ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்கள் மிகை வரி சட்ட மூலத்தில் இருந்து நீக்கம்…..

நிறுவனங்களின் பணியாளர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்கள் மிகை வரி சட்ட மூலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு நிதியங்கள் உட்பட 11 நிதியங்கள் இந்த சட்டமூலத்திற்குள் உள்ளடங்காது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பான உறுதியான தகவலை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

மிகை வரி சட்ட மூலம் தொடர்பில் அமைச்சரவை சந்திப்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ இது தொடர்பாக தெளிவுபடுத்தினார். 5 சதவீத மிகை வரியில் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உட்பட 11 நிதியங்கள் உள்ளடங்காது. 2020 ஆம் 2021 ஆம் ஆண்டுகளுக்காக இரண்டாயிரம் பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரியை அறவிடக் கூடிய வருமானம் ஈட்டும் நபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் ஒரு தடவை மாத்திரம் அறவிடும் 25 சதவீத மிகை வரியை அறவிடுவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் பத்தாயிரம் கோடி ரூபா வருமானம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உட்பட 11 நிதியங்களை இதில் சேர்ப்பதற்கு ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மிகை வரி சட்டமூலம் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் பல நிறுவன பணியாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.