேர்தலில் வெற்றியடைந்து காட்டுங்கள் சஜித் அணிக்கு மஹிந்த பகிரங்க சவால்

“முடிந்தால் எதிர்க்கட்சியை அடுத்த தேர்தலில் வென்று காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுப் பேரணிகளின் ‘முதலாவது பொதுஜன பேரணி’ நிகழ்வு இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சவால்களுக்கு மத்தியில் நாட்டு மக்களைச் சிந்தித்து ஜனாதிபதியால் பல்வேறு தீர்மானங்களை எடுக்க நேரிட்டது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சிந்தித்துத் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.

இரசாயன உரத்தைத் தடை செய்தோம். மக்களின் ஆரோக்கியத்துக்காக இந்தக் கடுமையான தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்தார். நாங்கள் எடுத்த அனைத்து விடயங்களிலும் எங்களுக்கு எதிராகப் பல தரப்பினர் செயற்பட்டனர்.

சீனாவின் தடுப்பூசிக்கும் தவறான கருத்துக்களை வெளியிட்டார்கள். உலகின் சிறந்த தடுப்பூசி எனக் கூறப்படும் பைசருக்கும் தவறான பிரசாரங்களை முன்னெடுத்தார்கள்.

இந்த நாட்டு விவசாயிகளின் பிரச்சினை என்ன என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஏன் என்றால் நாங்கள் விவசாய குடும்பத்தில் இருந்தே வந்தோம்.

நாங்களே நெல்லுக்கு அதிக கட்டணத்தைச் செலுத்தினோம். விவசாயிகள் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட காலங்களும் இருந்தன. எனினும், நாங்கள் அதனையும் மாற்றியமைத்தோம்.

அடுத்த தேர்தல்கள் குறித்து செயற்பட்டிருந்தால் போரையேனும் வெற்றிகொண்டிருக்க முடியாது. இறக்குமதியைத் தடை செய்தோம். அதனால் எவ்வளவு பெரிய சவாலுக்கு முகம் கொடுக்க நேரிடும் என எங்களுக்குத் தெரியும்.

எனினும், நாங்கள் நாட்டுக்காகவே அனைத்தையும் செய்தோம். இன்று முதல் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை உங்களிடம் எடுத்து வருகின்றோம்.

முடிந்தால் எதிர்க்கட்சியை அடுத்த தேர்தலில் வென்று காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.