கிறிஸ் கேர்ன்ஸுக்கு குடல் புற்றுநோய்.

நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்டுகள், 215 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் கிறிஸ் கேர்ன்ஸ் விளையாடியுள்ளார். 1989-ல் அறிமுகமாகி, 2006 வரை சர்வதேச ஆட்டங்களில் விளையாடினார். மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக அறியப்பட்ட கேர்ன்ஸ், கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றினார். 2010-ல் திருமணம் ஆன பிறகு ஆஸ்திரேலியாவிலுள்ள கேன்பராவில் தனது குடும்பத்தினருடன் பல வருடங்களாக வாழ்ந்துள்ளார்.

கிறிஸ் கேர்ன்ஸுக்குக் கடந்த வருட ஆகஸ்ட் மாதம் கான்பெர்ராவில் இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதன்பிறகு அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மற்றொரு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. பிறகு, கிறிஸ் கேர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் செயலிழந்து விட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்தார்.

அறுவைச் சிகிச்சையின்போது கேர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டன. முதுகுத்தண்டில் ஸ்டிரோக் ஏற்பட்டதால் அவருடைய கால்கள் செயலிழந்து விட்டன. தற்போது கான்பெர்ராவில் உள்ள மருத்துவமனையில் கேர்ன்ஸுக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது என கேர்ன்ஸின் வழக்கறிஞர் ஆரோன் லாயிட், கடந்த ஆகஸ்ட் மாதம் அறிக்கை வெளியிட்டார்.

கான்பெர்ரா மருத்துவமனையில் 141 நாள்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, கடந்த வாரம் வீட்டுக்குத் திரும்பினார் 51 வயது கேர்ன்ஸ். அப்போது வழக்கமான பரிசோதனையில் தனக்குக் குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் அறிந்ததாக கிறிஸ் கேர்ன்ஸ் தற்போது இன்ஸ்டகிராமில் தகவல் அளித்துள்ளார். இப்போது அடுத்த போராட்டம் காத்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்களும், சக வீரர்களும் பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.