உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டம்..! நூற்றுக்கணக்கானோர் கைது.

உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப்பகுதி மக்களைப் பாதுகாக்க ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன் என்று கூறிய ரஷிய அதிபர் புதின் அதிரடியாக நேற்று போர் பிரகடனம் செய்தார். மேலும், “வெளியில் இருந்து இந்தப் போரில் எந்த நாடாவது தலையிட நினைத்தால், அந்த நாடு வரலாற்றில் சந்தித்ததைவிட பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் ரஷிய படைகள், உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை தொடங்கின. இதன்படி கீவ், கார்கிவ், டினிப்ரோ நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. பல நகரங்களில் ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டன. இவற்றில் விமானப்படையின் 11 விமான நிலையங்கள், 3 கட்டளை சாவடிகள், கடற்படைகளுக்கான அடிப்படை மையம், வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் 18 ரேடார் நிலையங்கள் அடங்கும். மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை.

இந்நிலையில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஈடுபட்ட ஏறக்குறைய 1,400 ஆர்ப்பாட்டக்காரர்களை ரஷ்ய போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 51 நகரங்களில் 1,391 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், எதிர்க்கட்சி பேரணிகளில் கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சுமார் 340 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைன் மீது புதின் தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து, பல ரஷ்ய ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் மக்கள் வீதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, மாஸ்கோவிற்கு வெளியே உள்ள ஒரு தண்டனைக் காலனியில் இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.