உக்ரைனுக்கு படைகளை அனுப்ப மாட்டோம்..! – ஜோ பைடன் அறிவிப்பு.

உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப்பகுதி மக்களைப் பாதுகாக்க ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன் என்று கூறிய ரஷிய அதிபர் புதின் அதிரடியாக நேற்று போர் பிரகடனம் செய்தார். அத்துடன், “வெளியில் இருந்து இந்தப் போரில் எந்த நாடாவது தலையிட நினைத்தால், அந்த நாடு வரலாற்றில் சந்தித்ததைவிட பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் ரஷிய படைகள், உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை தொடங்கின. இதன்படி கீவ், கார்கிவ், டினிப்ரோ நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. பல நகரங்களில் ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டன. இவற்றில் விமானப்படையின் 11 விமான நிலையங்கள், 3 கட்டளை சாவடிகள், கடற்படைகளுக்கான அடிப்படை மையம், வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் 18 ரேடார் நிலையங்கள் அடங்கும். மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை. நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் உக்ரைனுக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், “உக்ரைனுக்கு படைகளை அனுப்ப மாட்டோம். அதேநேரம் நோட்டோ பிராந்தியங்களின் ஒவ்வொரு அங்குலத்தையும் அமெரிக்க படைகள் பாதுகாக்கும்.

ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத்தடை மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ரஷ்யாவின் உயர்தொழில்நுட்ப இறக்குமதிகளில் பாதிக்கும். ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் ஒரு ஆக்கிரமிப்பாளர். புதின் தான் இந்த போரைத் தேர்ந்தெடுத்தார், அதற்காக இப்போது அவரும் அவரது நாடும் கடுமையான விளைவுகளை சந்திக்கும். விடிபி உட்பட மேலும் 4 ரஷ்ய வங்கிகள் மீதான தடை விதிக்கப்படும்.

ரஷ்யாவின் சைபர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம். ரஷ்ய அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை. அவர் முன்னாள் சோவியத் யூனியனை மீண்டும் நிறுவ விரும்புகிறார், அவரது லட்சியம் உலகின் பிற பகுதிகள் உள்ள இடத்திற்கு முற்றிலும் எதிரானது என்று நான் நினைக்கிறேன்.

அவர் என்ன மிரட்டுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை, (ரஷ்ய அதிபர் புதின் அணுசக்தி தாக்குதலை அச்சுறுத்துகிறாரா) அவர் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியும்..” என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.